கருவாடு – மீன் கை கொடுக்குமா?

கருவாடு – மீன் கை கொடுக்குமா?

‘‘30 ஆண்டுகள் தொடர்ந்து வாழ்ந்தவனும் இல்லை; அதே போல 30 ஆண்டுகள் தொடர்ந்து வீழ்ந்து கிடந்தவனும் இல்லை’’ என்று ஒரு மொழி சொல்வார்கள். இதனைப் பொய்யாக்கி, தலைமுறைகளைத் தாண்டி செழிப்போடு வாழ்கிறவர்கள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். நிறுவனங்கள், தனி மனிதர்களுக்கு மட்டுமின்றி, சில ஊர்களுக்கும் இது பொருந்தும். எப்போதும் வளம் கொழிக்கும் பகுதியாக, காலத்திற்கேற்ப மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு சில ஊர்கள் செழித்து நிற்பது எப்படி என யோசித்தால் ஓர் உண்மை புலப்படும். வியாபாரத்திற்கான வாய்ப்புகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு தன்னுடைய அடையாளமாக அதனை மாற்றிக் கொண்டதே அதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பக்கத்தில் இருக்கும் கும்பகோணம் அதற்கு பளீர் உதாரணம். மயிலாடுதுறையைப்போலவே விவசாய கிராமங்கள் சுற்றி இருந்தாலும், பட்டு, பாத்திரங்கள், வெற்றிலை, பித்தளை,காய்கறி மார்க்கெட் என கும்பகோணம் என்றதும் நினைவுக்கு வருபவை ஏராளம். இதனால் அந்த ஊரும், அதன் பொருளாதாரமும் எப்போதும் ஏறுமுகத்தில் இருக்கின்றன. அதற்கேற்ப அடிப்படை கட்டமைப்பும் மேம்பட்டிருக்கிறது.

‘‘அது சரி… அங்கே வணிகத்திற்கான வாய்ப்புகள் இருந்தன. நம்முடைய ஊரில் என்ன இருந்தது?’’ – என்று நீங்கள் கேட்பது என் காதுகளில் விழுகிறது. இருந்ததை நாம் வளர்த்தெடுத்தோமா? கால வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட கூறைப்பட்டு புடவைகளை விட்டுவிடலாம். 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த மாயூரம் சந்தையை மாற்றாந்தாய் பிள்ளையைப் போல விட்டுவிட்டோமே! சித்தர்க்காட்டில் அமைந்த சந்தை தான் இந்தப் பக்கத்திலேயே மிகப்பெரிய மளிகை மொத்த விற்பனை சந்தையாக திகழ்ந்தது. கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களை ரயிலில் கொண்டுவந்து இருப்பு வைக்கும் கிட்டங்கிகளின் எச்சம் இன்னும் ரயிலடி பகுதியில் இருப்பதை காணலாம். வெளியூர்களில் இருந்து பொருட்களை வாங்குவதற்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கான மாட்டு வண்டிகளில் படையெடுத்து, ஊரே திக்குமுக்காடி போன காலமெல்லாம் உண்டு.

மளிகைப் பொருட்களைவிட, மணமணக்கும் கருவாடு மாயூரம் சந்தையின் தனி அடையாளமாகவே இருந்தது. பக்கத்திலிருக்கும் பூம்புகார், பொறையாறு,தரங்கம்பாடி போன்ற ஊர்களில் இருந்து மட்டுமின்றி,புதுக்கோட்டை, ராமநாதபுரம் மீனவர்களின் கருவாடுகளும் மாயூரம் சந்தையை அலங்கரிக்கும். இப்போது எல்லாமே சுருங்கி விட்டது. அடிப்படை வசதிகள் கூட இல்லாமல், அரைகுறை கருவாட்டுச் சந்தையாகி அநாதரவாக நிற்கிறது. பெயருக்கு கூட ஒரு கழிப்பறையோ, வெளியூர் வியாபாரிகள் வந்து தங்கி செல்வதற்கான இடங்களோ இங்கே கிடையாது. இதையெல்லாம் கேட்கவும் நாதியில்லை. சிந்திக்கவும் யாருமில்லை. ‘‘இப்படி கிடப்பதால், மாயூரத்திற்கு வந்து வியாபாரம் செய்வதற்கே வெறுப்பாக இருக்கிறது’’ என மனம் வெதும்பிய தொண்டி நகரத்து மீனவர் ஒருவர் நம்மிடம் சொன்ன வார்த்தைகளில், இந்த ஊர் வீணாய்ப் போனதற்கான காரணம் பட்டவர்த்தனமாக தெரிந்தது.
கருவாடு போலவே லட்சக்கணக்கான ரூபாய் புழங்கும் வாய்ப்புள்ள இன்னொரு தொழில் மீன் வியாபாரம். ஆனால் மயிலாடுதுறை மீன் மார்க்கெட் இருக்கும் கோலம், கொடூரமானது. 1962ல் காமராஜர் ஆட்சியில் திறக்கப்பட்ட மீன் மார்க்கெட்டை சீரமைக்க சில ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. அதன்பிறகும் ஒன்றுமே நடக்கவில்லை. வழக்கம்போல இதைப்பற்றி கேட்கவும் ஆளில்லை. ‘தோண்டி எடுத்தால்’ முறைகேடு மற்றும் நிர்வாகச்சீர்கேட்டின் துர்நாற்றம் குடலைப் புரட்டுகிறது.

பூம்புகார் போன்ற கடலோர பகுதிகளுக்கு அருகில் இருக்கும் பெரிய நகரம் மயிலாடுதுறைதான். இதை வைத்துக்கொண்டே கடல் உணவுகளின் மிகப்பெரிய சந்தையாக நம்முடைய ஊரை மாற்றலாம் அல்லவா? பக்கத்து ஊர்களுக்கு, மாநிலங்களுக்கு ஏன் வெளிநாடுகளுக்குக் கூட ஏற்றுமதி செய்யலாமே? இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகும். ஊரின் பொருளாதாரத்திற்கு பக்கப் பலமாக இருக்கும்.
கருவாடு , மீன்களைப் போன்று காய்கறிச் சந்தைக்கும் கணிசமான வியாபார வாய்ப்பு இருக்கிறது. கீரைகளில் தொடங்கி கிழங்குகள் வரை மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதியில் விளையும் காய்கறிகள் எக்கச்சக்கம். அவற்றை விற்பதற்கென உருவாக்கப்பட்ட உழவர் சந்தை, பாழாய்ப்போன அரசியலால் சமூக விரோதிகளின் கூடாரமாகி இருக்கிறது. உழவர் சந்தை போகட்டும். திரு.வி.க. மார்க்கெட்டையாவது பெரிய அளவிலான காய்கறிச் சந்தையாக மாற்றி அமைக்கலாம். ஏனெனில் இங்கே விற்கப்படும் காய்கறிகளில் ஏறத்தாழ 20% சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளைவிக்கப்பட்டவைதான். காய்கறி சந்தையை விரிவுப்படுத்தி, அதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தால், பெரிய வணிக மையமாக மாறுவதோடு மயிலாடுதுறை பகுதி விவசாயிகளும் உற்சாகமடைவார்கள். காய்கறி உற்பத்தி அளவும் அதிகரிக்கும்.

வணிக வாய்ப்புகளாக கண் முன்னே இருக்கும் கருவாடு – மீன் – காய்கறிகளைக் கையில் எடுத்து வளம் பெறப் போகிறோமா? இல்லை…வாழ்ந்து கெட்டவரின் வீட்டைப் போல கிடக்கும் சந்தைகளையும் ஊரையும் அப்படியே விட்டு விடப்போகிறோமா?

யுத்தம் தொடரும்….

பாரம்பரிய குட்டிச்சுவர்கள்!

பாரம்பரிய குட்டிச்சுவர்கள்!

100, 200 ஆண்டுகள் தாண்டிய கட்டடங்களைப் பாதுகாத்து பராமரிக்கும் பழக்கம் மேலை நாடுகளில் உண்டு. அதிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் அவற்றையெல்லாம் பொக்கிசம் போல அசலழியாமல் வைத்திருப்பார்கள். ஆதியில் பூசப்பட்ட வண்ணத்தில் கூட கை வைக்காத கட்டடங்கள் ஏராளம்.வளர்ச்சியில் எங்கோ போய்விட்ட லண்டன், பாரீஸ் போன்ற பெருநகரங்களில் இருக்கிற புராதன கட்டடங்கள் கலையின் வடிவங்களாக, காலப்பெட்டகமாக நிற்கும் அழகைக் காண கண்கோடி வேண்டும். சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை, டெல்லி செங்கோட்டை போன்றவையும் இப்படிப்பட்டவைதான். வித்தியாசம் என்னவென்றால், அவர்கள் பாரம்பரியத்திற்காக வைத்திருக்கிறார்கள்; நாம் வேறு வழியின்றி (அல்லது) வளர்ச்சி பற்றி சிந்திக்காமல், அவற்றை அலுவல் பயன்பாட்டு இடங்களாக்கி இருக்கிறோம். கட்டடங்கள் போகட்டும். தமிழகத்தில் ஒரு நகரம், ‘பழமை மாறாமலேயே’ கிடக்கிறதே?!. ‘அன்றைக்குப் பார்த்ததைப் போல’ – அப்படியே இருக்கும் நம்முடைய மயிலாடுதுறையில் பழைமையைப் பறைசாற்றிய படி இருக்கும் பாழடைந்த கட்டடங்கள் சொல்லும் கதைகள் கொஞ்ச, நஞ்சமல்ல!

1951 ஜூலை 3 ஆம் தேதி, பழைய சென்னை மாகாண முதன்மந்திரி குமாரசாமி ராஜா திறந்து வைத்த அடையாளத்தைச் சுமந்திருக்கும் நகராட்சி பிரசவ ஆஸ்பத்திரி கட்டடத்தின் வயதை நீங்களே கணக்கு போட்டு பாருங்கள். இதைப்போலவே ஈனசுரத்தில் முனகிக்கொண்டு, நம்முடைய கையாலாகத்தனத்தைக் கடைவிரித்து காண்பிக்கும் கட்டடங்கள் மாயூரத்தில் நிறைய இருக்கின்றன. முற்றிலுமாக உருக்குலைந்து போய், ‘சரக்கு’ அடிப்பதற்கும் இன்ன பிற சமூக விரோத செயல்களுக்குமான இடங்களாக மாறிவிட்ட நகராட்சி மற்றும் அரசு இடங்களைக் கணக்கெடுத்தால், கோபம் கொப்பளிக்கிறது. ‘அடப்பாவிகளா…! இவ்வளவு இடங்கள் குட்டிச்சுவர்களாக இருந்தும் இந்த ஊருக்கு ஒரு கலையரங்கம் கூட இல்லையே’ என்று ஏங்கத் தோன்றுகிறது.

பொதுவான நிகழ்ச்சிகளை நடத்த, விழாக்களை எடுக்க, மற்ற ஊர்களில் இருப்பதைப் போல நகரின் மையத்தில் ஓர் அரங்கம் இருக்க வேண்டாமா? இவ்வளவு பெரிய நகராட்சியில் எல்லாரும் பயன்படுத்தும் வகையில் ஒரு திருமண மண்டபம் வேண்டுமல்லவா? நகருக்கு வெளியே சித்தர்க்காட்டில் அண்ணா பெயரில் நிற்கும் திருமண அரங்கமும் அலட்சிய பராமரிப்பால் அனாதரவாகிவிட்டது. இடையில் ஒரு முறை திருமண மண்டபம் கட்டுவதற்கு யோசித்த நகராட்சி, ‘ஊருக்குள் 60 மண்டபங்கள் இருக்கும் போது நாம் ஏன் அதெல்லாம் செய்ய வேண்டும்?’ என முடிவைக் கைவிட்டதாக சொல்கிறது. மக்கள் நலனுக்காக(!) எப்படியெல்லாம் யோசித்திருக்கிறார்கள் பாருங்கள்?

நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே, பழங்காவிரியைப் பார்த்தபடி இருக்கிற நகராட்சி இடத்தில் மணிசங்கர் அய்யர் எம்.பி. நிதியிலிருந்து சமுதாய அரங்கம் கட்டுவதற்கான முயற்சிக்கும் தடை போடப்பட்டது. அதனால் அந்த அரங்கம் காவேரி நகரில் பழைய சுற்றுலா மாளிகை இருந்த இடத்தில் கட்டப்படுகிறது. ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் 75 லட்ச ரூபாய் செலவில் எழும்பும் அரங்கம், எந்தளவுக்கு எல்லாருக்கும் பயன்படும் என்பது தெரியவில்லை. முன்பு திட்டமிடப்பட்ட இடமோ, நகரின் நடுவே கண்றாவியாக கிடக்கிறது.

மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப அதிகரிக்கும் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான இடங்கள் இருந்தும் அதனை முறையாக பயன்படுத்த தவறிய குற்றம் யாருடையது? தரங்கம்பாடி சாலையில் பழைய கால்நடை மருத்துவமனை கட்டடங்கள், வண்டிப்பேட்டை, திருவாரூர் மார்க்க பேருந்து நிலையத்திற்குள்ளே புழுதி படிந்து பூட்டிக்கிடக்கும் கட்டடங்கள், பட்டமங்கலத்தெரு, பசுபதி தெரு ஆகியவற்றில் பல ஆயிரம் சதுரடி இடங்கள், எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு அருகேயுள்ள இடம், ஞானம்பிகை கல்லூரிக்கு முன்பு புழக்கமின்றி இருக்கும் பொறியாளர் விடுதி, முதன்மைச் சாலையில் இருக்கும் கூறைநாடு ஆயுர்வேத மருத்துவமனை இடம், நெல்லுக்கடைச் சந்து, மேளக்கார சந்தில் முன்பு நகராட்சி பள்ளிக்கூடம் நடந்த இடம் – நகரத்திற்குள் இப்படி கைவிடப்பட்ட இடங்களின் பட்டியல் நீள்கிறது. இந்த இடங்களை மக்கள் பயன்பாட்டுக்கான இடங்கள் மாறுவது எப்போது?

மக்களின் தேவைகளைத் தாண்டி அரசு அலுவலங்களுக்கே நிறைய இடங்கள் தேவைப்படுகின்றன. மாவட்ட கல்வி அலுவலகம், வேளாண்மைப் பொறியியல் , இந்து சமய அறநிலையத்துறை , ஆதி திராவிடர் நல தனி வட்டாட்சியர், நிலச் சீர்த்திருத்த இணை ஆணையர், தனித்துணை வட்டாட்சியர் வருவாய் நீதிமன்றம் என ஏகப்பட்ட அரசு அலுவலங்கள் வாடகை இடங்களில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் தேவைகள் அதிகரித்துக்கொண்டே போகும் போது, இன்னொரு புறம் குட்டிச்சுவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது சரியா? இவற்றையெல்லாம் மாற்றப்போகிறோமா, இல்லாவிட்டால், ஊரே குட்டிச்சுவராகி விட்டது என்பதைக் காட்டுவதற்காக அப்படியே விட்டு வைக்கப் போகிறோமா?

—— யுத்தம் தொடரும்…..