குப்பை கொட்டும் கொடுமை!

‘சாக்கடை’ – இந்த வார்த்தையைக் கேட்டவுடனே நம் முகம் கோணலாகிப் போகிறது. அவ்வளவு இழிவாக, மோசமான பகுதியாக அதனை மனதிற்குள் பதிய வைத்துள்ளோம். ஒரே ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். ஊருக்குள் சாக்கடை என ஒன்று இல்லாவிட்டால் ஊரே சாக்கடையாகிவிடும் தானே? ஆமாம்… ஊரின் வளர்ச்சிக்கு சாலைகள், குடிநீர் உள்ளிட்ட இன்ன பிற வசதிகள் எந்தளவுக்கு முக்கியமோ, அதே போல கழிவுகள் மேலாண்மையும் அதிமுக்கியமானது. இன்னும் அழுத்தி சொல்வதானால் அவற்றை எல்லாம் விட முதன்மையானது.

தமிழ்நாட்டின் பல நகரங்களில் பாதாள சாக்கடை வந்த காலத்தில் மயிலாடுதுறைக்கும் ரூ.42 கோடியில் அத்திட்டம் கொண்டு வரப்பட்டது. ‘அய்யோ… ஏன் தான் இந்த திட்டத்தைக் கொண்டு வந்தார்களோ?’ என நொந்து நூடுல்சாகும் அளவுக்கு நகரமே நரகமானது. நம்முடைய மக்கள் பிரதிநிதிகள் அதில் அடித்த ‘லூட்டிகளே’ தாமதத்திற்கு காரணமென்ற தகவல், அம்பலத்திற்கு வந்து சாக்கடையை விட துர்நாற்றமடித்தது. ஓராண்டில் முடிய வேண்டிய திட்டம் ஒரு வழியாக 4 ஆண்டுகளுக்குப் பிறகு 2007-ல் முடிந்தது. திட்டம் முழுமை பெற்று விட்டதாக சொல்லப்பட்டு, அதனை செய்து முடித்த சென்னை ‘ஆங்கர் செராமிக்ஸ்’ நிறுவனம், 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தப்படி தன் செலவில் பராமரித்தும் கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக 2012ல் இருந்து, அதே நிறுவனத்திடம் பராமரிப்பு பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்காக நகராட்சி நிர்வாகம் மாதந்தோறும் ரூ.7.60 லட்சம் அவர்களுக்கு கொடுக்கிறது. அந்நிறுவனம் 15 இடங்களில் பம்பிங் மற்றும் லிப்டிங் ஸ்டேஷன்களை அமைத்து, ஆறுபாதியிலுள்ள நகராட்சி இடத்திற்கு எடுத்துச் சென்று கழிவுநீரை சுத்தம் செய்கிறது. தனியாரிடம் போனதாலோ, என்னவோ பாதாள சாக்கடை பராமரிப்பு பணிகள் பெரிய குறைகளின்றி போய்க் கொண்டிருக்கின்றன. இதில் சிக்கல் எங்கே என்றால், நகரத்தில் பாதாள சாக்கடை இணைப்பு பெறாத வீடுகள் இன்னும் ஏறத்தாழ 30 சதவீதத்திற்கு மேல் இருப்பது தான்! முறையாக கணக்கெடுத்து பார்த்தால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகவும் வாய்ப்பிருக்கிறது. திட்டத்தின் தொடக்கத்தில் வீட்டுக்கு ஆயிரம் ரூபாய் இணைப்புக்கான கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. இழுத்தடிக்கப்பட்ட திட்டத்தை விரைவுபடுத்திய அப்போதைய சார் ஆட்சியர் அஜய் யாதவ், ‘கட்டணத் தொகையைக் குறைத்தால்தான் எல்லோரையும் இணைக்க முடியும்’ என்றார். அதை யாரும் காதில் வாங்கவில்லை. இப்போது இணைப்புக்கு ரூ.5 ஆயிரம். இது நேரடியாக நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய தொகை மட்டுந்தான். இதைத் தாண்டியும் ‘செலுத்த வேண்டியவர்களுக்குச் செலுத்த வேண்டிய’ தொகை இன்னும் இருக்கிறது. இதனால் இணைப்பு கொடுக்க நினைப்பவர்களும் முடியாமல் தவிக்கிறார்கள். தெருவுக்கு 10 வீடாவது பாதாள சாக்கடை இணைப்பில்லாமல் இருக்கிறது. இதனைக் கவனிக்காமல் விட்டுவிட்டால், வருங்காலத்தில் பூதாகரமாக வந்து நிற்கும். ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து, கட்டணத்தில் சலுகையும் தந்து பாதாள சாக்கடைத்திட்டத்தை முழுமை பெற செய்ய வேண்டிய பொறுப்பு நகராட்சிக்கு இருக்கிறது.

சாக்கடை கழிவைவிட மயிலாடுதுறைக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்திருப்பது குப்பைகள். ஒரு நாளைக்கு 40 டன் வரையில் சேரும் குப்பைகளை அள்ளுவதற்குப் போதுமான பணியாளர்கள் நகராட்சியில் இல்லை. இதனால் மாவட்ட நிர்வாகம் வழங்கும் சிறப்பு நிதியில் குப்பை அள்ளும் பணியின் குறிப்பிட்ட பகுதி, ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குப்பைகளை எடுப்பதால் நகரின் பல பகுதிகள் நாறிக்கிடக்கின்றன. பேருந்து நிலையத்திற்குப் பக்கத்தில் உள்ள பஜனை மடத்தெரு உட்பட பல இடங்களில் இது தான் நிலைமை.

இன்னொரு புறம், சேகரிக்கப்படும் மொத்த குப்பைகளும் ஆனந்ததாண்டவபுரம் சாலையிலுள்ள 4 ஏக்கர் இடத்தில் கொட்டப்படுகிறது. சற்றேறக்குறைய 60 ஆண்டுகளாக அங்கேதான் ‘கம்போஸ்ட்’ மையம் செயல்படுகிறது. இதனால் ‘அப்பகுதியே குப்பை கூளமாகி, சுகாதார சீர்கேடு மலிந்துவிட்டது’ என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ‘உடனடியாக இது குறித்து பரிசீலிக்காவிட்டால், ஆனந்ததாண்டவபுரம் குப்பை கிடங்கிற்கே நகராட்சி அலுவலகத்தை மாற்ற ஆணையிட வேண்டியிருக்கும்’ என்று நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது. கூடவே இதற்காக நகராட்சிக்கு தமிழக அரசு ரூ.9 கோடி தருவதோடு, மாற்று இடம் பற்றியும் சிந்திக்க வேண்டுமென ஆணையிட்டது.

‘புது வம்பாக இருக்கிறதே’ என அரசு உடனடியாக நிதி ஒதுக்கியது. மாவட்ட ஆட்சியர் வந்து சில இடங்களைப் பார்த்தார். தங்கள் பகுதியை குப்பை மேடாக்க யார் இடம் கொடுப்பார்? ம்ஹூம்… ஒன்றும் நடக்கவில்லை. நகராட்சியும் அவசர, அவசரமாக ஆனந்ததாண்டவபுரத்திற்குச் செல்லும் குப்பையின் அளவைக் குறைக்க திட்டமிட்டது. ரயிலடி பழைய சுற்றுலா பங்களா, கூடுதல் பேருந்து நிலையம் எதிரேயுள்ள பழத்தோட்டம், தருமபுரம் சாலையிலுள்ள வண்டிப்பேட்டை, திம்ம நாயக்கன் படித்துறை ஆகிய இடங்களில் சிறிய அளவில் ‘கம்போஸ்ட்’ அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் பழத்தோட்டம் பகுதி, மக்கள் அதிகம் வந்து செல்லும் பேருந்து நிலையம் உள்ள இடம். அங்கேதான் ஆண்டுதோறும் ‘முழுக்கு கடைகள்’ அமைப்பார்கள். வண்டிப்பேட்டைக்கு பின்னால் மகப்பேறு மருத்துவமனை இருக்கிறது. திம்ம நாயக்கன் படித்துறையில் சுடுகாடு அமைந்துள்ளது. சுற்றுலா பங்களா பகுதியில் சமுதாய அரங்கம் கட்டி வருகிறார்கள். இந்த இடங்களில் குப்பை கிடங்குளை அமைத்தால் என்னவாகும்?

சரி …. இதற்கு தீர்வுதான் என்ன? சரியான மாற்று இடம் அமையும் வரை ஆனந்ததாண்டவபுரம் கிடங்கை மேம்படுத்தி, அங்குள்ள மக்களை சுகாதார பாதிப்பிலிருந்து மீட்கலாம். ‘60 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு கிடங்கு அமைக்கும் போது வீடு இல்லை; இவர்களை யார் குப்பைக்குப் பக்கத்தில் வீடு கட்டச் சொன்னது?’ என்று விதண்டாவாதம் பேசி பயனில்லை. அப்படி என்றால், அங்கே வீடு கட்ட அனுமதி கொடுத்தது யார் என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். எனவே, அதற்குள் நுழையாமல் ஆக வேண்டியதைப் பார்க்கலாம். அந்த இடத்தில் இப்போதும் கைகளால்தான் குப்பைகளைப் பிரிக்கிறார்கள். இதனால் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க அதிநவீன கருவிகளை வாங்கலாம். துப்புரவு தொழிலாளர்கள் பற்றாக்குறையை உடனடியாக சரி செய்யலாம்.குப்பைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் உரத்தை முழுவதுமாக விற்பதற்குரிய வழிகளை ஆராயலாம். எல்லாவற்றிலும் அசமந்தமாக இருக்கும் மக்களிடம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைப் பிரித்து கொடுப்பதிலுள்ள நன்மைகளை தீவிரமாக விளக்கலாம்.

இதையெல்லாம் பொறுப்பாக செய்ய சரியான அதிகாரத்தோடு நகராட்சிக்கு ஆணையர் வேண்டுமல்லவா? என்னதான் மக்கள் பிரதிநிதிகள் இருந்தாலும் நேரடியாக நிர்வாகத்தை முன்னெடுப்பது ஆணையர்தானே?! எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் பொம்மையாக ஒருவர் , பொறுப்பு ஆணையராக இருந்தால் குப்பை மேலாண்மை மட்டுமல்ல; எந்த வேலையாவது உருப்படுமா? தமிழ்நாட்டிலேயே மயிலாடுதுறை நகராட்சி மட்டும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக (பொறுப்பு) ஆணையரை வைத்துக்கொண்டு குப்பை கொட்டுவது கொடுமையல்லவா?

—————–யுத்தம் தொடரும்….

(Visited 63 times, 1 visits today)