அண்ணாந்து பார்த்தால் கழுத்து சுளுக்கி கொள்ளும் கட்டிடங்களும் நிற்கின்றன. அதற்குப் பக்கத்திலேயே மரங்கள் பச்சை பசேலென்று கண்களுக்கு குளிர்ச்சியை அள்ளி வீசுகின்றன. மக்கள் நெருக்கடி அதிகமிருந்தாலும் குப்பை, கூளம் எதுவுமின்றி ஊரே பளிச்சென்று இருக்கிறது. ஊருக்கே ஒரே ஓர் ஆறுதான். இருந்தாலும் ஒரு சொட்டு மழைநீர் கூட வீணாவதில்லை. அத்தனை கச்சிதமான மழைநீர் சேகரிப்புத் திட்டமும், வடிகால் வசதியும் இருக்கிறது . மதம்,சாதிகளைவிட பெரிய பிரிவினை சக்திகளான இனம், மொழி இரண்டிலும் வேறுபட்டவர்கள் நிரம்பியிருக்கிறார்கள். அப்படியிருந்தும் எல்லோரின் குரலும் ஒன்றாகவே ஒலிக்கிறது. அவர்கள் ஒன்றாகவே நடத்தப்படுகிறார்கள். எல்லாவற்றிலும் பளிச்சென தெரியும் ஒழுங்கு. அதே நேரத்தில், உற்சாகத்திற்கும் மகிழ்ச்சிக்கும் குறைவில்லை. நினைத்தபடி எல்லாம் நடக்காமல் எச்சில் துப்புவதில் கூட விதிமுறைப்படியே மக்களும் நடந்துகொள்கிறார்கள். நாம் கதைகளில் படித்திருக்கும் சொர்க்கத்தை கிட்டத்தட்ட கண்ணெதிரே காட்டும் சிங்கப்பூர் பற்றி இப்படி பக்கம், பக்கமாக பேசிக்கொண்டே போகலாம்.

சொர்க்கத்தைப் படைத்த கடவுள், அளவெடுத்து வைத்ததைப் போல சிங்கப்பூரையும் ரெடிமேடாக உருவாக்கி விட்டானா என்ன? எப்படி அங்கே மட்டும் எல்லாம் ஒழுங்காக இருக்கிறது? இத்தனைக்கும் அது ராணுவ தேசமும் இல்லை. குடியரசு நாடுதான். பிறகெப்படி இதெல்லாம் சாத்தியமானது? தண்ணீருக்கும் உணவுக்கும் கூட மலேசியா போன்ற மற்ற நாடுகளைச் சார்ந்து இருக்குமளவுக்கு இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட சிங்கப்பூர், உலகின் வளமான நாடுகளின் பட்டியலில் எப்படி 4வது இடத்தைப் பிடிக்க முடிந்தது? ஆக்கப்பூர்வமான சிந்தனைகொண்ட மக்களும், அவர்களை அதி அற்புதமாக வழிநடத்திய ஒரு தலைவனும் தான் இன்றைய சிங்கப்பூரின் அடித்தளம்.

இனச்சண்டையும், மதச்சண்டையும் தலைவிரித்தாடி மனித ரத்தம் குடித்து கொண்டிருந்த காலம் அங்கேயும் உண்டு. குடிசைகளும் குடலைப்புரட்டும் சாக்கடையுமாக கிடந்த பகுதிகளும் அதிகம். கம்யூனிசத்தின் ஆதிக்கத்தால் தீவிரவாத முத்திரை வேறு. சிங்கப்பூரை, தன் நாட்டின் ஒரு மாநிலமாக கூட ஏற்றுக்கொள்ளாமல் மலேசியா உதாசீனப்படுத்திய சூழலில் உருவான தேசத்தை மறு நிர்மாணத்திற்கு வித்திட்ட சிற்பி லீ குவான் யூ என்ற தலைவர்தான்! அதன்பிறகு அங்கே நடந்த எல்லா மாற்றங்களுக்கும் அவரோடு சேர்ந்து உழைத்த, ஒத்துழைத்தவர்கள் அந்த மண்ணின் மைந்தர்களே!

அத்தகைய மாற்றம், ஏற்றம் நம்முடைய ஊருக்கும் வரவேண்டும் என நினைப்பே எவ்வளவு இனிக்கிறது? நடந்துவிட்டால் எப்படி இருக்கும்? மயிலாடுதுறை சிங்கப்பூர் ஆக முடியுமா? என்றால் , ஏன் முடியாது என்பதே என் பதில். அதற்கான நெருப்புப் பொறி நம் ஒவ்வொருவருக்குள்ளும் விழ வேண்டும். அது பெருஞ்சுடராக எழுந்திட வேண்டும். தேங்கிக் கிடக்கும் மாயூரம், தேசமே திரும்பி பார்க்கும் வகையில் மாற வேண்டும் என்ற ஆசை, கனவு மயிலாடுதுறை நகரில் மட்டுமல்லாது, சுற்றி இருக்கும் கிராமத்து மக்களிடமும் வேர் விட வேண்டும். நாள், கிழமை, நல்லது, கெட்டது என எல்லாவற்றிலும் காலங்காலமாக நம்மோடு ஒன்றிப் போன இந்த ஊர் பொலிவும் வலிவும் பெற்றால்தான் நம் வாழ்வும் பொலிவடையும் என்ற எண்ணம் அவர்களுக்கும் வரவேண்டும். உள்கட்டமைப்பில், பொருளாதாரத்தில் மயிலாடுதுறை வளர்ந்துவிட்டால், அதன் பலன் சுற்றியிருக்கும் அத்தனை கிராமங்களிலும் எதிரொலிக்கும் என்பதை அவர்கள் ஐயமின்றி உணர வேண்டும்.

அதோடு சிந்தனை ஒற்றுமையும் நமக்கு முக்கியம். நம்முடைய கோரிக்கைகள் ஒவ்வொன்றுக்காகவும் தனித்தனியாக குரல் கொடுக்கிறோம். போராட்டங்களை முன்னெடுக்கிறோம். மனு கொடுக்கிறோம். ஆனால் இவையெல்லாம் வெகு மக்கள் இயக்கமாக மாறினால், மாற்றங்களைத் தேடி நாம் போக வேண்டியதில்லை. நம்மைத்தேடி மாற்றங்கள் வருமல்லவா? அண்மையில் மயிலாடுதுறை, குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் வணிகர் சங்கத்தினர் முன்னெடுத்த கடையடைப்புப் போராட்டம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படி மாற்றத்திற்கான தேவையை ஒவ்வொருவருக்கும் புரியவைக்க அரசியல் , அமைப்புகள், லாபம், நட்டம், விருப்பு, வெறுப்பு எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு ‘ஊருக்கு நல்லது செய்வோம்’ என்ற முழக்கத்தோடு நாம் ஒன்று சேர வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அதுமட்டுமா! ‘இந்த ஊர் மாறியே தீர வேண்டும்’ என்ற எண்ணம் மயிலாடுதுறையிலும் அதைச்சுற்றியும் உள்ள மக்களிடம் உருவானால், கடந்த இதழில் நான் ஏக்கத்துடன் எழுதியிருந்த ஒரு செயல்திறன்மிக்கத் தலைவர் அவர்களிடமிருந்தே உருவாகிவிடுவார். பிறகென்ன? மக்கள் மனதிலும் ஊரை மாற்றும் எண்ணம் உதித்து, அதற்கு ஒரு தலைவனும் கிடைத்துவிட்டால், மயிலாடுதுறை சிங்கப்பூர் ஆகாதா என்ன? பழங்காவிரியில் படகு போக்குவரத்து நடக்காதா என்ன? அதென்ன மயிலாடுதுறையை மட்டும் சொல்கிறீர்கள், நம்முடைய மாநிலம், நாடு அப்படி மாற வேண்டாமா என்று நீங்கள் கேட்டால், முதலில் நம்மிலிருந்து, நம்முடைய ஊரிலிருந்து தொடங்குவோம். எல்லா மாற்றங்களுக்கும் முதல் புள்ளி என ஒன்று இருக்குமே, அது நாமாக இருப்போம். என்ன சரிதானே?