வைராக்கியங்களைப் பற்றி பேசலாம்

பிரசவ வைராக்கியம்’, ‘மயான வைராக்கியம்’ பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பிரசவ வலியால் துடிக்கும் பெண், ‘இனிமேல் கணவனை கிட்டவே சேர்க்கக்கூடாது’ என்று நினைப்பாளாம். குழந்தையின் முகம் பார்த்து கொஞ்சத் தொடங்கியதும் அந்த வைராக்கியம் காணாமல் போய்விடும். இறுதி ஊர்வலத்தில் நடந்து செல்லும்போதும், மயானத்தில் நிற்கும் போதும் ‘ அடச் சே! இவ்வளவுதான் வாழ்க்கை. இதற்கா இப்படி அடித்துக் கொள்கிறோம்’ என்று ரொம்ப நல்லவனாகிட நினைக்கும் மனசு, வீட்டுக்கு வந்து தலையில் தண்ணீர் ஊற்றி குளிக்கும் போதே கரைந்து காணாமல் போகிறது. வாழ்வின் நிலையாமையைச் சொல்கிற, இந்த வைராக்கியங்களைப் பற்றி பேசலாம். ஆனால் இரண்டையும் கண்ணெதிரே காட்சிப் பொருளாக்கி வைத்திருந்தால் பார்த்து, பரவசப்படமுடியுமா? அல்லது சந்திரபாபுவைப்போல , ‘பிறக்கும் போதும் அழுகின்றான்…இறக்கும் போதும் அழுகின்றான்’ என்று பாட்டு பாடமுடியுமா?. உயிரற்ற உடலை அறுத்து, கட்டி, அடுக்கி வைத்திருக்கும் சவக்கிடங்கு, தேவையான வசதிகளோ, முறையான பராமரிப்போ இன்றி, கதவு ,ஜன்னல்கள் கூட சரியில்லாமல் இருக்கிறது. அதற்குப் பக்கத்திலேயே புதிய உயிர்களைப் பெற்றெடுக்கும் மகப்பேறு அறை. இதனை அப்படியே உங்கள் மனசுக்குள் படமாக ஓடவிடுங்கள். ஒரு கணம் உடம்பு சிலிர்க்கிறதல்லவா? இப்படித்தான் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் பிரசவத்திற்குப் போகிறவர்கள் அதிர்ந்து போகிறார்கள். இங்கே வருகிற பெண்கள் பிரசவ வலிக்கு பயப்படுகிறார்களோ, இல்லையோ அருகிலிருக்கும் பிணவறையை எண்ணி, எண்ணி நடுங்குகிறார்கள். பகலாவது பரவாயில்லை. இரவில் கொடுமை. மகப்பேறு காணும் பெண்ணுக்கு , ஏற்கனவே இருக்கும் உளவியல் பிரச்சினைகளோடு இதுவும் சேர்ந்து கொண்டால் , எந்தளவுக்கு மன அழுத்தம் ஏற்படும்? பரந்து விரிந்து கிடக்கிற வளாகத்தில் பிணவறையை எங்காவது ஒதுக்குப்புறத்தில் வைக்க வேண்டும் என்பதுகூட தெரியாதவர்கள், எந்த லட்சணத்தில் மருத்துவமனையை நிர்வகிப்பார்கள்?
சுதந்திரம் வாங்கி இரண்டாண்டுகளுக்குப்பிறகு தொடங்கப்பட்ட இம்மருத்துவமனை, 65 ஆண்டுகளில் எத்தனை பெரிய வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும்? அதிலும் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி என நான்கு தாலுக்கா மக்களுக்கான ஒரே பெரிய மருத்துவமனை எப்படி இருக்க வேண்டும்? அடிக்கடி மோட்டார் பழுதாகி, நோயாளிகளுக்கு குடிநீர் கூட ஒழுங்காக கிடைக்காத நிலையில்தான் கிடக்கிறது. தப்பித்தவறி இங்கிருக்கும் கழிவறைகளில் கால் வைத்துவிட்டால், புதுப்புது நோய்கள் உடலில் புகுந்துவிடும். அரசு மருத்துவமனைகளே அப்படித்தான் என்றாலும், இங்கே அனைத்தையும் தாண்டியிருக்கிறது அலங்கோலம் . நம்முடைய மக்களும் அவர்களின் பங்களிப்பை செய்து, குப்பை கூளத்தைக் குவித்து மருத்துவமனை வளாகத்தை நரக பூமியாக்கி வைத்திருக்கிறார்கள்.
மருத்துவமனை வெளிக்கட்டமைப்புதான் இப்படி இருக்கிறதென்றால், நவீன வசதிகளோ, போதுமான மருத்துவர்களோ இல்லாமல் ஏழை- எளிய மக்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. நாள்தோறும் 1000 பேர் வரை புறநோயாளிகள் வருகிறார்கள். ஏறத்தாழ 250 பேர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகிறார்கள். ஆனால் பகல் 12 மணிக்கு மேல் விபத்தினாலோ, அவசர சிகிச்சைகளுக்காகவோ போனால் ஒன்றிரண்டு இளநிலை மருத்துவர்கள் மட்டுந்தான் பணியிலிருக்கிறார்கள். அவர்களும் அவசர சிகிச்சைக்கு வருபவர்களை தஞ்சாவூர், திருவாரூர் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியைத்தான் செய்ய முடிகிறது. அடித்துப்பிடித்து அங்கே போய் சேர்வதற்குள், ஒரேயடியாக உலகத்தை விட்டே போய்ச் சேர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே தான் இருக்கிறது.
இதற்காக மருத்துவர்களை மட்டும் குறை சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. மாவட்டத் தலைநகருக்கு நிகரான பகுதியில் உள்ள மயிலாடுதுறை மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற வசதிகள் கட்டாயம் வேண்டுமல்லவா? தேவையான ரத்தத்தைப் பத்திரப்படுத்தி வைக்க பெரிய ரத்த வங்கி வேண்டாமா? முக்கியமான ரத்தப் பரிசோதனைகளின்போது, நாகப்பட்டினத்திற்கு மாதிரிகளை அனுப்பிவிட்டு, முடிவுக்கு நாட்கணக்கில் காத்துகிடப்பது எத்தனை கொடுமை? அதற்கேற்ற தரமான ரத்த பரிசோதனை நிலையம் இங்கே இருக்க வேண்டும்தானே? பெண் பணியாளர்கள் இல்லாததால், பெண் நோயாளிகளுக்கு ஈ.ஜி.சி எடுக்கப்படுவதில்லை என்பது சரியா? 3 ஆண்டுகளுக்கு மேலாக காது- மூக்கு – தொண்டை சிகிச்சைக்கு ஒரு மருத்துவர் கூட இங்கே இல்லையே! கண்ணுக்கும் , பல்லுக்கும் தினசரி கவனிக்க மருத்துவர்கள் கிடையாதே! அத்தகைய பாதிப்புக்கு ஆளாகும் நலிவுற்ற மக்கள் எங்கே போவார்கள்? இதய நோய் போன்ற அவசர சிகிச்சைகளுக்கு வருபவர்களுக்காக எப்போதும் ஒரு எம்.டி. டாக்டர் பணியிலிருப்பது அவசியமல்லவா? சமீப ஆண்டுகளாக, மயிலாடுதுறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இதய நோய்களாக உயிரிழப்போரின் அதிகமாவதற்கு இதுவும் ஒரு காரணமல்லவா? இதே போன்று, பலதரப்பட்ட மக்கள் வந்துபோகும் மருத்துவமனைக்கு 24 மணிநேரமும் காவல் உதவிமையம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
நிதி ஒதுக்காமலோ, மருத்துவமனைக்குள் கட்டமைப்பு பணிகள் நடக்காமலோ இல்லை. ஆனால், அதெல்லாம் போதுமானதா? யானைப்பசிக்கு சோளப்பொரியா? 4 தாலுக்காக்களின் தலைமையிடத்தில் ஆரம்ப சுகாதரம் நிலையம் போன்றா ஒரு மருத்துவமனை செயல்படுவது? பேருக்கு ஆஸ்பத்திரியா? உண்மையிலேயே பெரிய ஆஸ்பத்திரியா? முதலில் நான் சொன்ன வைராக்கியங்களைப்போல இந்தக் கேள்விகளும் மறைந்து, மறந்து போகலாமா?
-யுத்தம் தொடரும்…

மயிலாடுதுறை = சிங்கப்பூர்

அண்ணாந்து பார்த்தால் கழுத்து சுளுக்கி கொள்ளும் கட்டிடங்களும் நிற்கின்றன. அதற்குப் பக்கத்திலேயே மரங்கள் பச்சை பசேலென்று கண்களுக்கு குளிர்ச்சியை அள்ளி வீசுகின்றன. மக்கள் நெருக்கடி அதிகமிருந்தாலும் குப்பை, கூளம் எதுவுமின்றி ஊரே பளிச்சென்று இருக்கிறது. ஊருக்கே ஒரே ஓர் ஆறுதான். இருந்தாலும் ஒரு சொட்டு மழைநீர் கூட வீணாவதில்லை. அத்தனை கச்சிதமான மழைநீர் சேகரிப்புத் திட்டமும், வடிகால் வசதியும் இருக்கிறது . மதம்,சாதிகளைவிட பெரிய பிரிவினை சக்திகளான இனம், மொழி இரண்டிலும் வேறுபட்டவர்கள் நிரம்பியிருக்கிறார்கள். அப்படியிருந்தும் எல்லோரின் குரலும் ஒன்றாகவே ஒலிக்கிறது. அவர்கள் ஒன்றாகவே நடத்தப்படுகிறார்கள். எல்லாவற்றிலும் பளிச்சென தெரியும் ஒழுங்கு. அதே நேரத்தில், உற்சாகத்திற்கும் மகிழ்ச்சிக்கும் குறைவில்லை. நினைத்தபடி எல்லாம் நடக்காமல் எச்சில் துப்புவதில் கூட விதிமுறைப்படியே மக்களும் நடந்துகொள்கிறார்கள். நாம் கதைகளில் படித்திருக்கும் சொர்க்கத்தை கிட்டத்தட்ட கண்ணெதிரே காட்டும் சிங்கப்பூர் பற்றி இப்படி பக்கம், பக்கமாக பேசிக்கொண்டே போகலாம்.
சொர்க்கத்தைப் படைத்த கடவுள், அளவெடுத்து வைத்ததைப் போல சிங்கப்பூரையும் ரெடிமேடாக உருவாக்கி விட்டானா என்ன? எப்படி அங்கே மட்டும் எல்லாம் ஒழுங்காக இருக்கிறது? இத்தனைக்கும் அது ராணுவ தேசமும் இல்லை. குடியரசு நாடுதான். பிறகெப்படி இதெல்லாம் சாத்தியமானது? தண்ணீருக்கும் உணவுக்கும் கூட மலேசியா போன்ற மற்ற நாடுகளைச் சார்ந்து இருக்குமளவுக்கு இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட சிங்கப்பூர், உலகின் வளமான நாடுகளின் பட்டியலில் எப்படி 4வது இடத்தைப் பிடிக்க முடிந்தது? ஆக்கப்பூர்வமான சிந்தனைகொண்ட மக்களும், அவர்களை அதி அற்புதமாக வழிநடத்திய ஒரு தலைவனும் தான் இன்றைய சிங்கப்பூரின் அடித்தளம்.
இனச்சண்டையும், மதச்சண்டையும் தலைவிரித்தாடி மனித ரத்தம் குடித்து கொண்டிருந்த காலம் அங்கேயும் உண்டு. குடிசைகளும் குடலைப்புரட்டும் சாக்கடையுமாக கிடந்த பகுதிகளும் அதிகம். கம்யூனிசத்தின் ஆதிக்கத்தால் தீவிரவாத முத்திரை வேறு. சிங்கப்பூரை, தன் நாட்டின் ஒரு மாநிலமாக கூட ஏற்றுக்கொள்ளாமல் மலேசியா உதாசீனப்படுத்திய சூழலில் உருவான தேசத்தை மறு நிர்மாணத்திற்கு வித்திட்ட சிற்பி லீ குவான் யூ என்ற தலைவர்தான்! அதன்பிறகு அங்கே நடந்த எல்லா மாற்றங்களுக்கும் அவரோடு சேர்ந்து உழைத்த, ஒத்துழைத்தவர்கள் அந்த மண்ணின் மைந்தர்களே!
அத்தகைய மாற்றம், ஏற்றம் நம்முடைய ஊருக்கும் வரவேண்டும் என நினைப்பே எவ்வளவு இனிக்கிறது? நடந்துவிட்டால் எப்படி இருக்கும்? மயிலாடுதுறை சிங்கப்பூர் ஆக முடியுமா? என்றால் , ஏன் முடியாது என்பதே என் பதில். அதற்கான நெருப்புப் பொறி நம் ஒவ்வொருவருக்குள்ளும் விழ வேண்டும். அது பெருஞ்சுடராக எழுந்திட வேண்டும். தேங்கிக் கிடக்கும் மாயூரம், தேசமே திரும்பி பார்க்கும் வகையில் மாற வேண்டும் என்ற ஆசை, கனவு மயிலாடுதுறை நகரில் மட்டுமல்லாது, சுற்றி இருக்கும் கிராமத்து மக்களிடமும் வேர் விட வேண்டும். நாள், கிழமை, நல்லது, கெட்டது என எல்லாவற்றிலும் காலங்காலமாக நம்மோடு ஒன்றிப் போன இந்த ஊர் பொலிவும் வலிவும் பெற்றால்தான் நம் வாழ்வும் பொலிவடையும் என்ற எண்ணம் அவர்களுக்கும் வரவேண்டும். உள்கட்டமைப்பில், பொருளாதாரத்தில் மயிலாடுதுறை வளர்ந்துவிட்டால், அதன் பலன் சுற்றியிருக்கும் அத்தனை கிராமங்களிலும் எதிரொலிக்கும் என்பதை அவர்கள் ஐயமின்றி உணர வேண்டும்.
அதோடு சிந்தனை ஒற்றுமையும் நமக்கு முக்கியம். நம்முடைய கோரிக்கைகள் ஒவ்வொன்றுக்காகவும் தனித்தனியாக குரல் கொடுக்கிறோம். போராட்டங்களை முன்னெடுக்கிறோம். மனு கொடுக்கிறோம். ஆனால் இவையெல்லாம் வெகு மக்கள் இயக்கமாக மாறினால், மாற்றங்களைத் தேடி நாம் போக வேண்டியதில்லை. நம்மைத்தேடி மாற்றங்கள் வருமல்லவா? அண்மையில் மயிலாடுதுறை, குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் வணிகர் சங்கத்தினர் முன்னெடுத்த கடையடைப்புப் போராட்டம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படி மாற்றத்திற்கான தேவையை ஒவ்வொருவருக்கும் புரியவைக்க அரசியல் , அமைப்புகள், லாபம், நட்டம், விருப்பு, வெறுப்பு எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு ‘ஊருக்கு நல்லது செய்வோம்’ என்ற முழக்கத்தோடு நாம் ஒன்று சேர வேண்டியது காலத்தின் கட்டாயம்.
அதுமட்டுமா! ‘இந்த ஊர் மாறியே தீர வேண்டும்’ என்ற எண்ணம் மயிலாடுதுறையிலும் அதைச்சுற்றியும் உள்ள மக்களிடம் உருவானால், கடந்த இதழில் நான் ஏக்கத்துடன் எழுதியிருந்த ஒரு செயல்திறன்மிக்கத் தலைவர் அவர்களிடமிருந்தே உருவாகிவிடுவார். பிறகென்ன? மக்கள் மனதிலும் ஊரை மாற்றும் எண்ணம் உதித்து, அதற்கு ஒரு தலைவனும் கிடைத்துவிட்டால், மயிலாடுதுறை சிங்கப்பூர் ஆகாதா என்ன? பழங்காவிரியில் படகு போக்குவரத்து நடக்காதா என்ன? அதென்ன மயிலாடுதுறையை மட்டும் சொல்கிறீர்கள், நம்முடைய மாநிலம், நாடு அப்படி மாற வேண்டாமா என்று நீங்கள் கேட்டால், முதலில் நம்மிலிருந்து, நம்முடைய ஊரிலிருந்து தொடங்குவோம். எல்லா மாற்றங்களுக்கும் முதல் புள்ளி என ஒன்று இருக்குமே, அது நாமாக இருப்போம். என்ன சரிதானே?