60 வயதிற்கு மேல் சர்க்கரை நோய் வந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. கொஞ்ச,கொஞ்சமாக 50, 40 என ஆகி இப்போது 30 + வயதுகளிலேயே ‘சுகர்’ மிரட்டிக்கொண்டிருக்கிறது. கிட்டதட்ட தேசிய நோயாகிவிட்ட நீரிழிவுக்கு எல்லாவற்றையும் விட நாள்தோறும் நடப்பதே அருமருந்து என்கிறது மருத்துவம். இதற்காகவே எல்லா ஊர்களிலும் பூங்காக்களை மேம்படுத்தி, நடைபயிற்சிக்கென தனி பாதை அமைத்திருக்கிறார்கள். நடப்பதற்கு மட்டுமல்ல… வீட்டை விட்டு வெளியே வந்து மக்கள் கொஞ்ச நேரம் இளைப்பாறுவதற்கு, குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்கு, பரப்பரப்பான வாழ்வின் நடுவே பச்சை பசேல் என மரம் செடி கொடிகளை, பூக்களை ரசித்து மகிழ்வதற்கு என பூங்காக்கள் அவசியத் தேவைதானே? அதிலும் பொருட்செலவு ஏதுமின்றி ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மனசை லேசாக்குவதில் பூங்காக்களின் பங்கு பெரிதல்லவா?

பூங்காவில் நடைபயிற்சி, பொழுது போக்கு, மனமகிழ்ச்சியை எல்லாம் விட்டுத்தள்ளுங்கள்… ஒழுங்கான பூங்காக்களே இல்லாத ஊரை உங்களுக்குத் தெரியுமா? வேறெது….? பாவப்பட்ட மயிலாடுதுறை நகரம்தான்! என்ன பூங்காவே இல்லையா? எனக் கொதித்தெழுந்து நகராட்சி ஆவணங்களைப் பூதக்கண்ணாடி வைத்து தேடினால் மொத்தம் 39 பூங்காக்கள் நகருக்குள் இருப்பதாக கணக்கு சொல்கிறது.சரி அதெல்லாம் எங்கே என்று தேடினால் தலை சுற்றுகிறது. ‘தேடினாலும் கிடைக்காது’ என்பதைப்போல பல இடங்களில் குப்பை மேடுகளாகவும் , கழிவுகள் குவிந்து அடையாளம் இழந்து குட்டிச்சுவர்களாக கிடக்கின்றன. இன்னும் சில இடங்களில் பெயருக்கு இருக்கும் பூங்காக்கள் சட்டவிரோதச் செயல்களின் புகலிடமாக இருக்கிறது.மாருதி நகர் சிறுவர் பூங்கா இதற்கு உதாரணம். நகருக்கு நடுவே இருக்கும் வரதாச்சாரி பூங்காவும் இதற்கு விதிவிலக்கல்ல. இங்கே நுழைந்தால் குடலைப் புரட்டும் துர்நாற்றத்தை மட்டுமல்ல; உள்ளே நடக்கும் துர்செயல்களையும் உணர முடியும். ரோட்டரி பள்ளிக்கூடம் எதிரே முழுதுமாக தனியாரால் சுற்றிவளைக்கப்பட்டிருக்கும் நாச்சிமுத்து நகர் பூங்கா, நீதிமன்ற வழக்கில் இருக்கிறது. பாதியில் நிற்கும் கட்டுமான பணிகளால் கந்தர்கோலமாக கிடக்கிறது கணபதி நகரிலுள்ள நேரு பூங்கா.

தனியாரைப் போலவே நகராட்சியால் கபளீகரம் செய்யப்பட்டிருக்கிறது பழைய சுந்தரம் தியேட்டர் எதிரே இருந்த குடியரசுப் பூங்கா. இப்போது அந்த இடத்தைப் பார்ப்பவர்களுக்கு, ‘ என்ன இங்கே பூங்கா இருந்ததா?’ என்ற அதிர்ச்சி கேள்வி எழும். ஆமாம் உற்றுப்பார்த்தால், தேவாலயத்திற்கு எதிரே ஒரு கூண்டுக்குள் வெள்ளை நிறத்தில் காந்தி சிலை இருப்பது தெரியும். காந்தி மட்டும் மௌன சாட்சியாக நிற்க, பூங்கா இருந்த இடத்தில் கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டுவிட்டது நகராட்சி. ஏ.வி.சி திருமண மண்டபத்திற்கு எதிரே இருந்த நந்தவனமும் காணாமல் போன பூங்காக்களின் பட்டியலில் உள்ளது. இதையெல்லாம் பார்த்து பராமரிக்க வேண்டிய நகராட்சி என்ன செய்கிறது? ‘‘ நாங்கள் என்ன செய்ய முடியும்? தொண்டு நிறுவனமோ, தனிநபர்களோ முன்வந்து பூங்கா பராமரிப்புகளை ஏற்றுக்கொண்டால்தான் அவற்றை நிர்வகிக்க முடியும்’’ என்று கைகளை விரிக்கிறார்கள். அது சரி… ஆண்டுக்கணக்கில் ஆணையர் கூட இல்லாமல், பொறுப்பு ஆணையரை வைத்து வண்டியை ஓட்டும் நகராட்சியிடம் இதைத்தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும்?! உங்களால் தான் முடியவில்லை. போகட்டும். தனியார் பராமரிப்பில் விடுவதற்கான முன்முயற்சியையாவது நகராட்சி எடுக்கலாம் அல்லவா? அவர்கள் செய்யாவிட்டால் வேறு யார் இதனை செய்ய முடியும்? லட்சத்தை நெருங்கும் மக்கள் தொகை கொண்ட நகரில் வார்டுக்கு ஒரு பூங்காவாது இருக்க வேண்டாமா? 36 வார்டுகளில் இருந்து போன கவுன்சிலர்கள் இதனைக் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? கவலைப்பட வேண்டிய மக்களே கண்டுகொள்ளவில்லை; நாம் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும் என்று விட்டுவிட்டார்களோ?

இல்லாததைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் நாம் இருப்பதைப் பற்றி பேசாமல் விட முடியுமா? மக்கள் விழிப்போடு இருந்து பராமரிக்கும் பெசன்ட் நகர் பூங்கா இதற்குச்சான்று. மற்ற பூங்காக்களை அனாதையாக விட்டுவிட்ட நகராட்சி கூட இந்தப் பூங்காவுக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கியிருக்கிறது. அதனால், நடைபயிற்சிக்கான பாதை, சிறு விளையாட்டுகளுக்கான தளங்கள் என பெரு நகரங்களில் கார்ப்பரேட் நிறுவனம் பராமரிக்கும் பூங்காவைப் போல திகழ்கிறது. அந்தப்பகுதியிலுள்ள குடியிருப்போர் நல அமைப்புகளின் முன் முயற்சியால் இதனை சிறப்பாக பராமரிக்கிறார்கள். இவ்வளவு பெரிய ஊரில் இது ஒன்றுதான் பூங்கா.

மயிலாடுதுறையின் மற்ற பகுதியிலுள்ளவர்கள், மக்கள் பிரதிநிதிகளையோ, நகராட்சியையோ பிடித்து உலுக்கி, பெசன்ட் நகரைப்போல உங்கள் பகுதி பூங்காவுக்கும் உயிர் கொடுக்க முடியாதா? மந்திரத்தால் மாங்காய் காய்க்கும் எனக் காத்திருக்கப் போகிறீர்களா? மனசு வைத்து மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறீர்களா?

யுத்தம் தொடரும்….