தீபாவளி – பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் என சில பண்டிகைகளைத் தவறாமல் கொண்டாடுகிறோம். இவை தவிர ஆண்டு முழுக்கவும் சின்னச் சின்னதாக கொண்டாட்டங்கள் இருக்கின்றன. கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் எல்லாம் குறிப்பிட்ட காலங்களில் திருவிழாக்களால் களைகட்டி இருப்பதைப் பார்க்கிறோம். இதெல்லாம் எதற்காக செய்கிறோம்? அல்லது ஏன் செய்ய வேண்டும்? புதுச்சட்டைகளைப் போடுவதற்கும் வாய்க்கு ருசியாக சாப்பிடுவதற்கும் மட்டுமா? அல்லது மகிழ்வதற்கு ஏதோவொரு காரணம் வேண்டும் என்பதற்காகவா? இல்லையென்றால் வேறு எதற்காக?

சரி…பொதுவான கொண்டாட்டங்களை விடுங்கள். பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாள் என நம்முடைய வீடுகளில் கொண்டாடுகிறோமே அதெல்லாம் எதற்காக ? நமக்கு நாமே உற்சாகப்படுத்தி கொள்ள, முன்னோர்களை நினைவுபடுத்தி கொள்ள, நம்முடைய அடையாளம் தொலைக்காமல் இருக்கத்தானே? இதைப்போலவே கலாச்சாரத்தை, பண்பாட்டை, எல்லாவற்றுக்கும் மேலாக அடையாளத்தைக் காப்பாற்றிக்கொள்ளத்தானே பண்டிகைகள், திருவிழாக்கள் எல்லாம் காலங்காலமாக கொண்டாடப்படுகின்றன. இனிமேல் விரதமோ, வேடிக்கையோ, விழாவோ, கொண்டாட்டமோ எதுவுமில்லை என்றால் என்னவாகும் எண்ணிப்பாருங்கள். மதங்களுக்கு, மனிதர்களுக்கு, ஊர்களுக்கு ஏதாவது அடையாளமிருக்குமா? எல்லாம் களையிழந்து போய்விடாதா? ஆடையிருந்தும் அடையாளமில்லாமல் ஆகிவிட மாட்டோமா? அப்படி ஆகித்தான் அனாதரவாக நிற்கிறது நம்முடைய ஊரும்!

மயிலாடுதுறையிலும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலும் எத்தனை, எத்தனை சிறப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. சிறப்புக்குரியவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். எதையாவது நாம் கொண்டாடுகிறோமா? இவர்கள் யாரையாவது நாம் போற்றுகிறோமா? தமிழ் கூறும் நல்உலகமே கவிச்சக்கரவர்த்தி என போற்றும் கம்பனுக்கு இதுவரை என்ன செய்திருக்கிறோம்? எங்கோ காரைக்குடியிலும் சென்னையிலும் கடல் கடந்து பாரீஸ் மாநகரிலும் இருக்கும் கம்பன் கழகங்கள் போன்று ஒரே ஓர் அமைப்பு இங்கே உண்டா? அங்கே எல்லாம் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் கம்பன் விழாக்கள் நம்மூரில் ஏன் நடக்கவில்லை? நம்மிடம் தமிழ் படித்தோர் யாருமே இல்லையா? தமிழின் முதல் நாவல் ஆசிரியர் என இலக்கிய உலகம் மதிக்கிற மாயூரம் வேத நாயகம் பிள்ளையின் சிலை, பாழடைந்த கல்லறைகளுக்கு இடையே சீரழிந்து கிடப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? நூற்றாண்டுகளுக்கு முந்தைய சூழலில் எழுத்துலகப் புரட்சியாக தாழ்த்தப்பட்ட சமூகத்து நந்தனை கதாநாயகனாக்கி ‘நந்தனார் சரித்திரம்’ படைத்த ஆனந்தாண்டவபுரத்து கோபாலகிருஷ்ண பாரதிக்கு நடந்த விழா, ஆதரிப்பார் குறைந்ததால் களையிழந்தது தெரியுமா? நந்தனார் பிறந்த மேலா நல்லூரில் அவர் வெட்டிய குளத்தைத் தவிர வேறு எதை வைத்திருக்கிறோம்?

புத்தக கண்காட்சிகளில் எல்லாம் இன்றைக்கும் அதிகளவில் விற்கும் நெ.1 புத்தகமான பொன்னியின் செல்வனை எழுதிய நம்முடைய புத்தமங்கலத்து கல்கியை மறக்காமல் கொண்டாடி மகிழந்திருக்க வேண்டாமா? சாண்டில்யனையும், சா.கந்தசாமியையும் நினைக்காமல் விட்டது முறையா? நாதசுர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையை நம்மில் எத்தனை பேருக்கு ஞாபகமிருக்கிறது? நாட்டிய உலகில் இன்றும் பின்பற்றப்படும் ‘ வழுவூரார் பாணி’யை அளித்த வழுவூர் ராமையாப்பிள்ளையை நினைவுப்படுத்தி கொண்டிருக்க ஏதாவது செய்திருக்கிறோமா?

இந்திய விடுதலைப்போரில் நம்முடைய ஊரின் பங்களிப்பு சாதாரணமானதா? காந்தியடிகள் எத்தனை முறை மாயூரத்திற்கு வந்து போய் இருக்கிறார். ஓர் இடத்திலாவது அதனை நினைவு படுத்தும் அடையாளங்களை பளிச்சென வைத்திருக்கிறோமா? ‘என்னுடைய சத்தியாகிரக போராட்டத்திற்கு தூண்டுகோலாக திகழ்ந்தவர்’ என்று காந்தியால் போற்றப்பட்ட தியாகி வள்ளியம்மையைத் தில்லையாடிக்கு வெளியே எத்தனை பேர் நினைத்து பார்த்திருக்கிறோம்? காந்தி வணங்கிய தில்லையாடி மண்ணை நம் குழந்தைகளுக்கு காட்டியிருக்கிறோமா? குழந்தைகளை விடுங்கள் . நம்மில் எவ்வளவு பேர் அந்த ஊரை பார்த்திருக்கிறோம்?

பெண்ணுரிமைக்காக போராடி சமூக தளத்தில் பெரிய புரட்சி செய்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரை நினைவு கூற நம்மிடம் என்ன இருக்கிறது? குறைந்தபட்சம் ஒரு சிலையாவது இங்கே உண்டா? மொழிப்போரில் உயிர் கொடுத்தானே சாரங்கபாணி ! ஒரு மேம்பாலத்திற்கு அவன் பெயர் வைத்ததோடு கடமை முடிந்து விட்டதாக வீசி எறிந்துவிட்டோமே, அது சரியா? வாழ்நாளெல்லாம் விவசாயிகளுக்காக குரல் கொடுத்து, பச்சைத்துண்டுக்கென மரியாதை வாங்கித் தந்த நாராயணசாமி நாயுடு பெயரை ஒரு பள்ளிக்கூடத்திற்கு வைத்தது மட்டும் போதுமா?

இப்படி பட்டியல் போட இன்னும் ஏராளமானவை இருக்கின்றன. இருந்தும் என்ன செய்திருக்கிறோம் நாம்? அதன் விளைவுதான் நம்முடைய ஊரின் இன்றைய வீழ்ச்சி. அடையாளமற்ற நகரமாக சுருங்கி, அக்கம்பக்கத்து ஊர்களைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி இருக்கும் பெருமைகளை எல்லாம் கொண்டாடும் தலைநகரமாக மயிலாடுதுறை மாறினால்தானே மற்றவர்களின் கவனம் நம் ஊர் மீது திரும்பும்? அப்போதுதானே ‘ஆயிரமானாலும் மாயூரமாகாது’ என நாம் மார்தட்டி கொள்வதில் கொஞ்சமாவது அர்த்தமிருக்க முடியும்?!

– கோமல் அன்பரசன்