ஊடகம்

ஊடகப்பணி

அழுத்தி பேனா பிடித்து எழுதத் தொடங்கிய ஆறாம் வகுப்பிலேயே கோமல் அன்பரசனின் ஊடகப்பயணமும் தொடங்கிவிட்டது. அன்றைக்கு அவரது ஆசிரியர் திரு. ஆ.பிரேமகுமார், வித விதமான சிற்றிதழ்களையும் புதுப்புது புத்தகங்களையும் அறிமுகப்படுத்தினார். துணுக்குகளும் கட்டுரைகளுமாக அப்போதே பத்திரிகைகளுக்கு எழுதத்தொடங்கினார்.

கவின்

13 வது வயதில் ‘கவின்’ என்ற கையெழுத்து பத்திரிகை ஒன்றைத் தொடங்கினார்.    எப்படியாவது அதனை அச்சில் கொண்டு வந்து விட வேண்டுமென்ற அவரது முயற்சிகள் பலனிக்கவில்லை. கையெழுத்து பத்திரிகையாகவே கனவு கரைந்து போய் சில இதழ்கள் மட்டும் வந்தாலும், “அட.. நல்லாயிருக்கே…” – சொல்ல வைத்தது கவின்.

மேல்நிலைக்கல்விக்காக சொந்த கிராமத்தைத் தாண்டி அவர் மயிலாடுதுறைக்கு வந்த போது ஊடகத்தின் மீதான காதல் இன்னும் அதிகமானது. நாளிதழ் செய்திகளின் நுட்பங்களைக் கவனிக்கத் தொடங்கினார்.  பள்ளியின் பிராத்தனைக்கூட்டங்களில் அவரே தயாரித்து, கணீரென வாசித்த செய்தி அறிக்கைகள் தனி கவனம் பெற்றன. அச்சிலிருந்து அடுத்த ஊடகமான வானொலிக்கும் சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

  இளந்தூது

கல்லூரியில் மாணவர்களே மாணவர்களுக்காக நடத்தும் இளந்தூது பத்திரிகை , அவருக்கு இறக்கைகளைக் கொடுத்தது. ஓராண்டில் அதன் ஆசிரியராக பொறுப்பேற்று, அந்த பத்திரிகைக்கு புதிய இலக்குகளையும் , சிறகுகளையும் கொடுத்தார்.  தாய் மொழியின் மீதிருந்த ஈர்ப்பால், இளந்தூதுவுக்கு தமிழ் எனும் அணியாரம் பூட்டி அழகு பார்த்தார். கல்லூரிக்குள் எல்லாருக்கும் எளிதாக அந்த பத்திரிகை சென்று சேர புதுப்புது உத்திகளை கையாண்டதோடு,  பெரிய இதழ்களைப் போல இலவச இணைப்பெல்லாம் கொடுத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, ஆசிரியராக, நிர்வாகியாக கடனில் இருந்த அந்தப் பத்திரிகையை பொருளாதார ரீதியிலும் வெற்றி பெற வைத்தார்.

“ இலக்கியம் பேசுபவர்கள், வேறு எதற்கும் ஆகாதவர்கள்” – என்ற வாதத்தையும் முறியடிப்பதற்காக, கல்லூரிக்குள்ளும் வெளியிலும் சேவை அமைப்புகளோடு “ இளந்தூது” வை இணக்கமாக்கினார். “கலை, கலைக்காகவே : இலக்கியம் , இலக்கியத்திற்காகவே” என்பதில் எப்போதுமே  நம்பிக்கை இல்லாத கோமல் அன்பரசன், கலையோ, இலக்கியமோ எதுவானாலும் மக்களுக்காகவே என்று அழுத்தந்திருத்தமான எண்ணம் கொண்டிருப்பவர்.

நெஞ்சுக்குள் நெருப்பு

பத்திரிகையாளராவது என்ற நெருப்பு கொஞ்சம் வேகமாகவே கனன்ற கல்லூரி காலத்தில், நம்ம ஊரு செய்தி என்ற உள்ளூர் பத்திரிகை உட்பட சில இதழ்களில் பகுதிநேர செய்தியாளராக பணியாற்றினார்.   பரீட்சை எழுதுவதை விட அக்கறையோடு சமூக பிரச்சினைகளைப் பற்றி பத்திரிகைகளில் எழுதினார். அதே துடிப்போடு சென்னை வந்து, பத்திரிகை பணிகளிலும் பதிப்பக பணிகளிலும் இயங்கினார்.

இதழியல் , இதயத்திற்கு பிடித்தமாய் இருப்பதாக உணர்ந்து, அதுதான் தொழிலென தெளிந்து,  பல இதழ்களில்  எழுதினார். இதழ் உருவாக்க கலையில் தேர்ச்சி பெற்றார். ‘மாலை முரசு’ பத்திரிகையில் சில காலம் பணியாற்றினார்.

200 சிறப்புப்பார்வைகள்

 தமிழின் நம்பர் 1 ஊடகமான சன் டீவியின் செய்திப்பிரிவில் 5 ஆண்டுகள் பணிபுரிந்தார். அப்போது செய்தியாளராக, துணை ஆசிரியராக எழுதி குவித்தார். சன் டீவி செய்திகள்  உச்சத்திலிருந்த நேரம். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி, அன்றைக்கு பெருங்கவனம் பெற்றிருந்த சிறப்புப்பார்வை தொகுப்பை 4 ஆண்டுகள், ஏறத்தாழ 200 தலைப்புகளில் எழுதி, தயாரித்து வழங்கினார். வழக்கமான செய்திகளுக்கு மத்தியில் அரசியல், அறிவியல், மருத்துவம், வாழ்வியல் என அனைத்து கூறுகளிலும் 500க்கும் மேற்பட்ட சிறப்பு செய்தி தொகுப்புகளையும்  சன் செய்திகளுக்காக கொடுத்திருக்கிறார்.

 ஊடகத்தில் தமிழ்ப்பணி

  தமிழுக்காக , தமிழரின் அடையாளங்களோடு தொடங்கப்பட்ட மக்கள் தொலைக்காட்சி கோமல் அன்பரசனை  வரவேற்றது. இயல்பிலேயே தமிழ் மேலிருந்த ஈர்ப்பால், அங்கு செய்தி பொறுப்பாசிரியராக பணியேற்றார்.

பின்னர் ,மக்கள் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் பொறுப்பு அவரைத்தேடி வந்தது. தமிழ்நாட்டு ஊடக வரலாற்றில் முதன்முறையாக, மிக இளம் வயதில் செய்திப்பிரிவுக்குத் தலைமையேற்று, சிந்தனை, செயல் எல்லாம் செய்தியாகிப்போனார்.

செய்தியோடு எழுந்து, செய்தியோடு சாப்பிட்டு,செய்தியோடு உழன்று, செய்தியோடு உறங்கினார். அற்புதமான செய்திக்குழுவைக் கட்டியமைத்தார். பொலேரென சொல்லும் துணிச்சல், புதிய சிந்தனைகள், நடுநிலைமை, நல்ல தமிழ் என குறுகிய காலத்தில் மக்கள் தொலைக்காட்சி செய்திகள் பேசப்பட்டன. தமிழ் வளர்ச்சிக்காக அந்த தொலைக்காட்சி செய்த பணிகளில்  கோமலுக்கு மிக முக்கிய பங்குண்டு. இன்றைக்கு மற்றத் தொலைக்காட்சிகளால் பின்பற்றப்படும் ‘நேரலை’, ‘அண்மைச்செய்தி’ போன்ற எண்ணற்ற தமிழ்ச்சொற்களை ஊடக உலகிற்குத் தந்தார்.

முதன் முறையாக…..

தமிழ்நாட்டில் அதுவரை அச்சு ஊடகத்தில் மட்டுமே இருந்த புலனாய்வுச் செய்திகளை , முதன்முறையாக காட்சி ஊடகத்திற்கு கொண்டு வந்த பெருமை கோமல் அன்பரசனுக்கு உண்டு. தொலைபேசி ஒட்டுக்கேட்பு, உயர் அதிகாரிகளின் அதிகார அத்துமீறல்கள், கல்லூரிகளின் கட்டண கொள்ளை என ஆதாரங்களோடு மக்கள் தொலைக்காட்சி வெளியிட்ட செய்திகள் தமிழகத்தை அதிரவைத்தன.

தமிழ் காட்சி ஊடகத்துறையில் முதன்முறையாக கல்லூரிகளுக்குள் சென்று மாணவர்களை அடையாளங்கண்டு , பட்டைத்தீட்டி புத்தம் புது பத்திரிகையாளர்களை உருவாக்கினார். தொலைக்காட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்காக “மக்கள் வணக்கம்” என்ற வளாக இதழை நடத்தினார். தமிழ் ஊடகத்தில் பணியாளர்களுக்காக இப்படியொரு வளாக இதழ் வந்தது அதுதான் முதன்முறை.

32 வயதிற்குள் இதையெல்லாம் செய்த கோமல் அன்பரசன்,  மக்கள் தொலைக்காட்சியின் முதன்மை செயல் அலுவலராக (சி.இ.ஓ) 2012 ல்  பொறுப்பேற்றார். தமிழ்நாட்டு ஊடகங்களில் முதன்முறையாக இத்தனை இளம் வயதில் உச்ச பதவியான தலைமை நிர்வாகப்பணி ஏற்றிருப்பவர் இவர்தான். 5 ஆண்டுகளுக்கும் மேலாக நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த அத்தொலைக்காட்சியைக் கடந்த  மூன்றாண்டுகளாக லாபத்துடன் நடத்திச் செல்கிறார்.

நிர்வாகப்பணிக்கு வந்துவிட்டாலும் இதழியலுக்கான பங்களிப்பைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார். சொந்த ஊரில் ‘காவிரிக்கதிர்’ எனும் சிற்றிதழை நெறிபடுத்தி , அதன் மூலம் இளம் பத்திரிகையாளர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். 11 வயதில் தொடங்கிய கோமல் அன்பரசனின்  ஊடகவியல் பயணம், வெற்றிகரமாக தொடர்கிறது!

 

 

(Visited 121 times, 1 visits today)