100, 200 ஆண்டுகள் தாண்டிய கட்டடங்களைப் பாதுகாத்து பராமரிக்கும் பழக்கம் மேலை நாடுகளில் உண்டு. அதிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் அவற்றையெல்லாம் பொக்கிசம் போல அசலழியாமல் வைத்திருப்பார்கள். ஆதியில் பூசப்பட்ட வண்ணத்தில் கூட கை வைக்காத கட்டடங்கள் ஏராளம்.வளர்ச்சியில் எங்கோ போய்விட்ட லண்டன், பாரீஸ் போன்ற பெருநகரங்களில் இருக்கிற புராதன கட்டடங்கள் கலையின் வடிவங்களாக, காலப்பெட்டகமாக நிற்கும் அழகைக் காண கண்கோடி வேண்டும். சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை, டெல்லி செங்கோட்டை போன்றவையும் இப்படிப்பட்டவைதான். வித்தியாசம் என்னவென்றால், அவர்கள் பாரம்பரியத்திற்காக வைத்திருக்கிறார்கள்; நாம் வேறு வழியின்றி (அல்லது) வளர்ச்சி பற்றி சிந்திக்காமல், அவற்றை அலுவல் பயன்பாட்டு இடங்களாக்கி இருக்கிறோம். கட்டடங்கள் போகட்டும். தமிழகத்தில் ஒரு நகரம், ‘பழமை மாறாமலேயே’ கிடக்கிறதே?!. ‘அன்றைக்குப் பார்த்ததைப் போல’ – அப்படியே இருக்கும் நம்முடைய மயிலாடுதுறையில் பழைமையைப் பறைசாற்றிய படி இருக்கும் பாழடைந்த கட்டடங்கள் சொல்லும் கதைகள் கொஞ்ச, நஞ்சமல்ல!

1951 ஜூலை 3 ஆம் தேதி, பழைய சென்னை மாகாண முதன்மந்திரி குமாரசாமி ராஜா திறந்து வைத்த அடையாளத்தைச் சுமந்திருக்கும் நகராட்சி பிரசவ ஆஸ்பத்திரி கட்டடத்தின் வயதை நீங்களே கணக்கு போட்டு பாருங்கள். இதைப்போலவே ஈனசுரத்தில் முனகிக்கொண்டு, நம்முடைய கையாலாகத்தனத்தைக் கடைவிரித்து காண்பிக்கும் கட்டடங்கள் மாயூரத்தில் நிறைய இருக்கின்றன. முற்றிலுமாக உருக்குலைந்து போய், ‘சரக்கு’ அடிப்பதற்கும் இன்ன பிற சமூக விரோத செயல்களுக்குமான இடங்களாக மாறிவிட்ட நகராட்சி மற்றும் அரசு இடங்களைக் கணக்கெடுத்தால், கோபம் கொப்பளிக்கிறது. ‘அடப்பாவிகளா…! இவ்வளவு இடங்கள் குட்டிச்சுவர்களாக இருந்தும் இந்த ஊருக்கு ஒரு கலையரங்கம் கூட இல்லையே’ என்று ஏங்கத் தோன்றுகிறது.

பொதுவான நிகழ்ச்சிகளை நடத்த, விழாக்களை எடுக்க, மற்ற ஊர்களில் இருப்பதைப் போல நகரின் மையத்தில் ஓர் அரங்கம் இருக்க வேண்டாமா? இவ்வளவு பெரிய நகராட்சியில் எல்லாரும் பயன்படுத்தும் வகையில் ஒரு திருமண மண்டபம் வேண்டுமல்லவா? நகருக்கு வெளியே சித்தர்க்காட்டில் அண்ணா பெயரில் நிற்கும் திருமண அரங்கமும் அலட்சிய பராமரிப்பால் அனாதரவாகிவிட்டது. இடையில் ஒரு முறை திருமண மண்டபம் கட்டுவதற்கு யோசித்த நகராட்சி, ‘ஊருக்குள் 60 மண்டபங்கள் இருக்கும் போது நாம் ஏன் அதெல்லாம் செய்ய வேண்டும்?’ என முடிவைக் கைவிட்டதாக சொல்கிறது. மக்கள் நலனுக்காக(!) எப்படியெல்லாம் யோசித்திருக்கிறார்கள் பாருங்கள்?

நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே, பழங்காவிரியைப் பார்த்தபடி இருக்கிற நகராட்சி இடத்தில் மணிசங்கர் அய்யர் எம்.பி. நிதியிலிருந்து சமுதாய அரங்கம் கட்டுவதற்கான முயற்சிக்கும் தடை போடப்பட்டது. அதனால் அந்த அரங்கம் காவேரி நகரில் பழைய சுற்றுலா மாளிகை இருந்த இடத்தில் கட்டப்படுகிறது. ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் 75 லட்ச ரூபாய் செலவில் எழும்பும் அரங்கம், எந்தளவுக்கு எல்லாருக்கும் பயன்படும் என்பது தெரியவில்லை. முன்பு திட்டமிடப்பட்ட இடமோ, நகரின் நடுவே கண்றாவியாக கிடக்கிறது.

மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப அதிகரிக்கும் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான இடங்கள் இருந்தும் அதனை முறையாக பயன்படுத்த தவறிய குற்றம் யாருடையது? தரங்கம்பாடி சாலையில் பழைய கால்நடை மருத்துவமனை கட்டடங்கள், வண்டிப்பேட்டை, திருவாரூர் மார்க்க பேருந்து நிலையத்திற்குள்ளே புழுதி படிந்து பூட்டிக்கிடக்கும் கட்டடங்கள், பட்டமங்கலத்தெரு, பசுபதி தெரு ஆகியவற்றில் பல ஆயிரம் சதுரடி இடங்கள், எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு அருகேயுள்ள இடம், ஞானம்பிகை கல்லூரிக்கு முன்பு புழக்கமின்றி இருக்கும் பொறியாளர் விடுதி, முதன்மைச் சாலையில் இருக்கும் கூறைநாடு ஆயுர்வேத மருத்துவமனை இடம், நெல்லுக்கடைச் சந்து, மேளக்கார சந்தில் முன்பு நகராட்சி பள்ளிக்கூடம் நடந்த இடம் – நகரத்திற்குள் இப்படி கைவிடப்பட்ட இடங்களின் பட்டியல் நீள்கிறது. இந்த இடங்களை மக்கள் பயன்பாட்டுக்கான இடங்கள் மாறுவது எப்போது?

மக்களின் தேவைகளைத் தாண்டி அரசு அலுவலங்களுக்கே நிறைய இடங்கள் தேவைப்படுகின்றன. மாவட்ட கல்வி அலுவலகம், வேளாண்மைப் பொறியியல் , இந்து சமய அறநிலையத்துறை , ஆதி திராவிடர் நல தனி வட்டாட்சியர், நிலச் சீர்த்திருத்த இணை ஆணையர், தனித்துணை வட்டாட்சியர் வருவாய் நீதிமன்றம் என ஏகப்பட்ட அரசு அலுவலங்கள் வாடகை இடங்களில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் தேவைகள் அதிகரித்துக்கொண்டே போகும் போது, இன்னொரு புறம் குட்டிச்சுவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது சரியா? இவற்றையெல்லாம் மாற்றப்போகிறோமா, இல்லாவிட்டால், ஊரே குட்டிச்சுவராகி விட்டது என்பதைக் காட்டுவதற்காக அப்படியே விட்டு வைக்கப் போகிறோமா?

—— யுத்தம் தொடரும்…..