மனிதனுக்கு முக்கியமானது இதயமா? மூளையா? என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? இரண்டும்தான் அவசியம். இதயம் துடிப்பதுதான் உயிர் வாழ்வதற்கான அடையாளம். அதற்காக இதயம் மட்டுமே துடித்துக்கொண்டு, மூளை செயலிழந்து விட்டால் பயன் உண்டா?! அத்தகையோரை மூளைச்சாவு அடைந்தவர்கள் எனக்கூறி உடலில் இருந்து உறுப்புகளை எடுத்து தானம் செய்துவிடுகிறார்களே! மனிதர்களைப் போலவே ஊர்களுக்கும் இதயம், மூளை எல்லாம் இருக்கிறது. சிரிக்காதீர்கள்… நான் சொல்வது உண்மையிலும் உண்மை. ஆமாம்… எந்த ஊராக இருந்தாலும் தலைமையிடமாக இருக்கிற நகரமோ, மாநகரமோ அதற்கு மூளையாக இருக்கிறது. அதனைச் சுற்றி இருக்கிற பகுதிகள், குறிப்பாக கிராமங்கள் அந்த ஊரின் இதயமாக இருக்கின்றன. இதைத்தான் மகாத்மா காந்தி, ‘இந்தியாவின் இதயம் கிராமங்களில்தான் இருக்கிறது’ என்றார்.
நம்முடைய மயிலாடுதுறை நகரத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். நகரத்தின் வளர்ச்சியை, தேவைகளைப்பற்றியே நாம் அதிகம் பேசுகிறோம். அதில் நியாயமும் இருக்கிறது. மூளையாக உள்ள நகரத்தின் முன்னேற்றம் முக்கியம். ஆனால், தொடர்ந்து கைவிடப்பட்டபிறகும் இன்னும் நகரமாக இதனை இயங்க வைத்துக்கொண்டிருக்கிற சிறப்பு சுற்றியிருக்கிற கிராமங்களுக்குச் சேர வேண்டியது. ஆக மயிலாடுதுறை என்கிற நகரம் உயிரோடு இருக்க, செழித்தோங்க நம்முடைய பகுதியிலிருக்கும் கிராமங்கள் தன்னிறைவு பெற வேண்டியது கட்டாயம்.
அந்தவகையில், நகரத்திற்குப் பக்கத்திலேயே இருக்கிற கிராம ஊராட்சிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும். டவுன் ஸ்டேஷன், அடியாமங்கலம், முளப்பாக்கம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மயிலாடுதுறை ரூரல் ஊராட்சியிலும், நகரத்தையொட்டி உள்ள திருஇந்தளூர் ஊராட்சியிலும் குடிப்பதற்கு சுகாதாரமான குடிநீர் எல்லோருக்கும் கிடைக்க வில்லை என்பது எவ்வளவு வேதனையானது? பொது கழிவறைகளும் குளியலறைகளும் கூட இங்கே ஒழுங்காக இல்லை.
நல்லத்துக்குடி, பட்டமங்கலம் ஊராட்சிகளில் பெரும்பாலான சாலைகள் பல் இளித்தபடியே கிடக்கின்றன. நல்லத்துக்குடியிலிருந்து செருதியூர் செல்லும் சாலையின் நிலையும் இதுவே. மழைக்காலத்தில் வார்த்தையில் சொல்லும் கதியில் அவை இருப்பதில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நிறைந்த சீனிவாசபுரத்தை உள்ளடக்கிய பட்டமங்கலம் ஊராட்சியில் பெரிதாக ஒரு நூலகம் வேண்டும் என்பது ஏற்கக்கூடியதுதானே? இங்கிருக்கும் இடங்களைப் பயன்படுத்தி சிறு, குறு தொழில்கள் தொடங்க வழி செய்தால் ஊருக்கு நல்லது நடக்கும்.
தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்பட்ட ஊராட்சியாக திகழும் மாப்படுகை கிராமத்திற்கு ஒரு கால்நடை மருத்துவமனை இருந்தால் விவசாயக் குடும்பங்கள் மகிழ்ச்சியடையும். மாப்படுகை என்றில்லை. குளிச்சார்,பட்டமங்கலம், மல்லியம், ஆனைமேலகரம்,கோடங்குடி உள்ளிட்ட ஊர்களுக்கும் இதே தேவை இருக்கிறது. மறையூர், கடலங்குடி (மணல்மேடு) போன்ற ஊர்களில் அரையும் குறையுமாக இயங்கும் கால்நடை மருத்துவமனைகளை கவனித்து சரி செய்ய வேண்டியது அரசின் கடமையல்லவா?
மணக்குடி – உளுத்துக்குப்பை சாலையை அகலப்படுத்தி சீரமைப்பதோடு, மணக்குடியோடு தருமபுரத்தையும், மன்னம்பந்தலையும் இணைப்பதற்கு தனித்தனியாக பாலங்கள் அமைத்தால் மக்களோடு மாணவர்களுக்கும் பெரும் பயன் விளையும். நகரத்தின் குப்பைகளையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் சுமக்கும் ஆனந்த தாண்டவபுரம் ஊராட்சிக்கு அதிலிருந்து கொஞ்சமாவது விடுதலை அளிக்க வேண்டும்.
துணை நகரம் போல உள்ள சித்தர்க்காடு ஊராட்சி தன்னிறைவு பெற கூடுதல் அக்கறை காட்டுவதுதானே முறையாக இருக்கும். சித்தர்க்காட்டில் மயிலாடுதுறை ஒன்றியத்திற்குச் சொந்தமான அண்ணா திருமண மண்டபத்தை முறையாக பராமரிக்காமல் விட்டது தவறல்லவா? இதைப்போலவே உள்ளூர் மக்களுக்கு வசதியாக சமுதாய நலக்கூடம் வேண்டும் என்பது உளுத்துக்குப்பை, மொழையூர் உள்ளிட்ட ஊராட்சிகளின் கோரிக்கையை எப்போது கவனிப்பது?
ஆத்திகமும் நாத்திகமும் தழைத்த மூவலூர் ஊராட்சியில் ஒரு விளையாட்டு மைதானம் அமைந்தால் நன்றாக இருக்கும். கும்பகோணம் சாலையில் ரயில் நிலையத்தோடு இருக்கிற மல்லியம் ஊராட்சி, ஆரம்ப சுகாதார நிலையத்திற்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் போராடுவது என்று தெரியவில்லையே! இதற்கு பக்கத்திலுள்ள ஆனைமேலகரத்தில் சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள், மக்களை இன்னமும் ஏங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. சோழம்பேட்டையில் தனியார் கல்லூரியே வந்துவிட்டபிறகு, இங்கிருக்கும் அரசு பள்ளிக்கூடம் மேல்நிலைப்பள்ளியாக மாற்றப்பட வேண்டியது அவசியமல்லவா?!

மயிலாடுதுறை – கும்பகோணம் சாலையில் முக்கிய சந்திப்பான கோமல் ரோடு பகுதியை உள்ளடக்கிய சேத்திரபாலபுரம் ஊராட்சி சீர் பெற்றால் பலன் அடைவோர் ஏராளம். திருமணஞ்சேரி கோயிலைத் தேடி ஆயிரமாயிரம் பேர் வந்து செல்லும் நிலையில் அதற்குரிய முக்கியத்துவம் கொடுத்து அந்த ஊராட்சியை, அத்தனை வசதிகளுடன் ஒளிர வைப்பதுதானே சரி.
எவ்வளவோ அறிவுஜீவிகளை உலகத்திற்கு பட்டை தீட்டி தந்த ஏ.வி.சி. கல்வி நிறுவனங்கள் அமைந்த மன்னம்பந்தல், இந்நேரம் மயிலாடுதுறை வட்டாரத்திலேயே முன்மாதிரி ஊராட்சியாக திகழ வேண்டாமா? அதற்குப் பக்கத்திலுள்ள குளிச்சார் ஊராட்சியில் திட்டமிடப்பட்ட தொழிற்பேட்டையை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவந்தால் உள்ளூரின் வசதிகளும் மேம்படும் அல்லவா?! கூடவே குளிச்சார் – பரசலூர் சாலை இணைப்பு கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமல்லவா?
கோயில், மசூதி, தேவாலயம் மூன்றும் முக்கோண வடிவில் அமைந்து, டாஸ்மாக் கடையில்லாத ஊராட்சி என்ற புகழோடு இருக்கும் நீடூரிலும் சாலைகளுக்கான தேவைகள் உண்டு. ‘வெட்ட வெளியில் மலம் கழிப்போருக்குப் பரிசு’ போன்ற விநோத அறிவிப்புகள் மூலம் சுகாதாரத்தில் நீடூர் காட்டும் அக்கறை மற்ற ஊராட்சிகளும் பின்பற்றத்தக்கது.
மணல்மேடு பகுதியிலுள்ள பல ஊராட்சிகளுக்கும் பூர்த்தி செய்யப்படாத தேவைகள் ஏராளம். தலைஞாயிறு சர்க்கரை ஆலையில் உள்ளூரைச் சேர்ந்த 10 பேருக்கு கூட ஒழுங்கான வேலை கிடைக்கவில்லை. அதற்குப் பதிலாக அந்த ஆலையால் தலைஞாயிறு மக்களுக்கு அவதிதான் மிச்சம். முறையான கழிவு மேலாண்மை இல்லாததால் விவசாய பாதிப்பும் உடல் நல பாதிப்பும் உபரி பரிசாக கிடைத்திருக்கின்றன. இதை எப்போது சரி செய்வது? கொற்கை மக்கள் குடிநீருக்கும் மேல்நிலைப்பள்ளிக்கும், சுகாதார நிலையத்திற்கும், சாலையோடு பேருந்து வசதிக்கும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் காத்திருப்பது?
கொண்டல், பாலாகுடி, உச்சிதமங்கலம், மல்லியக்கொல்லை, மாந்தோப்பு, பன்னீர்வேலி உள்ளிட்ட கிராமங்களைக் கொண்ட வில்லியநல்லூர் ஊராட்சிக்கும் தேவைகள் இருக்கின்றன. நந்தனார் பிறந்த மேலாநல்லூர் மக்களுக்கும் குறைகள் உண்டு. பழங்காலத்து அரண்மனை இருக்கும் கடலங்குடியில் தாய்- சேய் விடுதி, நூலகம், விளையாட்டுத்திடல் என தேவைகளின் பட்டியலோடு மக்கள் ஆண்டுக்கணக்கில் மனு போட்டு மன்றாடிக்கொண்டு இருக்கிறார்களே? சுதந்திரம் வாங்கி 60 ஆண்டுகளைக் கடந்த பின்னும் பாண்டூர், புத்தகரம், மறையூர் உள்ளிட்ட கிராமங்களில் இறந்தவர்களை மயானத்திற்கு கொண்டு செல்ல சரியான சாலைகள் இல்லை என்பது எவ்வளவு வேதனை.
திருவாரூர் சாலையிலுள்ள அகர கீரங்குடியைப் போக்குவரத்தின் முக்கிய பகுதியாக மாற்ற முடியும். அதாவது மஞ்சள் வாய்க்கால் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தொடங்கி, ஆற்றங்கரையை அகலப்படுத்தி திருக்கடையூர் விவசாயப்பண்ணை வரை சாலை அமைக்க வேண்டும். அதன்பிறகு இந்தச் சாலையில் பேருந்துகளை விட்டால் முட்டம், வடகரை, சாத்தனூர் உள்ளிட்ட கிராமங்களின் வளர்ச்சிக்கு புதிய வழி பிறக்கும். இதே போல மயிலாடுதுறை – நல்லத்துக்குடி – கோடங்குடி – கடக்கம் – பெரம்பூர் வழிச்சாலை மேம்படுத்தி பேருந்துகளை இயக்கினால் நாகை செல்லும் தூரத்தில் 10 கி.மீ வரை குறையும். இந்த ஊர்களும் மலர்ச்சி காணும்.
மேலே நான் பட்டியலிட்ட ஊர்களின் தேவைகள் உதாரணம் தான். இதைப்போன்றே எல்லா ஊராட்சிகளுக்கும் கோரிக்கைகள் இருக்கின்றன. அவற்றில் அடிப்படையான குடிநீர், சாலை, சுகாதாரம், பேருந்து அல்லது மினி பேருந்து போன்றவை உடனடியாக செய்ய வேண்டியவை. இவை போக, கிராமங்கள் தோறும் விளையாட்டு மைதானங்களும் கூடவே அதில் யோகாவும் செய்வதற்கு ஓர் இடமும் வேண்டும். பிள்ளைகள் விளையாடவும் பெரியவர்கள் உலாவுவதற்கும் பூங்காக்களும், ஊராட்சிக்கு ஒரு நூலகமும் இருந்திட்டால்தான் விவசாயம், தொழில் என நம்முடைய மயிலாடுதுறை பகுதி அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர முடியும். அடிப்படைக்கே இன்னும் அழுது கொண்டிருந்தால் நாம் ஆகாயத்தைத் தொடுவது எப்போது?
யுத்தம் தொடரும்….