காரணமா வேண்டும் நமக்கு?

காரணமா வேண்டும் நமக்கு?

மணிக்கு பல நூறு கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் புல்லட் ரயிலைப் பற்றி நம்மில் பலரும் கேள்விப்பட்டிருப்போம். இத்தகைய ரயில்கள் சீனாவிலும், ஜப்பானிலும் பிரசித்தமானவை. அண்மையில் ஒரு மணி நேரத்திற்கு 600 கி.மீ செல்லும் ரயிலை சீனாவில் சோதனை ஓட்டம் செய்திருக்கிறார்கள். அது போன்ற ரயில்கள் நம்முடைய நாட்டில் இருந்தால் எப்படி இருக்கும் என அடிக்கடி கற்பனை செய்து பார்ப்பேன். மயிலாடுதுறையில் வசிப்பவர்கள் தினமும் சென்னைக்குச் சென்று வேலை பார்த்து விட்டு ஊருக்கு திரும்பிடலாம் அல்லவா? நினைக்கவே எவ்வளவு இனிக்கிறது! அப்படியொரு பயணத்திற்கு இன்னும் பல ஆண்டுகள் நாம் காத்திருக்கவேண்டியிருக்கும். ஆனாலும் பயண நேரத்தைக் குறைக்கும் அளவுக்கு சாலை வசதிகள் மேம்பட்டு கொண்டிருப்பதைக் கண்கூடாக பார்க்கிறோம். சென்னை பயணத்தையே குறியீடாக வைத்துக்கொண்டால், கிழக்கு கடற்கரை சாலை(ஈ.சி.ஆர்) வந்த பிறகு பயண நேரம் கொஞ்சம் குறைந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிதம்பரம் மற்றும் சீர்காழி புறவழிச்சாலையால் இன்னும் நேரம் மிச்சமாகிறது. அதுமட்டுமின்றி அந்தந்த ஊர்களுக்குள் போக்குவரத்து நெரிசலும் கணிசமாக குறைந்திருக்கிறது. கும்பகோணத்திலும் இப்படித்தான்.

இந்தப் பாதையில் எல்லாவற்றையும் போலவே மயிலாடுதுறை மட்டுமே சவலைப்பிள்ளையாக, கேட்பாரின்றி கிடக்கிறது. ஒரே வித்தியாசம், மற்றவை எல்லாம் பேச்சளவில் நிற்கும் போது, மயிலாடுதுறை சுற்றுவட்டச்சாலைத் திட்டம் மட்டும் தொடங்கி, நகராமலேயே இருக்கிறது. இத்திட்டப்படி, கும்பகோணம் சாலையிலுள்ள மல்லியத்தில் தொடங்கும் சுற்று வட்டச் சாலை, வானாதிராஜபுரம் வழியாக சென்று, அதே சாலையில் கிழக்கு நோக்கி செல்லும் மாப்படுகை ரயில்வே கேட்- ஐ கடந்து, அங்கிருந்து குறுக்காக பல்லவராயன் பேட்டையை அடைந்து, பின்னர் கழுக்காணி முட்டம் வழியாக சீர்காழி சாலையிலுள்ள சாவடி பகுதியில் இணையும். அதே சாலையில் உளுத்துக்குப்பை வழியாக மணக்குடி சென்று, அங்கிருந்து மன்னம்பந்தல் வழியாக மஞ்சளாறு வரை போய், அகர கீரங்குடி வழியாக திருவாரூர் சாலையை அடைந்துவிடும்.

மொத்தம் 16 கி.மீ. நீளம் கொண்ட இத்திட்டத்திற்கான மதிப்பீடு ரூ.31 கோடி. இதில் மத்திய அரசு ரூ.26 கோடியைத் தர சம்மதித்து, முதற்கட்டமாக ரூ.15 கோடியை ஒதுக்கியது. நிலம் கையகப்படுத்துவதற்காக முந்தைய தி.மு.க. அரசு ரூ.3.5 கோடியை ஒதுக்க முடிவெடுத்தது. சுற்றுவட்ட சாலைக்கான முன் முயற்சிகளை எடுத்த அப்போதைய எம்.எல்.ஏ. ராஜகுமார் 2011 மார்ச் 1 ஆம் தேதி சீர்காழி சாலையிலிருக்கும் சாவடியில் இதற்கான பணிகளையும் தொடங்கி வைத்தார். அதோடு சரி…. உடனே சட்டமன்றத் தேர்தல் வந்தது. இதோ 4 ஆண்டுகள் ஓடி இன்னொரு தேர்தலும் வரப்போகிறது. சுற்றுவட்டச் சாலைத் திட்டம் மட்டும் அந்த இடத்தை விட்டு அசையாமல் நிற்கிறது. தற்போதைய எம்.எல்.ஏ. அருட்செல்வன் சட்டப்பேரவையில் இது பற்றி கேட்ட போதெல்லாம், ‘நிலம் எடுப்புப் பணி நடக்கிறது’ என்பதே இப்போதைய அரசின் பதிலாக இருந்தது. எவ்வளவு அலட்சியம்! பிறகென்ன..? அவ்வளவுதான்…!

குறிப்பிட்ட காலத்திற்குள் சுற்றுவட்டச் சாலை பணி முடிவடைந்திருந்தால், மயிலாடுதுறை நகரில் இன்றைக்குள்ள பெரிய அளவிலான போக்குவரத்து நெரிசல் இருந்திருக்காது. இன்னொரு பக்கம் நெ.1 சாலை எனப்படும் பூம்புகார்- கல்லணை சாலையிலுள்ள குறைகளைச் சரி செய்ய வேண்டும். கோவலனும் கண்ணகியும் நடந்து சென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பாதை, சோழர்கள் காலத்தில் ‘ராஜ பாதை’ என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியது. வழி நெடுக மருத மரங்களும், சுமைதாங்கி கற்களும், சத்திரங்களுமாக நம் முன்னோரின் பெருமையைச் சொன்ன சாலை இது. திருவெண்காடு, வைத்தீஸ்வரன்கோவில், திருநாகேஸ்வரம், ஆலங்குடி, திருநள்ளார் போன்ற நவக்கிரக தலங்களுக்கும், திருமணஞ்சேரி, திருவையாறு உள்ளிட்ட புகழ் மிக்க ஊர்களுக்கும் செல்வதற்கான இணைப்புச் சாலைகள் இதில் அமைந்துள்ளன.

முந்தைய ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட கல்லணைக் கால்வாய் சாலைத் திட்டத்தினால், மேம்படுத்தப்பட்ட பூம்புகார் – கல்லணை சாலையில் பெரிய தடையாக இருப்பது ‘மாப்படுகை ரயில்வே கேட்’. ரயில்களில் இன்ஜின் மாற்றுவதற்கு மட்டுமே ஒரு நாளைக்கு 12 முறை வரை இங்கே கேட் மூடப்படுகிறது. இது தவிர சரக்கு ரயில்கள் உட்பட 50 ரயில்கள் வரை நாள் தோறும் கடந்து செல்கின்றன. பக்கத்திலுள்ள காவிரி நகரில் மேம்பாலம் இருப்பதால், இங்கே ரயில்வே மேம்பாலம் அமைக்க முடியாது என்ற காரணத்தைப் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறார்கள். சட்டப்படி அது சரியாகவே இருக்கட்டும். அதற்காக இப்போது என்ன செய்ய முடியும்? கட்டிய பாலத்தை இடித்து தள்ளிவிடலாமா? மக்களுக்காக அரசு விதிமுறைகளா? விதிமுறைகளுக்காக மக்களா? மேம்பாலம் கட்ட வாய்ப்பில்லாவிட்டால், சுரங்கப்பாதையாவது அமைக்கலாம் இல்லையா? அதைவிட்டுவிட்டு காரணத்தைக் கட்டிக் கொண்டு அழுவதால் யாருக்கு என்ன பயன்?

நீடூர் ரயில்வே கேட் நிலைமையும் இதுதான். மேம்பாலம் இல்லாமல் மணிக்கணக்கில் மக்கள் காத்துக்கிடக்கிறார்கள். இயல்பாக இதனைக் கடந்து செல்லும் வாகனங்களுக்கு அப்பால், முடிகண்ட நல்லூர் அரசு மணல் குவாரிக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான லாரிகளாலும் இங்கே நாள்தோறும் நரக வேதனைதான். நீடூரில் ஒரு ரயில்வே மேம்பாலத்தை அமைப்பதோடு, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் 4 ஆண்டுகளாக திறக்கப்படாத முட்டம் பாலத்தைத் திறந்து, இதனை இருவழிச் சாலையாக மாற்றினால் சென்னை பயண தூரத்தில் 20 கி.மீ வரை குறையும். யாரிடம் கேட்பது ? செய்ய வேண்டியவர்கள் யார்?

சுற்றியுள்ள பகுதிகளைப் போலவே நகரின் உள்ளேயும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை முன்னெடுப்பதற்கு ஆளில்லை. பழைய சுந்தரம் தியேட்டருக்கு எதிர் புறச் சாலையிலிருந்து காவல் நிலையம் வழியாக ஊருக்குள் வந்தால், மின்சார சுடுகாடு மற்றும் தீப்பாய்ந்தாள் அம்மன் கோவில் வழியாக செல்லும் போது நடை பாலம் உள்ளது. இதனை கார்கள் செல்லும் அளவுக்கு பெரிய பாலமாக மாற்றினால், நகருக்குள் பெருமளவு நெரிசல் குறையும். இதே போல, பாப்புலர் அச்சகத்திற்கு முன்பு காவிரியில் நடை பாலம் உள்ள இடத்தில் பெரிய பாலத்தை உருவாக்கினால், பூம்புகார் சாலையிலிருந்து செட்டித்தெரு வழியாக தரங்கம்பாடி சாலைக்குச் சென்று விடலாம். இந்த பாலங்களை ஏற்படுத்துவதோடு, உலக வங்கி நிதி உதவியோடு திட்டமிடப்பட்டிருக்கும் கும்பகோணம்- சீர்காழி சாலை மேம்பாட்டுத் திட்டத்தைத் தாமதமின்றி செயல் படுத்த வேண்டும். இவை மட்டுமின்றி சாலை பராமரிப்பும் முக்கியம். நகரப் பகுதியில் 6 கி.மீ. மட்டும் நெடுஞ்சாலைக்குச் சொந்தமான சாலை இருக்கிறது. மற்றதெல்லாம் நகராட்சியின் சாலைகள்தான். அரசோடு சேர்ந்து உட்கட்டமைப்பைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கும் இருக்கிறதல்லவா?!

——– யுத்தம் தொடரும்…..

தொழில் கசந்து போகலாமா?

தொழில் கசந்து போகலாமா?

‘நீ என்ன பெரிய கலெக்டர் வேலையா பார்க்கிறே?’ என்று கேட்பார்கள். அதற்கு என்று அப்படியொரு மரியாதை. அத்தகைய கனவு வேலையைவிட்டு கல்லூரி பேராசிரியர் வேலைக்கு நிறைய பேர் செல்லும் அதிர்ச்சித்தகவல் சில ஆண்டுகளுக்கு முன் தெரியவந்தது. காரணம் என்ன தெரியுமா? சம்பளம் தான்! அதையும் தாண்டி வேலை செய்வது என்பது எப்போதும் ஒன்றுதான். அது கம்பவுண்டர் வேலையாக இருந்தாலும் சரி…கலெக்டர் வேலையாக இருந்தாலும் சரி…. மாதச் சம்பளத்திற்குப் பார்க்கும் வேலை. அவ்வளவுதான்! வாழ்க்கை முழுக்க வேலை பார்த்தாலும் தலைகீழ் மாற்றங்களுக்குப் பெரும்பாலும் வழியில்லை. ஆனால் தொழில் என்பது அப்படியில்லை. அதிக சவால், வாழ்க்கையைப் பணயம் வைக்கும் சிக்கல் எல்லாம் இருந்தாலும் தொழிலில் வென்றுவிட்டால் எங்கோ போய் நிறுத்தி விடுகிறதல்லவா!. நம்முடைய ஊரில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் ஆரம்பித்தவரையும், வேலைக்குப் போனவரையும் இப்போது ஒப்பிட்டுப் பார்த்தால் உங்களுக்கே உண்மை புரியும்.

இந்த இலக்கணம் தனிநபர்களுக்கு மட்டுமல்ல; ஊருக்கும் பொருந்தும்தானே! தொழில்கள் வளர, வளர ஊரின் வளர்ச்சியும் உச்சத்திற்குப் போகும். மக்களின் வாழ்க்கையும் செழிப்பாக இருக்கும். விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் நம்முடைய மயிலாடுதுறை பகுதி, வளர்ச்சிப்பாதைக்குச் செல்வதற்கு தொழில்களை விட்டால் வேறேதும் வழியில்லை. அப்படியென்றால் தொழில் வளர்ச்சியில் நாம் எந்தளவுக்கு கவனம் செலுத்தியிருக்கிறோம்?
பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தின் முக்கியமான நூற்பாலையாக திகழ்ந்த மணல்மேடு நூற்பாலை, உருக்குலைந்து போனதன் பின்னணி கதை பெரிய வயிற்றெரிச்சல். 40 ஏக்கர் பரப்பளவில், தஞ்சை மாவட்ட கூட்டுறவு நூற்பாலை என்ற பெயரில் இயங்கி வந்த தொழிற்சாலை, அரசியல்வாதிகள் அடித்த பகல் கொள்ளையால் , கொஞ்சம்,கொஞ்சமாக நசிந்து 2003ல் மூடுவிழா கண்டது. உள்ளூர் விவசாயிகளிடமிருந்து பஞ்சு வாங்காமல், வெளிமாநிலங்களில் இருந்து கூடுதல் விலைக்கு வாங்கி கமிஷன் பெற்றதும், அந்த பஞ்சை நூலாக்கி குறைந்த விலைக்கு விற்று கமிஷன் பெற்றதுமாக இங்கே நடந்த அட்டூழியங்கள் ஏராளம். 30 ஆண்டுகளுக்கு முன்பே ஆயிரம் பேர் வேலை பார்த்த இந்த ஆலையை வளர்த்து எடுத்திருந்தால், இன்றைக்கு எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்திருக்கும். மணல்மேடு பகுதியின் வளர்ச்சியே மாறியிருக்கும். இப்போது குட்டிச்சுவராகி கிடக்கும் நூற்பாலை கட்டிடங்களைப் பார்க்க, பார்க்க வேதனையால் மனம் விம்முகிறதா இல்லையா?

நூற்பாலைதான் இப்படி என்றால், மல்லியக்கொல்லையில் இருந்த காகித ஆலையின் கதியுமா இப்படி ஆக வேண்டும்? வைக்கோல் மற்றும் சர்க்கரை ஆலை கழிவுகள் மூலமாக காகித அட்டைகள் தயாரிக்கப்பட்ட இந்த தனியார் ஆலை, ஊக்குவிக்க ஆளில்லாமல் ஊத்தி மூடப்பட்டது. அரசாள்வோருக்குப் பலன் இல்லாவிட்டால், இங்கே தொழில் நடத்திடமுடியுமா, என்ன?

மின்வாரியம், பள்ளிக்கூடம் போன்றவற்றுக்குப் பல்வேறு பொருட்களைத் தயாரித்து தரும் மயிலாடுதுறை காவேரி நகர் டான்சி தொழிலகம் நசிந்து போய், இன்றைக்கோ, நாளைக்கோ என உயிர் போராட்டம் நடத்தி வருகிறது. அனைத்து விதமான இரும்பு பொருட்களும் உற்பத்தியாகும் இந்த தொழிலகப்பகுதியை தொலைநோக்குடன் சிந்தித்து தொழிற்பேட்டையாக மாற்றினால் ஊருக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்?

விவசாயம் அல்லாத தொழில்களின் நிலைதான் இப்படி என்றால், நம்முடைய பகுதியின் ஜீவாதாரமான விவசாயத்தை அடிப்படையாக கொண்ட தொழில்களின் நிலைமை என்ன? சுற்றுவட்டார விவசாய மற்றும் விவசாய கூலித்தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வரப்பிரசாதமாக கருதப்பட்ட மூங்கில் தோட்டம் பால்பண்ணை ஏன் வீழ்ந்தது? குளிரூட்டும் நிலையத்தோடு அமைக்கப்பட்ட இப்பண்ணையில் அரசியலை வைத்து குளிர்காய்ந்தவர்கள், அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு கடனில் மூழ்க வைத்தனர். கூட்டுறவு நிறுவனமான இதனை அக்கறையோடு வளர்த்தெடுத்திருந்தால் கிராமப் பொருளாதாரம் எப்படி செழித்திருக்கும்?

மால்கம் ஆதிசேஷய்யா போன்ற பொருளாதார மேதைகள் நிர்வகித்து, லாபம் ஈட்டித் தந்த தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் இன்றைய நிலை, விவசாயிகளைப்போலவே பரிதாபகரமானதாக இருக்கிறது. தத்தி, தடுமாறி 2000 ஆம் ஆண்டுவரை ஒரு நாளைக்கு 1000 டன் கரும்பு அரவை செய்த இந்த ஆலை, இப்போது 500 டன் அரைக்கவே மூச்சு திணறுகிறது. ஒரு காலத்தில் இனிக்க, இனிக்க கரும்பு விவசாயம் செய்த விவசாயிகளுக்கு, இப்போது பெயரைக் கேட்டாலே கசக்கிறது. இதற்கு, கோடிக்கணக்கான ரூபாய் நிலுவைத்தொகை மட்டுமல்ல; கரும்பு பணம் கைக்கு வரும் வரை ஆலை நிர்வாகத்தால் ஏற்படும் அல்லலும் முக்கிய காரணம். அக்கம் பக்கத்தில் வந்த தனியார் சர்க்கரை ஆலைகளுக்காக கூட்டுறவு ஆலையை நசுக்கி ஆதாயம் பார்த்த அதிகாரிகள், அரசியல்வாதிகள் கூட்டணி ஆனமட்டும் சுரண்டி கொழுத்தது. பிறகெப்படி ஆலையையும் லாபத்தில் ஓட்ட முடியும்? அரதப்பழசான எந்திரங்களை மாற்ற முடியும்?

பளபளக்கும் புதுப்புது நகைக்கடைகளும், பளிச்சென ஓட்டல்களும் வந்துவிட்டால் மட்டும் ஊர் செழித்துவிட்டது என்று அர்த்தமாகி விடுமா? நிறைய பேருக்கு வேலை கொடுக்குமளவுக்கு தொழில்களை வளர்த்தெடுக்காவிட்டால் வளர்ச்சி வானத்திலிருந்தா குதிக்கும்? வெத்துவேட்டு விளம்பரங்களுக்குப் பதிலாக அத்தகைய சிந்தனையும் , அதற்கான செயலும் வரும் நாள் எப்போது?

—- யுத்தம் தொடரும்……