நீதித்துறையும் வஞ்சிப்பதா ?

ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை வாங்கி 68 ஆண்டுகள் ஆன பின்னும் நம்முடைய உயர்நீதிமன்றத்தில் இன்னும் ஆங்கிலம் தான் ஆண்டு கொண்டிருக்கிறது. இங்கே வழக்காட வருகிற மக்களின் தாய்மொழியான தமிழ் நீதிமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடலுக்குள் போட்ட கல்லாக கிடக்கிறது. ஆங்கிலத்தில் உள்ள ஆவணங்களையும் சட்டச் சொற்களையும் தமிழ் படுத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதி இல்லை என்று சொல்லி இக்கோரிக்கையைப் பலவீனமாக்குபவர்களும் இருக்கிறார்கள். நம்மை நாமே ஆளுகிற குடியாட்சியில் இந்த நிலைமை என்றால், வெள்ளையரின் நேரடி ஆட்சி நடந்த போது ஆங்கிலத்தில் இருந்த சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்களை முதன்முறையாக தமிழில் மொழிபெயர்த்தவர் நம்முடைய மாயூரம் வேதநாயகம் பிள்ளை. பெரும் மொழி ஆர்வத்துடனும், மக்களின் மீதான அக்கறையுடனும் இதனைச் செய்த அவருக்கு எவ்வளவு தீர்க்க தரிசனம் பார்த்தீர்களா?

நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டு நீதித்துறை வரலாற்றில் இப்படி ஒரு மைல் கல் பதித்த வேதநாயகம் பிள்ளை நீதிபதியாக இருந்த இடம் மயிலாடுதுறை. இது மட்டுமா? மற்றவற்றைப் போன்றே நீதித்துறையிலும் மறக்க முடியாத சிறப்புகள் நம்முடைய ஊருக்கு இருக்கின்றன. நீதிமன்றங்கள் நடைமுறைக்கு வரத்தொடங்கி, ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம் தரங்கம்பாடியில் அமைந்த 1886 ஆம் ஆண்டிலேயே, மாயூரத்திலும் முன்சீப் நீதிமன்றம் தொடங்கப்பட்டுவிட்டது. அடுத்த 15 ஆண்டுகளில் சார்பு நீதிமன்றமும் வந்தது. கப்பல் மூலமாக பொருட்களைக் கொண்டு வந்து காமராஜர் சாலையில் ஆங்கிலேயர் கட்டி வைத்த கட்டடத்தில் வழக்கறிஞராக கால் பதித்து புகழ் பெற்றவர்கள் நிறைய பேர். ஆண்டி கார்டு பாலு அய்யர், ஆராவமுத அய்யங்கார் , ஏ.எஸ்.வெங்கட்ரமண அய்யர் ( செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் – ன் தாத்தா), அவரது மகன் ஸ்ரீதேவன் (உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவனின் கணவர்) நகராட்சித்தலைவராகவும் இருந்த கிருஷ்ணமூர்த்தி அய்யர், உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதிகள் ராமன்(ஆராவமுத அய்யங்காரின் மகன்), பாலசுப்ரமணியன், வி.தனபாலன், தற்போது நீதிபதிகளாக இருக்கும் தமிழ்வாணன்,மதிவாணன், நாகமுத்து போன்றோரும் ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி ராஜ இளங்கோவும் மயிலாடுதுறையில் வழக்காடியவர்கள்தான். இங்கே இருந்து சென்று தேனி மாவட்ட நீதிபதியாக உள்ள சிவஞானம், மதுரையில் தலைமை நீதித்துறை நடுவராக இருக்கும் ராஜசேகரன், குடியாத்தம் குற்றவியல் நடுவர் கற்பகவள்ளி,தாராபுரம் குற்றவியல் நடுவர் கோபாலகண்ணன் என பட்டியல் நீள்கிறது. மயிலாடுதுறையில் சார்பு நீதிபதியாக இருந்து உயர்நீதிமன்ற நீதிபதியாகி, ஓய்வு பெற்ற ராமமூர்த்தி, தற்போதுள்ள நீதியரசர் சிவகுமார் ஆகியோரோடு இல்லாமல், வழக்கறிஞர்கள் எஸ்.கே.கிருஷ்ணமூர்த்தி, எம்.கலியமூர்த்தி,ஆர்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ஆறுமுகம் ஆகியோரும் மறக்க முடியாதவர்கள்.

50 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமான வக்கீல்களாக திகழும் சி.ஆர்.குஞ்சிதபாதம், முருகு.மாணிக்கம், ஆர்.சிவபுண்ணியம், ஆர்.சதாசிவம், தமிழ்நாடு பார் கவுன்சிலின் கௌரவ உறுப்பினரான என்.கே.கிருஷ்ணமூர்த்தி போன்ற ஜாம்பவான்கள் இங்கே நிறைந்திருக்கின்றனர். நீதித்துறையில் தனக்கென தனி இடம் பிடித்த மாயூரம் பார் அசோசியேசன், இப்போது இரண்டு சங்கங்களாக பிளவுபட்டு கிடப்பது பெருமைப்படத்தக்கதல்ல. அதற்குப் பின்னால் உள்ள அரசியலை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, வழக்கறிஞர்கள் ஒன்றுபட்டு மயிலாடுதுறைக்குப் புகழ் சேர்க்கவேண்டும்.

காலத்திற்கேற்ப 10 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து நீதிமன்ற வளாகம் புதிய கட்டிடங்களோடு உருவாகி இருப்பது மகிழ்ச்சி. மயிலாடுதுறையின் ஜீவாதார கோரிக்கைகள் எல்லாம் ஊறுகாய் பானையில் ஊறிக்கொண்டிருக்கும் நிலையில் குறைந்தபட்சம் நீதிமன்ற கட்டிடங்களாவது வந்ததே என்று மகிழத்தானே வேண்டும். கட்டடங்கள் கிடைத்துவிட்டன. ஆனால் அடிப்படை வசதிகள்….? நீதிமன்ற ஊழியர் பணியிடங்கள் காலியாக கிடக்கின்றன. ஏற்கனவே ஆயிரக்கணக்கில் வழக்குகள் தேங்கியிருக்கும் மயிலாடுதுறையில் போதுமான ஊழியர்கள் இல்லாவிட்டால், நிலைமை இன்னும் மோசமாகாதா? வழக்குகளை விடுங்கள். கழிவறைகளைச் சுத்தம் செய்யவும் குப்பைகளை அகற்றவும் கூட தேவையான ஆட்கள் இல்லை. மின் தூக்கி(லிப்ட்), தோட்டம் போன்றவற்றைப் பராமரிக்கவும் பணியாளர்கள் அவசியம். பற்றாக்குறையாக உள்ள வாகன நிறுத்துமிடத்தை ஒழுங்கு செய்திடலாம். உலகமே டிஜிட்டல் மயமாகிக்கொண்டிருக்கும் நிலையில் சட்டப்புத்தகங்களையும், ஆவணங்களையும் வைத்திட தனி நூலகம் வேண்டும்தானே? வக்கீல்களும் கட்சிக்காரர்களும் உட்கார்ந்து பேச ஓரிடம், ஆண்- பெண் வழக்கறிஞர்களுக்கு குளிர்சாதன வசதியுடன் தனித்தனி ஓய்வறை, கேன்டீன் வசதி, நீதிமன்ற வளாகத்திலேயே ஏ.டி.எம் , நகலகம் மற்றும் தட்டச்சு நிலையம் என முழுமை பெறுவதற்கு மயிலாடுதுறை நீதிமன்றத்தின் தேவைகள் ஏராளம்.
இன்னொரு பக்கம், முதன்மை சார்பு நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் – I , குற்றவியல் நீதித்துறை நடுவர் – II , முதன்மை உரிமையியல் நடுவர், கூடுதல் உரிமையியல் நடுவர், குற்றவியல் விரைவு நடுவர் நீதிமன்றம் என இந்த வளாகத்தில் மொத்தம் 7 நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. ஆனால் 6 நீதிமன்றங்களுக்கு மட்டுமே புதிதாக கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது. இது போக முக்கியமான வழக்குகளில் பிணை வழங்குவதற்கான அதிகாரம் கொண்ட கூடுதல் மாவட்ட நீதிமன்றம் மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என்பது நம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. ஏனெனில் இங்கேதான் நாகப்பட்டினம் மாவட்டத்திலேயே அதிக வழக்குகள் நடக்கின்றன. மகளிர், போக்குவரத்து, குற்றப்பிரிவு, மதுவிலக்கு உட்பட மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் கீழுள்ள 12 காவல்நிலைய பகுதிகளில் இருந்து வழக்குகள் இங்கே தான் வருகின்றன. சீர்காழி டி.எஸ்.பி. கட்டுப்பாட்டிலுள்ள பொறையார் காவல் நிலைய வழக்குகளும் மயிலாடுதுறை நீதிமன்றங்களில்தான் விசாரிக்கப்படுகின்றன. மேல் முறையீடு போன்றவற்றுக்கு நாகப்பட்டினத்திற்கு சென்று மக்கள் அல்லாடுகின்றனர். நீதியைப் பெறுவதற்கு கொள்ளிடக்கரையில் வசிப்பவர்கள் 60 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்ய வேண்டும் என்பது சரியா? எல்லாத் துறைகளையும் போன்றே நிதர்சனத்தை உணராமல் மயிலாடுதுறை பகுதி மக்களை நீதித்துறையும் வஞ்சிக்கலாகுமா? இதில் சில நேரங்களில் நீதிபதி பணியிடமும் மாதக்கணக்கில் காலியாக கிடக்கும். அது மாதிரி நேரங்களில் சீர்காழி நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியிருக்கிறது. மாவட்ட தலைநகரத்தை விட அதிகமான வழக்குகள் நடத்தப்படும் ஊரிலுள்ள நீதிமன்றம் அதற்கேற்ப கட்டமைப்பையும் வசதிகளையும் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமல்லவா? சட்டமும் நீதியும் மக்களுக்கானதுதானே!
கூடுதல் நீதிமன்றம், அடிப்படைத் தேவைகள் எல்லாம் தாண்டி ஒரு மணி நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய கோரிக்கை ஒன்று, காது கொடுக்க கேட்க ஆளின்றி மக்களின் நெஞ்சை உறுத்திக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழரான மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் சிலை வைத்து பெருமை தேடி கொள்ள வேண்டும் என்று கேட்பதில் என்ன அநியாயம் இருக்கிறது? இதில் யாருக்கு என்ன சங்கடம்? சொல்லப்போனால் வேதநாயகர் ஆற்றியிருக்கும் பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலேயே அவருக்கு சிலை வைத்துக் கொண்டாட வேண்டும். அவர் மிகவும் நேசித்த மண்ணிலேயே அதனைச் செய்ய விடாமல் தடுப்பது யார்? இனியும் தாமதிக்காமல் மயிலாடுதுறையில் நீதித்துறைக்கு வேண்டியதை செய்து கொடுக்கும் பணிகள், வேதநாயகருக்கு சிலை வைப்பதிலிருந்து தொடங்கட்டும்!
யுத்தம் தொடரும்….

(Visited 65 times, 1 visits today)