பழங்காவிரியில் கால் நனைப்போம்!

mayura_yutham14

ஒரு முழு வெள்ளைத்தாள். அதில் எங்கோ ஓரிடத்தில் கறுப்பு புள்ளி. அதைக் காண்பித்து, ‘இது என்ன’ என்று கேட்டால், தாள் முழுக்க இருக்கும் வெண்மை நிறத்தைப்பற்றி சொல்ல மாட்டோம். ‘கறுப்பு புள்ளி உள்ளது’ என்போம். இதுதான் இயற்கை. சென்னையில் ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் பேரை சொன்னதும் பளீரென மூளைக்குள் வந்து போவது கூவம்தானே! அப்படித்தான் மயிலாடுதுறை என்றதும் நினைவுக்கு வருபவற்றில் பழங்காவிரிக்கு முக்கிய இடமிருக்கிறது. கூவத்தில் படகு சவாரி நடந்ததை இன்றைக்கு நம்ப முடியாததைப் போலவே, பழங்காவிரி தண்ணீரை நம்ம ஊர்க்காரர்கள் பயன்படுத்திய செய்தியும் வரலாற்றில் பதிந்து கிடக்கிறது. நகராட்சி பள்ளி மாணவர்கள் மதிய சாப்பாட்டுக்கு முன் கை, கால், முகம் கழுவி, வாய் கொப்பளித்தது பழங்காவிரி தண்ணீரில்தான் என்பதை நினைத்து பாருங்கள்..! பியர்லெஸ் திரையரங்கம் அருகே பழங்காவிரியில் காளியாகுடி ஓட்டலின் மாடுகள் தண்ணீர் குடித்ததையும், குளித்ததையும் கற்பனை செய்ய முடிகிறதா? இதெல்லாம் உண்மையிலும் உண்மை. இப்போது ரசாக் டவர் வணிக வளாகம் உள்ள பகுதியில், 200 மாடுகளுடன் பண்ணை அமைத்து, பால் கறந்து, அதில் கள்ளிச்சொட்டு போல காளியாகுடி போட்டுக்கொடுத்த காபிக்கு பழங்காவிரியும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.

காபியை விடுங்கள்…மல்லியம் சத்திரத்திற்கு அருகே ஆனைமேலரகம் கிராமத்தில், கங்கையைவிட புனிதமான காவிரி ஆற்றிலிருந்து பிரியும் பழங்காவிரி ஒரு காலத்தில் பெரிய பாசன வாய்க்கால் என்றால் நம்ப முடிகிறதா? ஆமாம்… அங்கிருந்து மூவலூர், சித்தர்க்காடு, ரயிலடி, கூறைநாடு, பட்டமங்கலம் தாண்டி முளப்பாக்கம், மன்னம்பந்தல், ஆறுபாதி, அடியாமங்கலம், செருதியூர்,குளிச்சாறு மற்றும் நல்லத்துக்குடி முதல் எலும்பிச்சம்பாத்தி வரை 2,841 ஏக்கர் நிலங்களில் பழங்காவிரியை நம்பித்தான் விவசாயம். சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமல்ல; நகருக்குள் இப்போதைய காவிரி நகரில் அன்றைக்கு இருந்த பெரும் வாழைத்தோட்டங்களுக்கும், கூறைநாடு பட்டமங்கல ஆராயத்தெருவின் தென்புறத்தில் அமைந்த வயல்களுக்கும் பாசன வாய்க்காலாக இருந்திருக்கிறது. (கால மாற்றத்தின் கட்டாயத்தால் அந்த நிலமெல்லாம் ஸ்ரீராம் நகர், மாருதி நகர், ரேவதி நகர், விஸ்வநாதபுரம் என உருமாறி விட்டது).

பாசனம் மட்டுமின்றி முக்கிய குளங்களுக்கு தண்ணீர் கொடுத்ததும் பழங்காவிரியே. மூவலூர் பெரியகுளம், சித்தர்க்காடு சம்பந்தன் குளம், கிட்டப்பா பள்ளிக்குப் பக்கத்திலுள்ள சமுத்திரி குளம், மாமரத்து மேடை குளம், தூக்கணாங்குளம், கூறைநாடு செம்மங்குளம், நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள குளம், கிளைச் சிறை அருகிலுள்ள மட்ட குளம் போன்றவற்றிற்கு தண்ணீர் தந்ததும் பழங்காவிரிதான். இது போக மழைக்காலத்தில் மயிலாடுதுறை நகரத்தின் வடிகாலாகவும் திகழ்ந்திருக்கிறது.

நீண்டு கொண்டே போகுமளவுக்கு பழம்பெருமைகள் கொண்ட பழங்காவிரி, மொத்தமிருந்த 14 கி.மீ நீளத்திலிருந்து 7கிலோ மீட்டராக சுருங்கி, அங்கங்கே சாக்கடையாகி இருப்பதுதான் தற்போதைய சகிக்க முடியாத நிலை. அதிலும் மயிலாடுதுறை நகர எல்லைக்குள் இருக்கும் 2 கி.மீ. தூரமும் வீடு, கடைகள் என கிட்டத்தட்ட 400 இடங்களில் ஆக்கிரமிப்புகளோடு குப்பை கழிவுகளின் புகலிடமாகவும் மாறி கிடக்கிறது. காவிரியில் பொங்கி வரும் வெள்ளத்தை உள்வாங்கி கொள்ளும் அளவுக்கு 57 அடி அகலத்தில் அகன்று விரிந்து பரந்திருந்த பழங்காவிரி இப்போது 10 அடி அகலத்திற்கு குறுகி விட்டது. சில இடங்களில் அதற்கும் குறைவுதான்.

பழங்காவிரியால் பயிர் விளைந்த நிலங்களில் வீடுகள் முளைத்துவிட்ட காரணத்தால், விவசாயத்திற்கு வேண்டுமானால் தண்ணீரின் தேவை குறைந்து போயிருக்கலாம். அதுவும் முற்றிலுமாக பாசனத்திற்கான தேவை இல்லை என்று சொல்லிவிட முடியாது. மயிலாடுதுறைக்கு கிழக்கே உள்ள கிராமங்களின் விவசாயத்திற்கு இப்போதும் பழங்காவிரிதான் பாசன ஆதாரம். ஆண்டுதோறும் தூர்வாரி பராமரிக்க வேண்டிய பொதுப்பணித்துறையின் கையாலாகாத்தனமும், கழிவு ஓடையாக மாற்றிய பொதுமக்களின் பொறுப்பின்மையும் போட்டி போட்டுக்கொண்டு பழங்காவிரியை கண்றாவியாக்கிவிட்டது. ‘குடி மராமத்து’ என்கிற தூர் வாருதல் ஒழுங்காக நடந்த காலத்திலேயே மயிலாடுதுறையைத் தாண்டி தண்ணீர் முழுமையாக செல்வதில் சிக்கல் ஏற்பட்ட போது, திம்ம நாயக்கன் படித்துறையிலிருந்து புதுப்பழங்காவிரி என்ற கால்வாயை உருவாக்கி நீரை பிரித்துவிட்டனர். அதனால் பெரிய பலன் ஏதுமின்றி அந்தக் கால்வாயும் இப்போது கதியற்று போயிருக்கிறது.

குப்பையில் தொடங்கி வீடு, கடை, உணவு விடுதிகள், மருத்துவமனை கழிவுகள் வரையிலும் இன்னும் சொல்லப்போனால், மலம் மிதக்கும் கால்வாயாக மாறிய பழங்காவிரியைச் சீரமைக்கும் எண்ணம் கால் நூற்றாண்டுக்கு முன்பே உருவாகிவிட்டது. கால்வாயைச் சீரழிக்கும் வேலைகள் தலையெடுக்கத் தொடங்கியதும், ‘நகருக்குள் இருக்கும் 2 கி.மீ.தூரத்தையும் பராமரிப்பில் எடுத்துக் கொள்ளத் தயார்’ என நகராட்சியே 1987 ல் தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து அந்தப் பகுதியை நகராட்சிக்கு ஒதுக்கித் தர சென்னையிலுள்ள நில நிர்வாக ஆணையருக்கு , 1989 ல் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார். என்ன காரணத்தாலோ அது கண்டுகொள்ளபடவே இல்லை. பிரச்சினை முற்றி, ஊரின் திருஷ்டி பரிகாரமாக பழங்காவிரி மாறிய காலத்தில், கழிவுகள் கலப்பதைத் தடுக்க மூத்த குடிமக்கள் அவையின் அன்றைய தலைவர் ஆறுமுகம் ஐ.ஏ.எஸ்., புங்கனூர் நுகர்வோர் அமைப்பின் விஜயகுமார் போன்றோரெல்லாம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்து உத்தரவுகளை வாங்கினர். ‘மூன்று மாதங்களுக்குள் பழங்காவிரியில் கழிவுகள் கலப்பதை நகராட்சி தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று 1997ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. மாசு கட்டுப்பாடு வாரியமும் ஆணையிட்டது. பின்னர் இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்திற்கும் போய் இன்றைக்கும் அங்கே தூங்கிக் கொண்டிருக்கிறது.

கண்டனம், வழக்கு, வாய்தா என்று போன போதெல்லாம் பழங்காவிரியைச் சீரமைக்க முடியாததற்கு முக்கிய காரணமாக மயிலாடுதுறை நகரத்தின் கழிவு நீரை என்ன செய்வது என்ற கேள்வி எழுந்து நின்றது. பாதாள சாக்கடை கொண்டு வந்தால்தான் பழங்காவிரிக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று அப்போது சொன்னார்கள். சரியோ, தவறோ அதில் ஒரு நியாயம் இருந்தது. பாதாள சாக்கடை வந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டனவே! பழங்காவிரியைச் சீரமைக்க இன்னும் என்ன தயக்கம்? சென்ற மாயூர யுத்தத்தில் பார்த்ததைப் போல, இதுவரை பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்காதவர்கள் பழங்காவிரியில்தானே கழிவுகளை விடுகிறார்கள். இதற்கு யார் பொறுப்பேற்பது? இன்னொரு பக்கம், இந்த ஆண்டு பழங்காவிரியில் ஏழரை கிலோமீட்டர் தூரம் தூர் வாரியதாக பொதுப்பணித்துறையின் கணக்கு சொல்கிறது. கண்ணெதிரே கால்வாய் அப்படியே இருக்க, எங்கே போய் தூர் வாரினார்களோ அவர்களுக்கே வெளிச்சம்! 1996ல் கும்பகோணத்தில் நடந்ததைப் போன்று பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி, பளிச்சென தூர் வாரினால் மாயூரமே புதுப்பொலிவு பெறுமல்லவா?! பொலிவு கிடக்கட்டும்…. சாக்கடை நீர் இல்லாத நிலத்தடி நீரும், கொசு இல்லாத ஒட்டுமொத்த நகரின் சுகாதார மேன்மையும், மழைக்காலத்தில் ஒழுங்கான வடிகாலும், பழங்காவிரி – பழைய பழங்காவிரியாக மாறினால் மட்டுந்தானே சாத்தியமாகும்..! யார் இந்த திருப்பணியைச் செய்வார்கள்? எப்போது இது நடக்கும்? பழங்காவிரியில் மீண்டும் வாய் கொப்பளிக்க வேண்டாம். கால் நனைக்கும் காலமாவது வருமா?

—————————- யுத்தம் தொடரும்…..

(Visited 76 times, 1 visits today)