சேவை

சேவை

“வாழ்ந்து, வாழ்வித்தல்தான் வல்லமை” என்று வாழ்வின் இலக்கை தனித்துவமாக வகுத்துக்கொண்டிருக்கிறார் கோமல் அன்பரசன்.. பள்ளிக்கூட காலத்தில் செஞ்சிலுவை சங்கம், சாரணர் அமைப்பு ஆகியவற்றில் வேர்விட்ட எண்ணம் அது . சாரணர் படைத்தலைவனாக அணி நடத்தி,அதற்காக பல பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்.

அறிவொளி இயக்கம்

படிப்பு – அதற்கு துணைப்பாடம் போல, பள்ளிக்கூட சேவை அமைப்புகளில் ஈடுபாடு என்ற மட்டில் நிற்காமல் ,  பள்ளிக்கு வெளியிலும்  பதின் வயதிலேயே ஆக்கப்பூர்வமான பணிகளில்  இயங்கினார். 90- களில் தீவிரமாக இருந்த அறிவொளி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அனுபவப் பாடம் படித்த மேதைகளான கிராமத்து மனிதர்களுக்கு   “ஆனா, ஆவன்னா” சொல்லித்தருவது அத்தனை எளிதல்ல. தெருவிளக்கில் தங்களின் கல்லாமை வெளிச்சம் போட்டு காட்டப்படுவதை பலரும் விரும்பவில்லை. அறிவொளி இயக்க தன்னார்வலர்களுக்கு இது பெரும் சவாலாகவே இருந்தது. தெருவுக்கு வராதவர்களின் வீடுகளுக்கே கோமல் அன்பரசன் போனார்.  அவமதிப்புகளையும் எதிர்கொண்டு,  இடைவிடா முயற்சியால் கிராமத்தில் எல்லாரையும்  எழுத, படிக்க வைத்தார்.

 துளிர் இல்லம்

அறிவொளி இயக்கத்தின் தொடர்பால் அவருக்கு ‘துளிர் இல்லம்’  கிடைத்தது. அறிவியல் பத்திரிகையான “துளிர்” இதழின் நல்ல முயற்சியாக அமைந்தவை விஞ்ஞானிகளின் பெயர்களிலான துளிர் இல்லங்கள். மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தைத் தூண்டிய அவற்றை, பெரும்பாலும் ஆசிரியர்களே முன்னின்று உருவாக்கி , இயக்கி வந்தனர்.  ஆனால் , மாணவராக இருந்த கோமல் அன்பரசன், ஒரு துளிர் இல்லத்தை அமைத்தார்.  அப்போதே ஊடகத்தின் மீதிருந்த தனி காதலால், வானொலியைக் கண்டுபிடித்த மார்கோனி பெயரை துளிர் இல்லத்திற்கு சூட்டினார். ஏற்கனவே கோமல் அன்பரசன் நடத்திய வந்த மாணவர் மன்றம், அப்படியே துளிர் இல்லமானது. வெறுமனே அறிவியலை மட்டும் பேச வில்லை அது.

மக்களுக்கானதாக, செயல்பாடுள்ளதாக மார்கோனி துளிர் இல்லம் திகழ்ந்தது. அறிவியலைப் பற்றி பேசிய நேரம் போக, மக்கள் பணிகளிலும் ஈடுபட்டது. மருத்துவ முகாம்கள் நடத்தியது. ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வாங்கி கொடுத்தது. இலவசமாக டியூசன் சொல்லிக்கொடுத்தது. திருவிழாக்களில் கூட்டத்தை ஒழுங்கு படுத்தியது.   கோடை காலங்களில் மக்களுக்கு மோர் கொடுத்தது. குஜராத்தைப் புரட்டிப்போட்ட பூகம்பத்திற்கு  நிதி வசூலித்து அனுப்பியது. மொத்தத்தில்  அந்நியப்பட்டிருந்த மார்கோனி என்ற பெயர் அந்த கிராமத்திற்கு நெருக்கமாகியது.

விழியாக; மொழியாக….

மேல்நிலைக்கல்விக்காக மயிலாடுதுறைக்கு வந்தபோது, , “ படிக்க வேண்டும் : மற்றவர்களுக்கு பயன்படவும் வேண்டும்”  என்ற எண்ணத்தில் பார்வையற்றோர் மாணவர் விடுதியில் தங்கினார். அந்த விடுதியில் தங்கி படித்த கண்ணில்லாத மாணவர்களுக்கு விழியாகவும் மொழியாகவும் இருந்தார்.

பள்ளிகளைக் கடந்து கல்லூரிக்குச் சென்றபிறகு ரோட்டரி அமைப்பின் இளைஞர் பிரிவான ரோட்டராக்ட்டில் சேர்ந்து செயல்பட்டார்.  அதில் பயனுள்ள எத்தனையோ செயல்கள். உச்சமாக  தமிழகளவில் இளைஞர்களைத் திரட்டி , மிகப்பெரிய விழிப்புணர்வு முகாம் நடத்தினார்.

சமுதாயக் குழுமம்

ரோட்டரி சமுதாய குழுமத்தைச் சொந்த ஊரான கோமல் கிராமத்திற்கு அறிமுகப்படுத்தினார். ரோட்டரி என்ற சொல்லே, மேல் தட்டு மக்களுக்கானது என்று அது வரை எண்ணியிருந்த ஊர்க்காரர்கள், அதன் பணிகள் பலவற்றைப் பாராட்டினார்கள். தமிழகத்தின் சிறந்த ரோட்டரி சமுதாய குழுமத்திற்கான விருதுகளையும் அந்த அமைப்பு பெற்றது. இது போக திராவிட மாணவர் மன்றம் போன்ற  ஏழெட்டு அமைப்புகள். அத்தனையிலும் ஏதோ ஒரு வகையில் சமூகப்பணியைத் தொடர்ந்தபடி இருந்தார். இப்போது தன்னுடைய பணிகளை சில குறிப்பிட்ட அமைப்புகள் மூலம் ஒருங்கிணைத்து மண்ணுக்கும் மக்களுக்கும் பயன்பட்டு கொண்டிருக்கிறார். அந்த அமைப்புகளின் விவரம் வருமாறு :

மாயூர யுத்தம்

‘ஆயிரமானாலும் மாயூரமாகாது’ என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மயிலாடுதுறை பகுதி வளர்ச்சியில் பின் தங்கி இருப்பதை மாற்றுவதற்கான முயற்சிகளை மிகத்தீவிரமாக முன்னெடுக்கிறார்.  ‘மாயூர யுத்தம்’ என்ற இணையக்குழுவை உருவாக்கி, 30 ஆண்டுகளுக்கு மேலாக புறக்கணிப்படும் மயிலாடுதுறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இளைஞர்கள் உட்பட ஏராளமானோரை ஈர்த்திருக்கும் மாயூர யுத்தம், மயிலாடுதுறை வளர்ச்சிக்கான மக்கள் இயக்கமாக உருவாகி வருகிறது. தனி மாவட்டம், புதிய பேருந்து நிலையம், சுற்றுச்சாலை, உயர் மருத்துவ வசதி உள்ளிட்ட மயிலாடுதுறை பகுதி மக்களின் பல்லாண்டு கால கனவுகளை, நனவாக்கும் பணிகளை இந்த இயக்கம் முன்னெடுக்கிறது.

பெற்றோரைக் கொண்டாடுவோம்

‘பெற்றோரைக் கொண்டாடுவோம்’ என்பதை தன் வாழ்வின் அழுத்தமான முழக்கமாக முன் வைத்து வரும் கோமல் அன்பரசன், அதனை ஓர் இயக்கமாக மாற்றும் எண்ணமும் கொண்டுள்ளார். எண்ணற்ற இன்னல்களுக்கிடையே பெற்று, வளர்த்து, ஆளாக்கும் பெற்றோரை, அவர்கள் வாழும் போதே போற்றி, பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை இளைய தலைமுறைக்கு உணர்த்தும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். தந்தையர் தினம், அன்னையர் தினம் மட்டுமின்றி, வாழ்நாள் முழுதும் பெற்றவர்களைக் கொண்டாடி மகிழ்வது என்ற எண்ணத்தை விதைக்கும் முயற்சிகளிலும் கோமல் ஈடுபட்டுள்ளார்.

 ஆனந்தம்

ஏழை மாணவ- மாணவியரின் உயர்கல்வி கனவை நனவாக்கி வரும் சென்னை, ஆனந்தம் இளைஞர் நல அமைப்பின் அறங்காவலர்களில் ஒருவராக இருக்கிறார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று, 12 ஆம் வகுப்பிற்குப் பிறகு படிக்க வசதி இல்லாதவர்களைத் தேர்வு செய்து 100% கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது ‘ஆனந்தம்’.   படிக்க பணம் வழங்குவது மட்டுமின்றி அவர்களுக்கு சுய முன்னேற்ற பயிற்சிகள், படித்து முடித்த பின்னர் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டுதல் போன்ற பணிகளையும் செய்து வருவது ஆனந்தம் அமைப்பின் தனிச்சிறப்பு.

காவிரி கிராம மேம்பாட்டு அமைப்பு

காவிரி கிராம மேம்பாட்டு அமைப்பை உருவாக்கி, முன்மாதிரி கிராமங்களை ஏற்படுத்தும் முயற்சிகள் முன்னெடுத்து வருகிறார். கிராமங்களைத் தத்தெடுத்து, அவற்றில் அரசு மற்றும் தனியார் உதவியுடன் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தருதல், மரங்களை வளர்த்து பசுமைச் சூழலை உருவாக்குதல் போன்ற பணிகள் காவிரி கிராம மேம்பாட்டு அமைப்பின் முக்கிய நோக்கம்.

-இப்படி இயன்ற வரை மற்றவர்களுக்குப் பயன்படுவதை இயல்பாகவும், வாழ்ந்து, வாழ்வித்தலை இலக்காகவும் கொண்டிருக்கிறார் கோமல் அன்பரசன்!

(Visited 144 times, 1 visits today)