கிடைக்காமல் தடுப்பதும்; கேட்காமல் தூங்குவதும்!

எவ்வளவு பெரிய தீமையிலும் எதாவது ஒரு நன்மை இருக்கும். இது உலகத்தின் நீதி. இதுவும் அப்படிதான், ‘‘அடிமைப்படுத்தினார்கள்; அடக்கி ஆண்டார்கள்; அத்தனை வளங்களையும் சுரண்டி போனார்கள்’’ என்றெல்லாம் சொன்னாலும் ஆங்கிலேயர்கள் நமக்கு கொடுத்த பெருங்கொடை ரயில் போக்குவரத்து. அவர்கள் எப்போதோ போட்டுத் தந்துவிட்டு போன, ரயில் பாதைகளை, 60 ஆண்டுகளுக்குப் பிறகு காலத்திற்கு ஏற்ப மேம்படுத்துவதற்கு நாம் பட்டபாட்டினை நினைத்தால், வெள்ளையர்களின் திட்டமிட்ட வேலைத்திறன் புரியும். எத்தனை வகை போக்குவரத்து வந்தாலும், இன்னமும் வெகு மக்களின் விருப்பத்திற்குரியதாக, எளியோரின் சக்திக்கு ஏற்றதாக ரயில் பயணம் இருப்பதே அதற்குச் சான்று.

தமிழ்நாட்டின் ரயில்வே வரைபடத்தைப் பொறுத்தமட்டில், நம்முடைய ஊர் ‘மாயூரம்’ ஆக இருந்த காலம் தொட்டே தனி சிறப்பு உண்டு. 1877ல், சென்னை – தூத்துக்குடி இடையிலான தமிழகத்தின் முதல் நீண்ட தூர ரயில் பாதை அமைக்கப்பட்ட போது, அதன் முக்கிய ரயில்வே சந்திப்பு( ஜங்ஷன்) மயிலாடுதுறை. நம் ஊரின் வழியே சென்ற அந்தப் பாதை ‘மெயின் லைன்’ என்றழைக்கப்பட்டது. வரலாற்றை இன்னும் தோண்டி எடுத்தால், அதற்கு முன்பே ரயில்பாதையும் போக்குவரத்தும் அமைக்கப்பட்ட தமிழகத்தின் அதிமுக்கியமான நகரங்களின் பட்டியலில் மயிலாடுதுறையும் இருந்திருக்கிறது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் ‘ஜில்லா போர்டு’ எனப்பட்ட மாவட்ட நிர்வாக அமைப்பு, 1861 ஆம் ஆண்டிலேயே மாயூரத்திலிருந்து நாகை வழியாக அறந்தாங்கி வரை ரயில் பாதை போட்டது. நாகூர், பேரளம், காரைக்கால் கிளைப்பாதைகளும் அமைக்கப்பட்டன. இன்னொரு பக்கம் நாகை – மயிலாடுதுறை – கும்பகோணம் – தஞ்சாவூர் வழியாக திருச்சி வரையிலான பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில்கள் வந்து போவதற்காக ‘மாயூரம் டவுன் ஸ்டேஷன்’ என்ற நகர ரயில் நிலையம் செயல்பட்டது. ஜில்லா போர்டு வசமிருந்த ரயில் பாதைகளை தெற்கு ரயில்வே எடுத்துக் கொண்ட பிறகும் இயங்கிய டவுன் ஸ்டேஷன், தரங்கம்பாடி ரயில் பாதையோடு சேர்த்து 1986ல் மூடப்பட்டது சோக வரலாறு. இப்போது ‘டவுன் ஸ்டேஷன் ரோடு’ என்ற சாலையின் பெயர் மட்டுமே எஞ்சியிருக்கிறது. அன்றைக்கு தக்கவைக்க முடியாத தரங்கம்பாடி ரயில் பாதைக்கான தேவையும் முக்கியத்துவமும் இப்போது உணரப்பட்டு, மெல்ல கோரிக்கை குரல்கள் ஒலிக்கின்றன.

நாம் இழந்தது டவுன் ஸ்டேஷனும் தரங்கம்பாடி ரயில் பாதையும் மட்டும் தானா? ரயில்வே துறை, மயிலாடுதுறையை மாற்றந்தாய் பிள்ளையைப் போல வேண்டா வெறுப்பாக நடத்துவதுதொடர்ந்து நடக்கிறது. அகலப்பாதை பணி முடிந்து மாதக்கணக்கில் போக்குவரத்து தொடங்காமல் காட்டிய அலட்சியமாகட்டும்; மீட்டர் கேஜ் பாதையில் ஓடிய ரயில்களில் பலவற்றை மீண்டும் இயக்காமல் விட்டதாகட்டும்; அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராமல், வாழ்ந்து கெட்டவரின் வீட்டினைப் போன்று மயிலாடுதுறை ஜங்ஷனைப் போட்டு வைத்திருக்கும் கோலமாகட்டும் – இவற்றை எல்லாம் எப்படி ஜீரணித்துக்கொள்ள முடியும்? ஒவ்வொன்றுக்கும் வழக்கறிஞர் ராஜேந்திரன் போன்றவர்கள் நீதிமன்றத்தின் நீண்ட படிக்கட்டுகளில் ஏறி உத்தரவுகளை வாங்கிய பிறகுதான் ரயில்வே துறை செயல்படுமா?

நியாயமாக செய்ய வேண்டிய பணிகளுக்கு கூட நீதிமன்றத்தை நாட வேண்டுமென்றால், நாம் தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்பும் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் பற்றிய கேள்வி இந்த இடத்தில் எழுவது இயல்புதானே! ரயில்களைக் கொண்டுவருவதற்கும், ஜங்ஷனை மேம்படுத்துவதற்கும் நம்முடைய எம்.பிக்கள் என்ன செய்தார்கள்? இதைச் சொல்கின்றபோது, பக்கத்திலே மன்னார்குடிக்கு பாதையும் ரயிலும் கொண்டுவந்த டி.ஆர்.பாலு கண் முன்னே வந்துபோகிறார். ரயில்வே நிலைக்குழுத்தலைவராக மட்டுமிருந்த பாலுவால் முடிந்த செயல், டெல்லியில் சகல செல்வாக்கோடும் அமைச்சராகவே இருந்த மணிசங்கர் அய்யரால் முடியாமல் போனது ஏன்? முடியவில்லையா – முயற்சிக்கவே இல்லையா? அவருக்கே வெளிச்சம்.

போகட்டும். மயிலாடுதுறைக்கு ரயில்வே துறை செய்து தர வேண்டியவை ஒன்றா? இரண்டா? நவகிரக கோயில்கள் உள்ளிட்ட சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மயிலாடுதுறையில் இருந்து சென்னைக்கு இருவழியிலும் ரயில்கள் இயக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் அன்றோ! சென்னைக்கு மட்டுமல்ல. பகலிலும் இரவிலும் கோவைக்கும் மதுரைக்கும் வேளாங்கண்ணி போன்ற ஊர்களுக்கும் ரயில்களை அவசியம் இயக்க வேண்டும். தரங்கம்பாடி ரயில்பாதைக்கு உயிர் கொடுத்து, மயிலாடுதுறை – திருக்கடையூர் – தரங்கம்பாடி – திருநள்ளாறு – காரைக்கால் மார்க்கத்தில் புதிய ரயில்பாதை அமைப்பதற்கு தீட்டப்பட்ட திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். இதன்மூலம் சுற்றுலா மேம்பாட்டிற்கும் காரைக்கால் துறைமுகத்தினால் தொழில் வளர்ச்சிக்கும் வழி கிடைக்கும்.

ரயில் நிலையத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் எந்த ஒரு ஜங்ஷனும் இத்தனை மோசமாக இல்லை என்று அடித்துச் சொல்லலாம். மயிலாடுதுறை பகுதி மக்களின் தேவை என்பதற்காக மட்டுமின்றி, ‘ஜங்ஷன்’ என்ற வார்த்தையை மெய்ப்பிக்கவாவது இதனை ரயில்வே நிர்வாகம் கவனிக்க வேண்டும். அகலப்பாதையில் ரயில்கள் ஓடத்தொடங்கி, ஆண்டுகள் கடந்து போனாலும் குடிநீர், கழிவறை, பயணிகள் அமருவதற்கான இருக்கைகள், மின்தூக்கி (லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர்) போன்ற அடிப்படை வசதிகள் முழுமையாக செய்து தரப்படவில்லை. இருக்கும் ஒன்றிரண்டு வசதிகளிலும் ஒழுங்கான பராமரிப்பு இல்லை. ஒவ்வொரு நடைமேடைக்கும் இடையே சுரங்கப்பாதையோ, மின்தூக்கியோ இல்லாமல் முதியவர்களும், குழந்தைகள், கர்ப்பிணிகள், ஊனமுற்றோர் என முடியாதவர்கள் படும்பாடு சொல்லிமாளாது. குறைந்த செலவிலான பேட்டரி கார் வசதியாவது செய்து தருவதற்கு மனசு வைக்கலாம். வருமானத்திற்கு குறைவில்லாத மயிலாடுதுறையில் முன்பதிவுக்கு இரண்டு கவுன்டர்களாவது திறக்கக்கூடாதா? பெரும்பாலும் கிராமப்புறத்திலிருந்து வரும் மக்கள் ரயில் பற்றி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல தனியாக ஒரு ‘என்கொயரி கவுன்டர்’ திறந்தால் குறைந்தா போய்விடுவார்கள்?

ஜங்ஷன் நுழைவாசலில் இத்தனை தடுப்புகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்களே அது எதற்காக? வேகமாக ஓடிவருபவர்கள் ரயிலைப் பிடித்துவிடக்கூடாது என்பதற்கா? மற்ற ஜங்ஷன்களில் இருப்பதைப் போல இருபுறமும் நடைமேடைகளும் டிக்கெட் கவுன்டரும் மயிலாடுதுறைக்கும் வேண்டுமல்லவா? ஒழுங்கான உணவகங்களுக்கு கூட வழியில்லாத ரயில் நிலையத்திற்கு பெயர் ஜங்ஷனா? ! நிலையத்திற்குள்ளே ஒரு ஏ.டி.எம் அமைப்பது அவசரத்தில் வருவோருக்கு பயன்படுமல்லவா! முறையாக மேற்கூரை வசதியுடன் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம் அவசியமில்லையா? அதனை முறையாக அமைத்து நடத்தினால், ரயில்வேக்கு வருமானம்தானே! மயிலாடுதுறையிலிருந்து அதிகம் அனுப்பப்படும் நெல் மூட்டைகள் உள்ளிட்ட சரக்குகளை வைப்பதற்கு ரயில்வேக்கு என தனியாக கிடங்குகள்(குடோன்கள்) இருக்க வேண்டுமல்லவா!

ஜங்ஷனுக்கு எதிரே முன்பிருந்த பூங்கா மீண்டும் உருவாக்கப்பட்டால் பார்ப்பதற்கு குளிர்ச்சியாக இருக்கும்.சித்தர்க்காடு பனந்தோப்பு தெருவிலிருந்து ஜங்ஷன் வாசலுக்கு சுரங்கப்பாதை அல்லது மேல்வழிப்பாதை அமைத்தால் மக்களுக்கு மிகுந்த பயன் தருமே! இன்னொரு பக்கம் மயிலாடுதுறையில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மீதும் ரயில்வே நிர்வாகம் பாராமுகத்திலிருக்கிறது. பாழடைந்து கிடக்கும் ரயில்வே ஊழியர் குடியிருப்புகள் மீண்டும் எழுந்து நிற்க வேண்டும். தேவையில்லாமல் திருவாரூருக்கு மாற்றப்பட்ட மிகப்பெரிய ‘லோகோ ஷெட்’ எனப்படும் ரயில்வே பணிமனையை மீண்டும் மயிலாடுதுறைக்கு கொண்டு வர வேண்டும். புதர் மண்டி கிடக்கும் அந்த இடம் மட்டுமின்றி, ஜங்ஷனைச் சுற்றியிருக்கும் ரயில்வே இடங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது பற்றி யோசிக்கலாம்.

எல்லாவற்றையும் ரயில்வே மீது தள்ளிவிட்டு மாநில அரசு தப்பிக்க முடியாது. ஜங்ஷன் பேருந்து நிலையத்தை மேம்படுத்தி, அதிக பேருந்துகள் வந்து செல்ல வழி செய்ய வேண்டியது இவர்கள் கைகளில் இருக்கிறது. அதே போல 41 போலீசார் இருக்க வேண்டிய இடத்தில் 13 காவலர்களுடன் பரிதாபமாக காட்சியளிக்கும் மயிலாடுதுறை ரயில்வே காவல்நிலையத்தை வலிமையாக்குவதும் அவசியம். இன்னும் கூட தேவைகளின் பட்டியல் நீளுகிறது. ஆனால், வெறும் ரயில் நிலையமான கும்பகோணத்திற்கு செய்து தரப்படும் வசதிகளில் பாதி கூட ஜங்ஷன் என்று சொல்லப்படும் மயிலாடுதுறைக்கு

கிடைக்காமல் தடுக்கும் அரசியல் எது? உரிமைகளைக் கூட கேட்காமல் தூங்கும் அரசியல் எது?

– யுத்தம் தொடரும்…..

பழங்காவிரியில் கால் நனைப்போம்!

mayura_yutham14

ஒரு முழு வெள்ளைத்தாள். அதில் எங்கோ ஓரிடத்தில் கறுப்பு புள்ளி. அதைக் காண்பித்து, ‘இது என்ன’ என்று கேட்டால், தாள் முழுக்க இருக்கும் வெண்மை நிறத்தைப்பற்றி சொல்ல மாட்டோம். ‘கறுப்பு புள்ளி உள்ளது’ என்போம். இதுதான் இயற்கை. சென்னையில் ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் பேரை சொன்னதும் பளீரென மூளைக்குள் வந்து போவது கூவம்தானே! அப்படித்தான் மயிலாடுதுறை என்றதும் நினைவுக்கு வருபவற்றில் பழங்காவிரிக்கு முக்கிய இடமிருக்கிறது. கூவத்தில் படகு சவாரி நடந்ததை இன்றைக்கு நம்ப முடியாததைப் போலவே, பழங்காவிரி தண்ணீரை நம்ம ஊர்க்காரர்கள் பயன்படுத்திய செய்தியும் வரலாற்றில் பதிந்து கிடக்கிறது. நகராட்சி பள்ளி மாணவர்கள் மதிய சாப்பாட்டுக்கு முன் கை, கால், முகம் கழுவி, வாய் கொப்பளித்தது பழங்காவிரி தண்ணீரில்தான் என்பதை நினைத்து பாருங்கள்..! பியர்லெஸ் திரையரங்கம் அருகே பழங்காவிரியில் காளியாகுடி ஓட்டலின் மாடுகள் தண்ணீர் குடித்ததையும், குளித்ததையும் கற்பனை செய்ய முடிகிறதா? இதெல்லாம் உண்மையிலும் உண்மை. இப்போது ரசாக் டவர் வணிக வளாகம் உள்ள பகுதியில், 200 மாடுகளுடன் பண்ணை அமைத்து, பால் கறந்து, அதில் கள்ளிச்சொட்டு போல காளியாகுடி போட்டுக்கொடுத்த காபிக்கு பழங்காவிரியும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.

காபியை விடுங்கள்…மல்லியம் சத்திரத்திற்கு அருகே ஆனைமேலரகம் கிராமத்தில், கங்கையைவிட புனிதமான காவிரி ஆற்றிலிருந்து பிரியும் பழங்காவிரி ஒரு காலத்தில் பெரிய பாசன வாய்க்கால் என்றால் நம்ப முடிகிறதா? ஆமாம்… அங்கிருந்து மூவலூர், சித்தர்க்காடு, ரயிலடி, கூறைநாடு, பட்டமங்கலம் தாண்டி முளப்பாக்கம், மன்னம்பந்தல், ஆறுபாதி, அடியாமங்கலம், செருதியூர்,குளிச்சாறு மற்றும் நல்லத்துக்குடி முதல் எலும்பிச்சம்பாத்தி வரை 2,841 ஏக்கர் நிலங்களில் பழங்காவிரியை நம்பித்தான் விவசாயம். சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமல்ல; நகருக்குள் இப்போதைய காவிரி நகரில் அன்றைக்கு இருந்த பெரும் வாழைத்தோட்டங்களுக்கும், கூறைநாடு பட்டமங்கல ஆராயத்தெருவின் தென்புறத்தில் அமைந்த வயல்களுக்கும் பாசன வாய்க்காலாக இருந்திருக்கிறது. (கால மாற்றத்தின் கட்டாயத்தால் அந்த நிலமெல்லாம் ஸ்ரீராம் நகர், மாருதி நகர், ரேவதி நகர், விஸ்வநாதபுரம் என உருமாறி விட்டது).

பாசனம் மட்டுமின்றி முக்கிய குளங்களுக்கு தண்ணீர் கொடுத்ததும் பழங்காவிரியே. மூவலூர் பெரியகுளம், சித்தர்க்காடு சம்பந்தன் குளம், கிட்டப்பா பள்ளிக்குப் பக்கத்திலுள்ள சமுத்திரி குளம், மாமரத்து மேடை குளம், தூக்கணாங்குளம், கூறைநாடு செம்மங்குளம், நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள குளம், கிளைச் சிறை அருகிலுள்ள மட்ட குளம் போன்றவற்றிற்கு தண்ணீர் தந்ததும் பழங்காவிரிதான். இது போக மழைக்காலத்தில் மயிலாடுதுறை நகரத்தின் வடிகாலாகவும் திகழ்ந்திருக்கிறது.

நீண்டு கொண்டே போகுமளவுக்கு பழம்பெருமைகள் கொண்ட பழங்காவிரி, மொத்தமிருந்த 14 கி.மீ நீளத்திலிருந்து 7கிலோ மீட்டராக சுருங்கி, அங்கங்கே சாக்கடையாகி இருப்பதுதான் தற்போதைய சகிக்க முடியாத நிலை. அதிலும் மயிலாடுதுறை நகர எல்லைக்குள் இருக்கும் 2 கி.மீ. தூரமும் வீடு, கடைகள் என கிட்டத்தட்ட 400 இடங்களில் ஆக்கிரமிப்புகளோடு குப்பை கழிவுகளின் புகலிடமாகவும் மாறி கிடக்கிறது. காவிரியில் பொங்கி வரும் வெள்ளத்தை உள்வாங்கி கொள்ளும் அளவுக்கு 57 அடி அகலத்தில் அகன்று விரிந்து பரந்திருந்த பழங்காவிரி இப்போது 10 அடி அகலத்திற்கு குறுகி விட்டது. சில இடங்களில் அதற்கும் குறைவுதான்.

பழங்காவிரியால் பயிர் விளைந்த நிலங்களில் வீடுகள் முளைத்துவிட்ட காரணத்தால், விவசாயத்திற்கு வேண்டுமானால் தண்ணீரின் தேவை குறைந்து போயிருக்கலாம். அதுவும் முற்றிலுமாக பாசனத்திற்கான தேவை இல்லை என்று சொல்லிவிட முடியாது. மயிலாடுதுறைக்கு கிழக்கே உள்ள கிராமங்களின் விவசாயத்திற்கு இப்போதும் பழங்காவிரிதான் பாசன ஆதாரம். ஆண்டுதோறும் தூர்வாரி பராமரிக்க வேண்டிய பொதுப்பணித்துறையின் கையாலாகாத்தனமும், கழிவு ஓடையாக மாற்றிய பொதுமக்களின் பொறுப்பின்மையும் போட்டி போட்டுக்கொண்டு பழங்காவிரியை கண்றாவியாக்கிவிட்டது. ‘குடி மராமத்து’ என்கிற தூர் வாருதல் ஒழுங்காக நடந்த காலத்திலேயே மயிலாடுதுறையைத் தாண்டி தண்ணீர் முழுமையாக செல்வதில் சிக்கல் ஏற்பட்ட போது, திம்ம நாயக்கன் படித்துறையிலிருந்து புதுப்பழங்காவிரி என்ற கால்வாயை உருவாக்கி நீரை பிரித்துவிட்டனர். அதனால் பெரிய பலன் ஏதுமின்றி அந்தக் கால்வாயும் இப்போது கதியற்று போயிருக்கிறது.

குப்பையில் தொடங்கி வீடு, கடை, உணவு விடுதிகள், மருத்துவமனை கழிவுகள் வரையிலும் இன்னும் சொல்லப்போனால், மலம் மிதக்கும் கால்வாயாக மாறிய பழங்காவிரியைச் சீரமைக்கும் எண்ணம் கால் நூற்றாண்டுக்கு முன்பே உருவாகிவிட்டது. கால்வாயைச் சீரழிக்கும் வேலைகள் தலையெடுக்கத் தொடங்கியதும், ‘நகருக்குள் இருக்கும் 2 கி.மீ.தூரத்தையும் பராமரிப்பில் எடுத்துக் கொள்ளத் தயார்’ என நகராட்சியே 1987 ல் தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து அந்தப் பகுதியை நகராட்சிக்கு ஒதுக்கித் தர சென்னையிலுள்ள நில நிர்வாக ஆணையருக்கு , 1989 ல் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார். என்ன காரணத்தாலோ அது கண்டுகொள்ளபடவே இல்லை. பிரச்சினை முற்றி, ஊரின் திருஷ்டி பரிகாரமாக பழங்காவிரி மாறிய காலத்தில், கழிவுகள் கலப்பதைத் தடுக்க மூத்த குடிமக்கள் அவையின் அன்றைய தலைவர் ஆறுமுகம் ஐ.ஏ.எஸ்., புங்கனூர் நுகர்வோர் அமைப்பின் விஜயகுமார் போன்றோரெல்லாம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்து உத்தரவுகளை வாங்கினர். ‘மூன்று மாதங்களுக்குள் பழங்காவிரியில் கழிவுகள் கலப்பதை நகராட்சி தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று 1997ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. மாசு கட்டுப்பாடு வாரியமும் ஆணையிட்டது. பின்னர் இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்திற்கும் போய் இன்றைக்கும் அங்கே தூங்கிக் கொண்டிருக்கிறது.

கண்டனம், வழக்கு, வாய்தா என்று போன போதெல்லாம் பழங்காவிரியைச் சீரமைக்க முடியாததற்கு முக்கிய காரணமாக மயிலாடுதுறை நகரத்தின் கழிவு நீரை என்ன செய்வது என்ற கேள்வி எழுந்து நின்றது. பாதாள சாக்கடை கொண்டு வந்தால்தான் பழங்காவிரிக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று அப்போது சொன்னார்கள். சரியோ, தவறோ அதில் ஒரு நியாயம் இருந்தது. பாதாள சாக்கடை வந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டனவே! பழங்காவிரியைச் சீரமைக்க இன்னும் என்ன தயக்கம்? சென்ற மாயூர யுத்தத்தில் பார்த்ததைப் போல, இதுவரை பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்காதவர்கள் பழங்காவிரியில்தானே கழிவுகளை விடுகிறார்கள். இதற்கு யார் பொறுப்பேற்பது? இன்னொரு பக்கம், இந்த ஆண்டு பழங்காவிரியில் ஏழரை கிலோமீட்டர் தூரம் தூர் வாரியதாக பொதுப்பணித்துறையின் கணக்கு சொல்கிறது. கண்ணெதிரே கால்வாய் அப்படியே இருக்க, எங்கே போய் தூர் வாரினார்களோ அவர்களுக்கே வெளிச்சம்! 1996ல் கும்பகோணத்தில் நடந்ததைப் போன்று பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி, பளிச்சென தூர் வாரினால் மாயூரமே புதுப்பொலிவு பெறுமல்லவா?! பொலிவு கிடக்கட்டும்…. சாக்கடை நீர் இல்லாத நிலத்தடி நீரும், கொசு இல்லாத ஒட்டுமொத்த நகரின் சுகாதார மேன்மையும், மழைக்காலத்தில் ஒழுங்கான வடிகாலும், பழங்காவிரி – பழைய பழங்காவிரியாக மாறினால் மட்டுந்தானே சாத்தியமாகும்..! யார் இந்த திருப்பணியைச் செய்வார்கள்? எப்போது இது நடக்கும்? பழங்காவிரியில் மீண்டும் வாய் கொப்பளிக்க வேண்டாம். கால் நனைக்கும் காலமாவது வருமா?

—————————- யுத்தம் தொடரும்…..