எழுத்து

எழுத்து

11வது வயதில்   எழுத்துத்துறைக்கு   அறிமுகமானவர் கோமல் அன்பரசன். பள்ளியில் படிக்கும் போதே எழுதத் தொடங்கினார். கல்லூரியில் படித்தபோது 19வது வயதில்,  “சூரியப்பார்வைகள்” என்ற தனது முதல் நூலை கொண்டுவந்தார். புதிய சிந்தனைகளுடன் , அழுத்தமான கருத்துகள் நிறைந்த  அந்த புத்தகம் இவருக்குப் பரவலாக பாராட்டு பெற்றுத் தந்தது.

பாடமான இதழியல் நூல்

நடைமுறை இதழியலை அழகாக படம் பிடிக்கும்  வகையில் கோமல் அன்பரசன் எழுதிய “செய்திகள்…நிஜமும்,நிழலும்” என்ற புத்தகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அச்சு ஊடகம், காட்சி ஊடகம் உட்பட ஊடகத்துறையின் அத்தனை வடிவங்கள் பற்றியும் தமிழில் வெளிவந்த முதல் இதழியல்  நூல் அதுதான். “இதழியல் துறையில் வெற்றி பெற விரும்பும் அத்தனை பேரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது” என ஆனந்த விகடன் இதழில் எழுத்தாளர் சுஜாதா பாராட்டி எழுதியிருந்தார்.

தற்போது இந்நூல், பல கல்லூரிகளில் இதழியல் மாணவர்களுக்கு பாடப்புத்தகமாகவும், பாடம் சாராத பயிற்சி  நூலாகவும்(Non Textual Book) வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் இதழியல் பயிலரங்குகளில் இன்றும்  இந்நூல் முக்கிய இடம் பிடிக்கிறது.  திருப்பூர் தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட சிறப்பான அமைப்புகளிடமிருந்து இந்த புத்தகம் விருதுகளைப் பெற்றுள்ளது.

உலுக்கிய வழக்குகள்

விகடன் பிரசுரத்தால் வெளியிடப்பட்ட கோமல் அன்பரசனின் நூல் ‘கொலை, கொலையாம்…காரணமாம்…’. தமிழ்நாட்டை உலுக்கிய வழக்குகளை, அதன் அரசியல் மற்றும் சமூக வரலாற்றுப் பின்னணியோடு முழுமையாக ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ள இந்நூல், விரைவில் சட்டப்பல்கலைக்கழகத்தின் பாட புத்தகமாக இருக்கிறது.  “Historical Cases in Tamilnadu”என்ற பெயரில் ஆங்கிலத்திலும் மொழிப்பெயர்க்கப்பட்டு வருகிறது.

‘சாகித்ய அகடமி’ விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் இப்புத்தகத்திற்கு வழங்கிய அணிந்துரையில், “நண்பர் கோமல் அன்பரசன் எழுதிய இந்நூலில் உள்ள, தமிழகத்தைக் குலுக்கிய 25 வழக்குகளின் செய்திகளை வாசித்து வரும்போது, மனதளவில் நான் பெரிதும் பாதிக்கப்பட்டேன். இது சுவாரசியமான வாசிப்புக்கான புத்தகம் மட்டுமே அல்ல. வாசித்தால் உறக்கத்தைப் பறித்துக் கொள்ளும் புத்தகம். வாசித்து, கண் கலங்கிதொண்டை அடைக்க நின்றிருந்தேன் நான். பொறுப்புடன் தகவல்களைச் சேகரித்து, அறத்தின் பால், உண்மையின் பால், நீதியின் பால் நின்று, நடுவுநிலைமையுடன் இந்த நூலை எழுதியிருக்கிறார் கோமல் அன்பரசன். இதுபோன்ற நூல்கள் எழுதப்படவும், வாசிக்கப்படவும் வேண்டும். சமூகத்தில் குற்றம் புரிபவர்களின் அசல் முகம் துலங்கித் தெரிய வேண்டும். கோமல் அன்பரசனின் நடுநிலையான  இந்த முயற்சிக்கு, ஆய்வுக்கு, பதிவுக்கு, பாராட்டுகள்… வாழ்த்துகள்…” என்று கூறியிருக்கிறார்.

காட்சி ஊடக வரலாறு

மண்ணின் மைந்தர்களின் வெற்றி வரலாறு என்ற பெயரில் வெளியான கோமல் அன்பரசனின்  இன்னொரு நூல்  “ மாண்புறும் மக்கள்” . பல்வேறு துறை சார்ந்த சாதனையாளர்களைப் பற்றி சிறப்பாக எடுத்து காட்டியது.

தமிழ்நாட்டில் தொலைக்காட்சி ஊடகத்தின் வளர்ச்சியை விறு,விறுப்பான நடையில், நடுநிலையோடு பேசும் நூல் ஒன்றையும் இவர் எழுதி உள்ளார். கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ‘கலாநிதி மாறன்’ எனும் இந்த நூலில், கண்ணெதிரே நடந்த வரலாற்றை, சமரசங்கள் ஏதுமின்றி, மிகத்துணிவாக , தெளிவாக ஒரு  புதினத்தைப்போல பதிவு செய்திருக்கிறார் கோமல் அன்பரசன்.

அப்பா, அம்மாவுக்கு….

இதேபோல், “அன்புள்ள அப்பா, அம்மாவுக்கு…” என்ற கோமல் அன்பரசனின் மற்றொரு புத்தகம், மாறுபட்ட கோணத்தில் அமைந்திருக்கிறது.  தனது தந்தையின் மணிவிழாவையொட்டி, கோமல் வெளியிட்ட இந்நூல், குடும்பத்திற்காக அப்பாக்கள் படும் இன்னல்களை , இலக்கியத்தரத்தோடு அற்புதமாக சொல்லும் தொகுப்பாக இருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அப்பாவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் மிக நேர்த்தியான நூலாக இது அமைந்திருக்கிறது.

பள்ளிக்கூட காலத்திலிருந்து 20 ஆண்டுகளாக எழுதும் கோமல் அன்பரசன், தமிழின் நம்பிக்கை அளிக்கும் இளம் எழுத்தாளர்களில் ஒருவராக திகழ்கிறார் !

(Visited 127 times, 1 visits today)