கோமல் வாழ்க்கைக்குறிப்பு

கோமல் இரா.க.அன்பரசன்
எழுத்தாளர் – ஊடகவியல்ஆலோசகர் – சமூக செயற்பாட்டாளர் என்ற தளங்களில் இயங்குபவர். அரசியல், வரலாறு, வாழ்வியல், ஊடகவியல் துறைகளில் 20 நூல்களை எழுதியிருக்கும் விருதுகளைப் பெற்ற எழுத்தாளர். அனைத்து முன்னணி நாளிதழ்களின் தலையங்கப் பக்கங்களில் தொடர்ந்து எழுதி வருபவர்.
மாணவப் பத்திரிகையாளராக தொடங்கி தொலைக்காட்சி ஊடகங்களில் உச்சப்பதவிகளை மிக இளம் வயதிலேயே வகித்தவர். தமிழ் தொலைக்காட்சி ஊடகத்துறையில் குறிப்பிடத்தக்க முன்னெடுப்புகளைச் செய்ததோடு, நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்களையும் உருவாக்கியவர்.
எழுத்து, ஊடகம் தாண்டி தீவிர சமூகச் செயற்பாட்டாளராக இயங்கி வருபவர். ஏராளமான இளைஞர்களோடு டெல்டா மாவட்டங்களில் இயங்கும் ‘காவிரி’ அமைப்பின் நிறுவனர். வசதியற்ற கிராமப்புற மாணவர்களின் உயர் கல்விக்கு 100% உதவித் தொகை வழங்கும் சென்னை ஆனந்தம் அமைப்பின் அறங்காவலர்.
சொந்த ஊரான மயிலாடுதுறையின் முன்னேற்றத்திற்கான பல்வேறு சேவை அமைப்புகளுடன் இணைந்து ‘மாயூரயுத்தம்’ இயக்கத்தை நடத்துபவர்.
ஊரே பேரானது!
கோமல் அன்பரசன் மயிலாடுதுறைக்குப் பக்கத்தில் உள்ள கோமல் கிராமத்தில் 1980ல் பிறந்தவர். அரசியல் அறிவியலில் முதுநிலைபட்டம் (எம்.ஏ) பெற்றவர். முனைவர்( டாக்டர்) பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டிருக்கிறார். ஆறாம் வகுப்பு படிக்கும் போதே பத்திரிகைகளுக்கு துணுக்கு, கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கியவர். 13 வயதில் ‘கவின்’ என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார். பள்ளியின் பிராத்தனைக் கூட்டங்களில் கோமல் தயாரித்து, கணீரென வாசித்த செய்தி அறிக்கைகள் தனி கவனம் பெற்றன. 15 வயதில் வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். வானொலி மாணவர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
ஆசிரியரான மாணவர்!
கல்லூரியில் மாணவர் இதழான ‘இளந்தூது’வுக்கு ஆசிரியராக இருந்தார். இளந்தூதுவுக்கு தமிழ் எனும் அணியாரம் பூட்டி அழகு பார்த்தார். கல்லூரிக்குள் எல்லாருக்கும் எளிதாக அந்தப் பத்திரிகை சென்று சேர புதுப்புது உத்திகளை கையாண்டதோடு, பெரிய இதழ்களைப் போல இலவச இணைப்பெல்லாம் கொடுத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, ஆசிரியராக, நிர்வாகியாக கடனில் இருந்த அந்தப் பத்திரிகையைப் பொருளாதார ரீதியிலும் வெற்றி பெற வைத்தார். கலையோ, இலக்கியமோ எதுவானாலும் அது மக்களுக்காகவே என்ற அழுத்தந்திருத்தமான எண்ணம் கொண்டவர் கோமல். அதனால், “இலக்கியம் பேசுபவர்கள், வேறு எதற்கும் ஆகாதவர்கள்” – என்ற வாதத்தையும் முறியடிக்க, கல்லூரிக்குள்ளும் வெளியிலும் சேவை அமைப்புகளோடு “இளந்தூது”வை இணக்கமாக்கினார்.
கல்லூரியில் படிக்கும் போதே, உள்ளூர் பத்திரிகையான ‘நம்ம ஊரு செய்தி’ உள்ளிட்ட சில இதழ்களில் பகுதி நேர செய்தியாளராக பணியாற்றினார். பரீட்சை எழுதுவதை விட அக்கறையோடு சமூக பிரச்சினைகளைப் பற்றி பத்திரிகைகளில் எழுதினார். அதேதுடிப்போடு சென்னை வந்து, பத்திரிகை பணிகளிலும் பதிப்பக பணிகளிலும் இயங்கினார். இதழ், நூல் உருவாக்ககலைகளில் தேர்ச்சி பெற்றார்.
200 சிறப்புப்பார்வைகள் – 500 சிறப்புத் தொகுப்புகள்!
தமிழில் முதலிடத்திலுள்ள சன் டீவியின் செய்திப் பிரிவில் 5 ஆண்டுகள் செய்தியாளராக, துணை ஆசிரியராக, பொறுப்பாசிரியராக எழுதி குவித்தார். சன் டீவி செய்திகள் உச்சத்திலிருந்த போது, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி, அன்றைக்கு பெருங்கவனம் பெற்றிருந்த சிறப்புப் பார்வை தொகுப்பை 4 ஆண்டுகள், ஏறத்தாழ 200 தலைப்புகளில் எழுதி வழங்கினார். அன்றாட செய்திகளுக்கு மத்தியில் அரசியல், அறிவியல், மருத்துவம், வாழ்வியல் என அனைத்து கூறுகளிலும் 500 க்கும் மேற்பட்ட சிறப்பு செய்தித் தொகுப்புகளை எழுதினார்.
ஊடகத்தில் தமிழ்ப்பணி!
தமிழுக்காக, தமிழரின் அடையாளங்களோடு தொடங்கப்பட்ட மக்கள் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் பொறுப்பு கோமலைத் தேடி வந்தது. தமிழ்நாட்டு ஊடக வரலாற்றில் முதன் முறையாக, மிக இளம் வயதில் செய்திப் பிரிவுக்குத் தலைமையேற்றார். செய்தியோடு எழுந்து, செய்தியோடு சாப்பிட்டு, செய்தியோடு உழன்று, செய்தியோடு உறங்கினார். அற்புதமான செய்திக் குழுவைக் கட்டியமைத்தார். பொலேரென சொல்லும் துணிச்சல், புதியசிந்தனைகள், நடுநிலைமை, நல்ல தமிழ் என குறுகிய காலத்தில் மக்கள் தொலைக்காட்சி செய்திகள் பேசப்பட்டன. தமிழ் வளர்ச்சிக்காக அந்த தொலைக்காட்சி செய்த பணிகளில் கோமலுக்கு மிக முக்கிய பங்குண்டு. இன்றைக்கு மற்றத் தொலைக்காட்சிகளால் பின்பற்றப்படும் ‘நேரலை’, ‘அண்மைச்செய்தி’ போன்ற எண்ணற்ற தமிழ்ச் சொற்களை ஊடக உலகிற்குத் தந்தவர் கோமல்.
தமிழ்நாட்டில் அதுவரை அச்சு ஊடகத்தில் மட்டுமே இருந்த புலனாய்வுச் செய்திகளை , முதன் முறையாக காட்சி ஊடகத்திற்கு கொண்டு வந்த பெருமை கோமல் அன்பரசனுக்கு உண்டு. தொலைபேசி ஒட்டுக்கேட்பு, உயர் அதிகாரிகளின் அதிகார அத்து மீறல்கள், கல்லூரிகளின் கட்டண கொள்ளை என ஆதாரங்களோடு இவர் வெளியிட்ட செய்திகள் தமிழகத்தை அதிரவைத்தன.
இளம்வயதில் உச்சப் பதவிகள்!
தமிழ்காட்சி ஊடகத்துறையில் முதன்முறையாக கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களை அடையாளங்கண்டு , பட்டைத் தீட்டி புத்தம் புது பத்திரிகையாளர்களை உருவாக்கினார். தமிழ் ஊடகத்தில் முதன் முறையாக பணியாளர்களுக்காக “மக்கள்வணக்கம்” என்றவளாக இதழை நடத்தினார். 32 வயதிற்குள் இதையெல்லாம் செய்த கோமல் அன்பரசன், மக்கள் தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ) 2012 ல் பொறுப்பேற்றார். இந்திய ஊடகங்களில் முதன் முறையாக இத்தனை இளம் வயதில் உச்ச பதவியான தலைமை நிர்வாகப் பணி ஏற்றவர் இவர் தான். நட்டத்தில் இருந்த அத்தொலைக்காட்சியை மூன்றாண்டுகளுக்கு மேலாக லாபத்துடன் நடத்தினார்.
அதன் பிறகு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியராக (மேனேஜிங்எடிட்டர்) பணியாற்றி, அங்கே சரியான நிர்வாக கட்டமைப்பை உருவாக்கினார். ‘கதைகளின் கதை’ போன்ற தலைப்புகளுடன் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்ற செய்தி சார்ந்த பல நிகழ்ச்சிகளையும் அறிமுகப்படுத்தினார். தற்போது ‘கேமீடியா’ என்ற நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். நிறுவனங்கள், அமைப்புகள், தனிநபர்களுக்கான ஊடகத்துறை ஆலோசனைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.மேலும் காவிரி டெல்டா மக்களின் குரலை எதிரொலிக்கும் ‘காவிரிக்கதிர்’ என்ற பத்திரிகையையும் 2011ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்..
ஊடகப்பணியை நேசித்து இயங்கும் கோமல், எழுத்தாளராகவும் முத்திரைபதிப்பவர். ஊடகவியல், வாழ்வியல் நூல்களை எழுதினாலும் அரசியலும் வரலாறும் இவருக்கு மிகவும் பிடித்ததுறைகள்.
கல்லூரியிலேயே எழுதிய முதல் புத்தகம்!
கல்லூரியில் படித்த போது 19வதுவயதில், “சூரியப்பார்வைகள்” என்ற தனது முதல் நூலை எழுதினார். புதிய சிந்தனைகளுடன் , அழுத்தமான கருத்துகள் நிறைந்த அந்த புத்தகம் இவருக்குப் பரவலாக பாராட்டு பெற்றுத்தந்தது. நடைமுறை இதழியலைப் படம் பிடித்த கோமல் அன்பரசனின் “செய்திகள்…நிஜமும், நிழலும்” என்ற புத்தகம், அச்சு மற்றும் காட்சி உட்பட ஊடகத்துறையின் அத்தனை வடிவங்கள் பற்றியும் தமிழில் வெளிவந்த முதல் நவீன ஊடகவியல் நூல். “இதழியல் துறையில் வெற்றி பெற விரும்பும் அத்தனை பேரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது” என ஆனந்த விகடன் இதழில் எழுத்தாளர் சுஜாதா பாராட்டி எழுதியிருந்தார். இந்நூல், பல கல்லூரிகளில் இதழியல் மாணவர்களுக்கு பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது.
அரசியல், சமூக, வரலாற்று நூலாசியர்!
தமிழகத்தின் நீதித்துறையில் முக்கிய பங்காற்றிய ஆளுமைகள் பற்றிய இவரது ‘தமிழ்நாட்டு நீதி மான்கள்’ என்ற புத்தகம் தமிழின் மிகச்சிறந்த பதிவு. ‘ சென்ற 50 ஆண்டு காலத்தில் மறைக்கப்பட்ட ஆளுமைகளை இந்நூல் நினைவூட்டுகிறது. பல ஆளுமைகளைப் புத்தம் புதிதாக அறிமுகப்படுத்துகிறது. அவர்களின் கொடை இல்லாமல் நாம் இன்றிருக்கும் தமிழகம் இல்லை. இந்நூலின் தனிச்சிறப்பே இது அன்றைய அரசியல் உள்ளிட்ட வெவ்வேறு துறைகளைத் தொட்டுச் செல்வதுதான்’ என்று எழுத்தாளர் ஜெயமோகன் பாராட்டியுள்ளார்.
விகடன் பிரசுரத்தால் வெளியிடப்பட்ட கோமல் அன்பரசனின் முக்கியமான நூல் ‘கொலை, கொலையாம்… காரணமாம்…’. தமிழ்நாட்டை உலுக்கிய வழக்குகளை, அதன் அரசியல் மற்றும் சமூக வரலாற்றுப் பின்னணியோடு முழுமையாக ஆய்வு செய்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. “இந்நூலில் உள்ள, தமிழகத்தைக் குலுக்கிய வழக்குகளின் செய்திகளை வாசித்து வரும் போது, மனதளவில் நான் பெரிதும் பாதிக்கப்பட்டேன். இது சுவாரசியமான வாசிப்புக்கான புத்தகம் மட்டுமே அல்ல. வாசித்தால் உறக்கத்தைப் பறித்துக் கொள்ளும் புத்தகம். வாசித்து, கண்கலங்கி, தொண்டை அடைக்க நின்றிருந்தேன் நான். பொறுப்புடன் தகவல்களைச் சேகரித்து, அறத்தின்பால், உண்மையின்பால், நீதியின்பால்நின்று, நடுவு நிலைமையுடன் இந்தநூலை எழுதியிருக்கிறார் கோமல் அன்பரசன். இது போன்ற நூல்கள் எழுதப்படவும், வாசிக்கப்படவும் வேண்டும். சமூகத்தில் குற்றம் புரிபவர்களின் அசல் முகம் துலங்கித் தெரிய வேண்டும்” என்று ‘சாகித்ய அகடமி’ விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கூறியிருக்கிறார்.
தந்தையின் மணி விழாவை யொட்டி, கோமல் வெளியிட்ட “அன்புள்ள அப்பா, அம்மாவுக்கு…” என்ற நூல், குடும்பத்திற்காக அப்பாக்கள் படும் இன்னல்களை , இலக்கியத் தரத்தோடு சொல்லும் தொகுப்பாக இருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அப்பாவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் மிக நேர்த்தியான நூல் என தமிழ்நாட்டின் முக்கியமான ஆளுமைகள் பலர் பாராட்டியுள்ளனர். ‘தென்கச்சி – கதை ராஜாவின் கதை’ என்கிற கோமல் அன்பரசனின் நூல், தமிழ்ச் சமூகத்தைப் பெரிதும் கவர்ந்தகதை சொல்லியான தென்கச்சி சுவாமி நாதனின் அற்புதமான வாழ்க்கையைப் பேசும் நூல். வழக்கமான வாழ்க்கை வரலாற்று நூலாக இல்லாமல், அவரது கதைகளின் வழியாக பயணிக்கும் வித்தியாசமான நூலாக அமைந்துள்ளது.
பிரபல ஆளுமைகளைப் பற்றி உலகம் பெரிதும் அறிந்திராதவற்றைக் கொண்டு தினத்தந்தியில் கோமல் எழுதிய ‘ரகசியமான ரகசியங்கள்’ என்ற தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே பெயரில் நூலாகவும் வெளிவந்திருக்கிறது. காவிரி பிரச்சினை பற்றிய ஆய்வினை மேற்கொண்ட கோமல், அதனை ‘காவிரி கண்ணீர்’ என்ற பெயரில் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடராக எழுதினார். இத்தொடரை ‘காவிரி அரசியல் – தமிழகம் வஞ்சிக்கப்பட்ட வரலாறு’ என்ற பெயரில் இந்து தமிழ்திசை பதிப்பகம் நூலாக வெளியிட்டிருக்கிறது. ‘இந்நூல் தமிழ்நாட்டின் முக்கியமான சமூக, வரலாற்று ஆவணம்’ என்று சாகித்ய அகடமியின் ஆலோசகர் எழுத்தாளர் சா.கந்தசாமி குறிப்பிட்டுள்ளார்.
இவை தவிர, ‘20 ஆம் நூற்றாண்டில் சாதித்த தமிழர்கள்’, ‘அறிவோம் மயிலாடுதுறை’, ‘வேலை வேண்டுமா? ’‘மாண்புறும் மக்கள்’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.
பள்ளியிலிருந்து தொடங்கிய சேவை!
“வாழ்தல், வாழ்வித்தல் வல்லமை” என்று வாழ்வின் இலக்கை தனித்துவமாக வகுத்துக் கொண்டிருக்கும் கோமல் அன்பரசன், பள்ளிக்கூட காலத்தில் செஞ்சிலுவை சங்கம், சாரணர் அமைப்பு ஆகியவற்றில் சேவையைத் தொடங்கி, சாரணர் படைத்தலைவனாக அணி நடத்தியவர். பள்ளிக்கு வெளியிலும் பதின் வயதிலேயே ஆக்கப்பூர்வமான பணிகளில் இயங்கினார். 90- களில் தீவிரமாக இருந்த அறிவொளி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அனுபவப்பாடம் படித்த மேதைகளான கிராமத்து மனிதர்களுக்கு ‘ஆனா, ஆவன்னா’ சொல்லித்தருவது அத்தனை எளிதல்ல. தெரு விளக்கில் தங்களின் கல்லாமை வெளிச்சத்திற்கு வருவதை விரும்பாதவர்களின் வீடுகளுக்கே சென்று, அவமதிப்புகளை எதிர்கொண்டு, கிராமத்தில் எல்லாரையும் எழுத, படிக்க வைத்தார்.
அறிவொளி இயக்கத்தின் தொடர்பால் அவருக்கு ‘துளிர் இல்லம்’ கிடைத்தது. அறிவியல் பத்திரிகையான “துளிர்” இதழின் நல்ல முயற்சியாக அமைந்தவை விஞ்ஞானிகளின் பெயர்களிலான துளிர் இல்லங்கள். அவற்றை ஆசிரியர்களே முன்னின்று உருவாக்கி , இயக்கி வந்த நாட்களில், மாணவராக இருந்த கோமல் அன்பரசன், ஒரு துளிர் இல்லத்தை அமைத்தார்.
ஊடகத்தின் மீதிருந்த காதலால், வானொலியைக் கண்டுபிடித்த மார்கோனியின் பெயரைத் துளிர் இல்லத்திற்கு சூட்டினார். ஏற்கனவே கோமல் அன்பரசன் நடத்தி வந்த மாணவர் மன்றம், துளிர் இல்லமானது.
மக்களுக்கான செயல்பாடுள்ளதாக மார்கோனி துளிர் இல்லம் திகழ்ந்தது. மருத்துவமுகாம்கள் நடத்தியது. ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வாங்கி கொடுத்தது. இலவசமாக டியூசன் சொல்லிக் கொடுத்தது. திருவிழாக்களில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தியது. கோடை காலங்களில் மக்களுக்கு நீரும் மோரும் கொடுத்தது. குஜராத் பூகம்பத்திற்கு நிதி வசூலித்து அனுப்பியது.
மொழியாக…. விழியாக….
மேல்நிலைக் கல்விக்காக அன்பரசன் மயிலாடுதுறைக்கு வந்த போது, “ படிக்க வேண்டும் : மற்றவர்களுக்குப் பயன்படவும் வேண்டும்” என்ற எண்ணத்தில் பார்வையற்றோர் மாணவர் விடுதியில் தங்கினார். அந்த விடுதியில் இருந்த கண்ணில்லாத மாணவர்களுக்கு விழியாகவும் மொழியாகவும் இருந்தார். கல்லூரியில் ரோட்டரி அமைப்பின் இளைஞர் பிரிவான ரோட்டராக்ட்டில் சேர்ந்து செயல்பட்டார். அதில் பயனுள்ள பணிகளின் உச்சமாக மாநில அளவில் இளைஞர்களை திரட்டி , மிகப்பெரிய விழிப்புணர்வு முகாம் நடத்தினார்.
ரோட்டரி சமுதாய குழுமத்தைச் சொந்த ஊரான கோமல் கிராமத்திற்கு அறிமுகப்படுத்தினார். ரோட்டரி என்ற சொல்லே, மேல்தட்டு மக்களுக்கானது என்று அதுவரை எண்ணியிருந்த ஊர்க்காரர்கள், அதன் பணிகள் பலவற்றைப் பாராட்டினார்கள். தமிழகத்தின் சிறந்த ரோட்டரி சமுதாய குழுமத்திற்கான விருதுகளையும் அந்த அமைப்பு பெற்றது.
ஊருக்கு நல்லது செய்யும் ‘காவிரி’!
மாணவப்பருவத்தில் இருந்தே சேவைப் பணிகளில் ஆர்வமிக்க கோமல், தமிழ்நாட்டின் உயிர் நதியான காவிரி ஆற்றின் மீதுமட்டுமல்ல; காவிரி என்ற சொல்லின் மீதே தனி ஈர்ப்பு கொண்டவர். அதனால், ‘காவிரி’ அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார். ‘ஊருக்கு நல்லது செய்வோம்’ என்ற முழக்கத்தோடு இதன்மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் நற்பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஏராளமான இளைஞர்களும் மாணவர்களும் ‘காவிரி’ அமைப்பில் இணைந்து செயல்படுகிறார்கள். கிராமப்புற மாணவர்கள், இளைஞர்கள், பெண்களின் முன்னேற்றத்திற்கான பணிகளை இதன்மூலம் செய்யப்படுகின்றன.
காவிரி அமைப்பின் கீழ் செயல்படும் Kaviri Village Development Society யின் வழியாக டெல்டா கிராமங்களில் ஏழை மாணவர்களுக்காக ‘கற்றலின் இனிமை மற்றும் செயல்திறன் மேம்பாட்டுமையங்கள்’ நடத்தப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் உதவியுடன் அடிப்படை கட்டமைப்பு வசதிகளைச் செய்து தருதல், பசுமைச் சூழலை உருவாக்குதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
உயர்கல்வி கனவை நனவாக்கும் ‘ஆனந்தம்’!
வசதியற்ற மாணவ- மாணவியரின் உயர்கல்வி கனவை நனவாக்கி வரும் சென்னை, ஆனந்தம்– இளைஞர் நல அமைப்பின் அறங்காவலராக கோமல் இருக்கிறார். 12 ஆம் வகுப்பிற்குப் பிறகு படிக்க வசதி இல்லாத அரசுப்பள்ளி மாணவர்களைத் தேர்வு செய்து 100% கல்வி உதவித்தொகையுடன் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட எல்லா வகையான உயர் படிப்புகளிலும் படிக்க வைக்கிறது ஆனந்தம். பட்டதாரிகள் என்பதைத் தாண்டி சமூகத்திற்குப் பயனுள்ள, நல்ல மனிதர்களை உருவாக்குவதை முதன்மை நோக்கமாக கொண்டு, அவர்களுக்கு வாழ்வியல் பயிற்சிகளையும் வழங்கி, வேலைவாய்ப்புக்கும் வழிகாட்டுவது ஆனந்தம் அமைப்பின் தனிச்சிறப்பு.
மயிலாடுதுறைக்கான மாயூரயுத்தம்!
‘ஆயிரமானாலும் மாயூரமாகாது’ என்று புகழப்படும் மயிலாடுதுறையின் வளர்ச்சிக்காக சேவை அமைப்புகளுடன் சேர்ந்து கோமல் அன்பரசன் உருவாக்கிய மக்கள் இயக்கம் தான் ‘மாயூரயுத்தம்’. தொடர்ந்து பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்படும் மயிலாடுதுறை பகுதியின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதே இதன் நோக்கம். அதில் முக்கியமாக வரலாற்று மற்றும் புவியியல் ரீதியாக எல்லா விதமான தகுதியும் கொண்ட மயிலாடுதுறையைத் தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வென்றெடுத்தவர். இதற்காக ‘மாயூரயுத்தம்’ மற்றும்‘ ஏன் கேட்கிறோம் மயிலாடுதுறை மாவட்டம்?’ ஆகிய நூல்களை எழுதி அவற்றை ஆயுதமாக்கி களத்தில் இயங்கியவர்.
விவசாயத்திலும், மரம்வளர்ப்பதிலும் ஆர்வம் கொண்டவர் கோமல் அன்பரசன். இவரது மனைவி காயத்ரி அன்பரசன். மகள் இனியா.