சேவை அமைப்புகளால் முடியும்!

பத்திரிகையாளராக வாழ்வைத்தொடங்கி பின்னர் வழக்கறிஞரான அவர், தமது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து ஓர் அமைப்பை ஆரம்பித்தார். அவர்கள் வாரந்தோறும் சந்தித்து பேசி, செய்ய வேண்டிய பணிகளைத் தீர்மானிப்பது என்று முடிவானது. சுழற்சி முறையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவரின் இடத்தில் சந்தித்தனர். 110 ஆண்டுகளுக்கு முன்பு பால் ஹாரிஸ் என்பவரால் அமெரிக்காவின் சிகாகோவில் இப்படி தொடங்கப்பட்ட ‘ரோட்டரி’ அமைப்புதான் இன்றைக்கு உலகின் பல நாடுகளிலும் பரந்து விரிந்திருக்கிறது. அரிமா சங்கம்(லயன்ஸ் கிளப்) கூட போர் முகாம் ஒன்றில் பிறந்த அமெரிக்கரான மெல்வின் ஜோன்ஸ் என்பவரால் யதார்த்தமாக தொடங்கப்பட்ட அமைப்புதான்! ரோட்டரி, லயன்ஸ் என்றில்லை; ஜூனியர் சேம்பர் உள்ளிட்ட எல்லா சேவை அமைப்புகளுக்கும் இப்படியான வரலாறே இருக்கிறது. எவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும் மக்களுக்கான மொத்த தேவைகளையும் அரசாங்கமே பூர்த்தி செய்துவிட முடியாது. சிறியதாகவோ, பெரியதாகவோ இத்தகைய சேவை அமைப்புகளின் பணி முக்கியமானதாக அமைந்துவிடுகிறது.

அந்த அடிப்படையில் மயிலாடுதுறை போன்று அழுத்தப்பட்ட பகுதியில் சேவை அமைப்புகளின் பங்களிப்பு பல மடங்கு அதிகம் தேவைப்படுகிறது. இவ்வமைப்புகள் நினைத்துவிட்டால் ஊரையே நல்லவிதமாக புரட்டிப்போட்டுவிட முடியும். சமீபத்தில் மயிலாடுதுறையில் சிறு மற்றும் குறு தொழில்களுக்காக ஓர் அமைப்பு தொடங்கி அதன்வழியாக புதிய தொழில்முனைவோருக்கு வழிகாட்டும் அற்புதமான முன்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த பாஸ்கரன், முகுந்தன் உள்ளிட்டோர் பிற அமைப்புகளில் உள்ளவர்களையும் ஒருங்கிணைத்து இப்பணியை மேற்கொண்டுள்ளனர். சேவை சங்கங்கள் இத்தகைய பணிகளைத்தான் முன்னெடுக்க வேண்டும். இதுபோன்ற ஆக்கப்பூர்வ முயற்சிகள்தான் பின்தங்கிய நம்முடைய ஊருக்கு உடனடி தேவை.

ரோட்டரி, லயன்ஸ்,ஜேசீஸ், வணிகர் சங்கங்கள் போன்ற நிலையான ஒழுங்கமைவும் கட்டமைப்பும் கொண்ட அமைப்புகள் மட்டுமே நிலைத்த பலன் தரும் பணிகளைச் சிறப்பாக செய்யமுடியும். ஓரிரு தனி நபர்கள் ஆர்வத்துடன் ஆரம்பிக்கும் அமைப்புகளின் அடித்தளம் சரியாக இல்லாததால் தொடரமுடியாமல் போய்விடுகிறது. அவை எத்தகைய சிறப்பான முயற்சியாக இருந்தாலும் தொடர்ச்சியாக இயங்கவில்லை எனில் அதன் நோக்கமும் பணிகளும் நீர்த்துப் போய்விடும். ஆனால் மேற்சொன்ன அமைப்புகளில் இந்த பிரச்சினை இல்லை. ஆண்டுதோறும் புதிய நிர்வாகிகள் வருகிறார்கள். தங்களது பதவிக்காலத்தில் நல்லனவற்றைச் செய்ய வேண்டும் என அவர்களில் பலர் விரும்புகிறார்கள். கூடவே இச்சங்கங்களுக்கு கல்லூரிகளிலும், பள்ளிக்கூடங்களிலும் துணை அமைப்புகள் இருக்கின்றன. அதிலும் ரோட்டரிக்கு கிராமப்பகுதியில் கூட சமுதாயக்குழுமம் என்ற சார்பு அமைப்பு உள்ளது. அதனால் இவர்களெல்லாம் மனது வைத்தால் தங்கள் சக்தியோடு இளைஞர்களின் ஆற்றலையும் பயன்படுத்தி நிறைய செய்ய முடியும்.

அதற்கு முதலில் இவர்கள் தங்களைச் சுற்றிப் போட்டுக்கொண்டிருக்கும் சிறிய வட்டத்திலிருந்து வெளியில் வரவேண்டும். அவசர கதியில் ஒரு பதவியேற்பு விழா, அப்புறம் மாதம் ஒரு நிகழ்ச்சி என்ற எல்லையை உடைத்துவிட்டு அமைப்புக்கும் நிர்வாகிகளுக்கும் நிரந்தரமாக பெயர் வாங்கித்தரும் பணிகளைக் கையில் எடுக்க வேண்டும். அடுத்தடுத்து பொறுப்புக்கு வருகிறவர்களும் அதனைத் தொடர வழிவகை காணவேண்டும். நோட்டுப்புத்தகங்கள், பேனாக்கள், ஒரு புகைப்படம், முகநூல் விருப்பம் என்பதைத் தாண்டி பெயர் நிலைப்பதற்குச் செயல்படலாம். உதாரணத்திற்கு மயிலாடுதுறையிலுள்ள பூங்காக்களின் நிலைமை பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. ஒவ்வொரு சங்கமும் சில பூங்காக்களைப் பராமரிக்கும் பொறுப்பை நிரந்தரமாக எடுத்துக்கொண்டால் எப்படி இருக்கும் நினைத்துப் பாருங்கள். இதற்காக அரசாங்கத்தையோ, நகராட்சியையோ இவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஊரையே பச்சைப்பசேல் என மாற்றும் பொறுப்பை ஒரு சங்கம் எடுத்துக்கொண்டு தொடர்ந்து செய்யலாம். அப்படி செய்கிற போது அடுத்த 5 ஆண்டுகளில் ஊர் முழுக்க இருக்கும் மரங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட சங்கம் நட்டு வளர்த்தவை என்கிற பெயர் கிடைக்கும். கூடவே ஒட்டுமொத்த ஊரும் அவர்கள் புண்ணியத்தில் புதுக்காற்றைச் சுவாசிக்கும். கண் முன்னே தாங்கள் செய்த சேவையின் பலன் பெரும் உருவம் கொண்டு நிற்பதைக் கண்டு மகிழலாம்.

இதைப்போலவே பெண்களுக்கென இருக்கும் சங்கங்கள் தனித்துவமான மகளிர் மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்ளலாம். இவை மட்டுமின்றி மத்திய, மாநில அரசுகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் நலப்பணிகளுக்காகவும் மக்கள் மேம்பாட்டிற்காகவும் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை ஒதுக்குகின்றன. அவற்றை முறையாக பெற்று ஊருக்கு நல்லது செய்வதற்கான முயற்சிகளில் சேவை அமைப்புகள் ஈடுபடலாம்.

நேரடி சேவைப்பணிகளைப் போலவே ஊரின் புகழை உயர்த்திப்பிடிப்பதற்கான வேலைகளும் அவசியமானவை. நம்முடைய மண்ணில் பிறந்த கவிச்சக்கரவர்த்தி கம்பனை உலகமே கொண்டாடும்போது குத்தாலத்திலோ, மயிலாடுதுறையிலோ வலுவான கம்பன் கழகம் இருக்கவேண்டியது அவசியமல்லவா? அதைப்போலவே தமிழ் தாத்தா உ.வே.சா வந்து தமிழ் கற்றுக்கொண்ட மயிலாடுதுறையில் ஒரு தமிழ்ச்சங்கம் வேண்டுமல்லவா? இவை பெயருக்கான அமைப்புகளாக இல்லாமல் தொடர்ச்சியான இயக்கம் கொண்டவையாக, அடிப்படையான நிதி ஆதாரம் கொண்டவையாக உருவாக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பதாக அமைந்தால் சிறப்பாக இருக்கும். சில ஆண்டுகளாக குத்தாலம் ஆதிசங்கரர் பேரவை அத்தகைய பாதையில் பயணிக்கத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரியது. இப்படியான அமைப்புகள் உருவாகும்போது ‘‘ஆண்டுதோறும் மயிலாடுதுறை புத்தக திருவிழா’’ என்பது போன்ற உயரிய நோக்கங்களை வென்றெடுக்க முடியும். ஆயிமாயிரம் பேரை மாயூரத்தின் பெயரைச் சொல்ல வைக்க முடியும்.

இதெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே. 50 ஆண்டுகளாக பெரிய வளர்ச்சி இன்றி கிடக்கும் மாயூரத்தை எல்லா தளத்திலும் மேம்படுத்துவதற்கு ஏராளமாக செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கு சேவை அமைப்புகளிடையே ஒருங்கிணைப்பும் குறைந்தபட்ச புரிதலும் ஏற்படுதல் முதல் தேவையாகும். அவற்றை மக்கள் பிரதிநிதிகள்தான் முன்னின்று உருவாக்க வேண்டும். அந்தளவுக்கு ஆளுமை உடையோர் இங்கே இல்லை என்கிறபோது பல ஆண்டுகளாக சேவை அமைப்புகளில் தொடர்ந்து இயங்குவோர் இதற்காக முயற்சிக்கலாம். இதன் மூலம் அந்தந்த அமைப்புகளின் தனித்தன்மையும் முக்கியத்துவமும் பாதிக்கப்படாத வகையில் கூட்டாக சில பணிகளை எடுத்து செய்யலாம். தொடக்கத்தில் ‘இது சாத்தியப்படாது’ என்பதைப் போன்று தோன்றினாலும், ஏதாவது ஓர் அமைப்பு தனியாகவோ, ஒன்றிரண்டு அமைப்புகள் சேர்ந்தோ பெரியளவுக்குப் பயனளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வெற்றி கண்டுவிட்டால், பிறகு எல்லா சங்கங்களின் பார்வையும் அப்படிப்பட்ட திட்டங்களை நோக்கி திரும்பும். அதன் பிறகு நாம் நினைத்துப்பார்க்காத நன்மைகள் கூட மிக எளிதாக நிறைவேறும். மயிலாடுதுறை பகுதியிலுள்ள சேவை அமைப்புகளில் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக செயல்படும் சக்தியும் திறமையும் பெற்றவர்கள். தன்னையும், தன்னுடைய தொழிலையும் மட்டுமல்லாமல் இந்த ஊரையும் மேம்படுத்தும் சிந்தனை கொண்டவர்கள். இவர்களால் முடியாவிட்டால் வேறு எவரால் முடியும்?!
யுத்தம் தொடரும்…..

(Visited 85 times, 1 visits today)